×

சீதளாதேவி

நன்றி குங்குமம் ஆன்மிகம்

வட இந்தியாவில் ‘சீதல் மாதா’ என்றும் சீதளாதேவி என்றும் அழைக்கப்படும் ஸ்ரீமஹா மாரியம்மன் தன் கைகளில் சூலம், கபாலம், உடுக்கை, கத்தி, இவைகளைத் தாங்கிக்கொண்டு, கரண்டம் என்னும் கிரீடமும் தன் இருகாதுகளிலும் தாடங்கம் என்ற ஆபரணத்தையும் தரித்துக்கொண்டு வேப்பமரத்தடியில் அமர்ந்திருப்பாள். சில ரூபங் களில் கையில் துடைப்பமும், கலசமும் ஏந்திக்கொண்டு, கழுதை வாகனத்தில் அமர்ந்திருப்பாள். இந்த சீதளா தேவியை சீதளாஷ்டகம் அல்லது சீதளா ஸ்தோத்திரம் சொல்லி வணங்கிவர அன்னையின் அருள் உண்டாகும். இந்த சீதளா ஸ்தோத்திரம் அக்னி புராணத்தில் அமைந்துள்ளது. சீதளா ஸ்தோத்திரத்தை ஜுரம் உள்ளவர்கள் படித்தால் உடலில் குளிர்ச்சி ஏற்பட்டு ஜுரம் நீங்கும்.
உடலில் கட்டி, கொப்புளம் போன்ற வெப்பநோய் உடையவர்கள் ஜபித்துவர, அன்னையின் அருளால் கொப்புளம் நீங்கி உடல் ஆரோக்கியமாகும்.

அம்மை நோயால் கண்பார்வை இழந்தவர்கள், முகம் கறுத்தவர்கள், உடலின் பிற பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்கள், இந்த ஸ்தோத்திரத்தால் தினமும் அன்னையைத் துதித்து வர, விரைவில் நோய் நீங்கி குணமடைவர். `சீதளம்’ என்றால் குளுமை என்பது பொருள். தன்னைச் சரணடைந்த வெம்மைநோய் கண்டவர்களைக் குளிர்வித்து, அந்த நோய்களிலிருந்து அவர்களை விடுவித்து சுகமளிப்பவள் சீதளாதேவி.

‘சீதளம்’ என்பது வடமொழிச்சொல். அதனையே தமிழில் ‘மாரி’ என்றழைத்து, மாரியம்மனாகத் தென்னகத்தில் போற்றப்படுகிறாள். தன் பக்தர்களுக்குத் தாயாகவும், தந்தையாகவும், குருவாகவும் எல்லாமுமாக விளங்குபவள். தன்னைத் துதிப்பவர்களுக்கு ஆனந்தத்தைத் தருபவள். எந்த நோய் வந்தாலும், மாரியம்மனை வழிபட்டு அவளிடம் முறையிடுவதை நம் முன்னோர் முதல் கடமையாக செய்துவந்தனர். ஏனெனில் அவளே மருந்துகளின் தாய். உண்ணும் மருந்தும் அவளருளால் நோயுற்ற உடலை விரைவில் குணமடையச்செய்யும் என்று நம்பினார்கள். நம்பியவர்களைக் கைவிட்டதில்லை அந்த உலகநாயகி. அளவற்ற பெருங்கருணைத் தாயான மாரியம்மன், வேம்பு வடிவமாகத் திகழ்பவள்.

வேம்பின் அடியிலேயே கோயில்கொள்பவள். அதனால்தான், வைசூரியுற்றவர்களுக்கு வேப்பிலை மருந்தாகத் தரப்படுகிறது. மாரியம்மனை உபாஸிக்கும் பக்தர்களுக்கு, வேப்பிலையே உணவாக விளங்கி வருகிறது. எல்லா மாயங்களையும் கடந்தவள் மாயி. எல்லா பெருமாயங்களையும் தன்னிடம் அடக்கி ஆள்பவள் மகமாயி. அதனால், எந்தவொரு மந்திர தந்திரமும் அவள் பக்தர்களைப் பாதிக்காது.

அவர்களை காத்து, கறுப்பு அண்டாது. பல்லி, ஏவல், சூனியம் பயமுறுத்தாது. சீதளாதேவியைப் போற்றும் சீதளாஷ்டகம், தேவியின் பக்தர்களுக்கு அருட்பிரசாதம். எல்லா வேதங்களுக்கும் ஒப்பான இந்த ஸ்தோத்திரம் படிப்பவர்களை, எந்த நோய்களும் அண்டாது. உடல் நலக்குறைவுற்றவர்கள் படித்தால், அவர்கள் உடல் விரைவில் குணமடையும்.நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் உப்பு, மிளகு, வெல்லம் இவற்றை தங்கள் நோய் தீர வேண்டிக்கொண்டு திருக்குளத்தில் இட, அவர்கள் நோய் விரைவில் குணமாகும். மஞ்சள் வேப்பிலை இரண்டையும் அரைத்து உடலில் பூச சரும நோய்கள் குணமாகும். சீதளா தேவி உடலையும், மனதையும் குளிர்விப்பவள் மட்டுமல்ல, குளிர்ச்சியை விரும்புபவளும்கூட.

அதனால்தான், அவளுக்கு பால்குடம் எடுத்து அபிஷேகம் செய்கின்றனர். மஞ்சள் நீரை அபிஷேகம் செய்து குளிர்விக்கின்றனர். இளநீரும், பானகமும் நிவேதனம் செய்கின்றனர். அவள் ஆலய கர்பகிருஹத்தில் நீரை நிரப்பினால், நம் உடல் குளிர்ச்சியடைவது மட்டுமல்லாமல், உலகம் குளிர மாரியாகப் பொழிவாள் அவள்.நிம்ப சொருபீ, நிஜபோத ரூபி, கும்ப சொரூபி, குண ஞானரூபி, குருமணி ஞான மகமாயீ தேவி என்று அவளை தியானிப்பவர்களைத் தாயாகக் காப்பாற்றுவாள் என்கிறார் ஸ்ரீதுர்க்கை சித்தர். சீதளா தேவி நல்லவர்களுக்கு அருள்வாள். கயவர்களுக்கோ அவள் கானல் நீராகத் தெரிவாள். உலகில் அதர்மங்கள் தலைதூக்கும்போதெல்லாம் இறைவன் அவதரித்து அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டுகிறான்.

திருமால் தசாவதாரங்கள் எடுத்து பக்தர்களைக் காத்ததை விஷ்ணுபுராணத்தில் காணலாம். பரமசிவன் பல அரக்கர்களை அழித்ததையும், முப்புரங்களை எரித்து தேவர்களைக் காத்ததையும் சிவபுராணத்தில் காணலாம். மஹிஷாசுரனையும், சண்ட முண்டர் களையும், சும்ப நிசும்பர்களையும், வதைத்ததை `தேவி மகாத்மியம்’ பெருமையுடன் பேசும். அவ்வாறு ஒருமுறை பூவுலகில், அதர்மம் தலைதூக்கியது.

அரக்கர்கள், தங்களின் குலகுருவான சுக்ராச்சாரியாரின் உதவியுடன், அபிசார பிரயோகம் செய்தனர். தீயசக்திகளான ஏவல்களினால் கடுமையான வெப்பம் தேவர்களைத் தாக்கியது. இதனால் கடுமையான ஜுரத்துடனும், வைசூரி கொப்புளங்களுடனும் தேவர்கள் மிகுந்த துன்பப்பட்டனர். தங்கள் துன்பத்தைத் துடைக்க சர்வேஸ்வரனான பரமசிவனின் திருப்பாதங்களைச் சரணடைந்தனர். தேவர்களைக் காக்கத் திருவுளம் கொண்ட பரமசிவன், தன் யோகத்தில் மூழ்க அவருடைய திருச்சடையிலிருக்கும், சந்திரனிடமிருந்தும், கங்கையிடமிருந்தும் பேரொளி ஒன்று தோன்றியது.

குளிர்ச்சியிலிருந்து தோன்றிய அந்தப் பேரொளியே ‘சீதளாம்பிகை’ என்ற திருநாமத்துடன் தேவர்களைக் காப்பதற்காக அவதரித்தாள். அரக்கர்களின் அபிசார பிரயோகத்தை தடுத்து நிறுத்தினாள். தேவர்கள் மகிழ்ந்தனர். அன்னையைப் பலவாறு துதித்தனர்.நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும் வாழ்வில் எல்லா வளங்களும் நல்கும் இந்த அம்பிகை தமிழகத்திலும் பல இடங்களில் குடிகொண்டுள்ளாள். சென்னையை அடுத்த மடிப்பாக்கத்தில் அமைந்துள்ள குபேர நகர் விஸ்தரிப்பில், ``அன்னை சீதளா தேவியின் ஆலயம்’’ அமைந்துள்ளது. இங்கு குடிகொண்டுள்ள தேவியின் அழகைக் காண கண் கோடி வேண்டும்.    

இங்கு எல்லா நாளும் விசேஷம்தான். ஆடி, தை வெள்ளிக்கிழமைகளிலும், நவராத்திரியிலும், பௌர்ணமி தினங்களிலும் அன்னைக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் சிறப்பான அலங்காரங்களும் நடைபெறுகின்றன. தன் பக்தர்களின் துயர் களைவதில் அவளுக்கு நிகர் அவள்தான். வைத்தியரிடம் செல்லுமுன் ஒரு முறை அன்னையை தரிசித்து சென்றால், உடல் குறை நீங்கி ஆனந்த வாழ்வும், வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று சுகமாக பல்லாண்டு வாழலாம். அன்னையின் பாதம் பணிந்து அவள் அருள் பெறுவோம்.

தொகுப்பு: ரஞ்சனா பாலசுப்ரமணியம்

Tags : Sitaladevi ,
× RELATED பக்தர்கள் கோரிக்கை செம்பனார்கோயில்...