×

பகையை போக்குவார் மொட்ட கலுங்கன் சாமி

ஆவுடையானூர், பாவூர்சத்திரம், நெல்லை

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அடுத்த ஆவுடையானூரில் அருள்பாலிக்கும் மொட்ட கலுங்கன் சாமி, பக்தர்களுக்கு பாதுகாவலனாய் இருந்து காத்தருள்கிறார். தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் மேற்கே மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் கிராமத்தில் சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அண்ணன் தம்பிகள் எட்டு பேரும் ஒற்றுமையுடன் திகழ்ந்தனர். இவர்களது குலதெய்வம் சுடலைமாடன். குளத்தில் தண்ணீர் மறுகால் பாய்வதற்கு இயல்பாக அமையப்பெற்றதே கலுங்கு என்று அழைக்கப்படும். அது கட்டுமானம் இன்றி இருந்தால் அது மொட்ட பகுதி என்று கிராம மக்கள் அழைப்பர். இதனால் இந்த கலுங்கு மொட்ட கலுங்கு என்றும், அவ்விடம் சுவாமி சுடலைமாடன் வீற்றிருந்ததால் மொட்டகலுங்கன் என்றும் அவர் அழைக்கப்பட்டார்.

இருபத்தியோரு பரிவார தெய்வங்கள் இருக்கும். அந்த கோயிலில் அண்ணன் தம்பி எட்டு பேர்களில் கடைசி தம்பி கோயில் பணிகளில் முழு ஈடுபாடுடன் செயல்பட்டு வந்தார். உறவினர் முதல் ஊரார்கள் யாவரும் கடைசி தம்பியை கோயில் தொடர்பாக அணுகினர். இதை பொறுத்துக் கொள்ளாத மூத்த அண்ணனின் மனைவி, எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து அண்ணன் தம்பிகள் ஏழுபேரும், அவர்களின் மனைவிமார்களும் ஒன்று கூடி இனி நம்ம குடும்பத்திலயும், கோயிலிலும் மூத்தவருக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்கின்றனர்.

இதை அன்றிரவு வெளியில் சென்று வீடுதிரும்பிய தம்பியிடம் கூறுகின்றனர். அவர் அண்ணன்மார்களை மீறி எதுவும் செஞ்சதில்ல, அவங்கள மதிக்காம நான் இருந்ததில்ல. சின்னப் பையனா இருக்கும்போது கோயில் வேலைகள நீதாமில பாக்கணும் என்று சொல்லி சொல்லியே சாமிக்கு சுண்ணாம்பு அடிக்கிறதில இருந்து, களபம் சாத்தி, மால சாத்துறது வர நான்தான் பார்த்தேன். எனக்கு சொத்து எதுவும் வேண்டாம். சாமிக்கு பணிவிடை செய்யுறத மட்டும் தடுக்காதீங்க’’ என்று கெஞ்சி பார்த்தும் அவர்கள் கேட்கவில்லை.

மாறாக கோயிலுக்குள் நுழைய தடை விதித்தனர். இனி இந்த ஊரில் இருக்கக் கூடாது என்றெண்ணி அவர் கால்போன பாதையில் பயணித்தார். வழிநெடுக வரும்போது தாகமா இருக்க, இந்த இடத்தில ஏதாவது, ஓடையோ, ஊத்தோ இருந்தா நல்லாயிருக்கும் என்று மனதிற்குள் நினைக்க, மறுகணமே அந்த இடத்தில் சிறிது தூரத்தில் ஓடை தென்பட்டது. அதில் தெளிந்த தண்ணீர் ஓடியது. அதைக்கண்டு பூரிப்பு அடைந்த அவர் அதில் தண்ணீர் அருந்தினார். இது போல் பசியை போக்க, வழிகளில் மா, கொய்யா போன்ற கனிகளின் மரங்கள் தோன்றும் அதை உண்டார். இதெல்லாம் எப்படி நடக்கிறது என்ற வியப்போடு, நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானூர் வந்து சேர்கிறார். அங்கு கூலி வேலைகள் செய்து பிழைத்து வந்தார்.

நாட்கள் நகர்ந்தது. தமிழ் மாதத்தின் கடைசி வியாழக்கிழமை இரவு அவரது கனவில் தோன்றிய மொட்ட கலுங்கன், ‘‘உன்னோட நான் இருக்கேன். நாளை வெள்ளிக்கிழமை. வழக்கம்போல் எனக்கு இங்குள்ள குளத்தின் தென் கரையில் எனக்கு பீடம் அமைத்து பூஜை செய்’’ என்றார். திடுக்கிட்டு விழித்த அவர், ஓ... கண்டது கனவு என்று பெருமூச்சுவிட, பெயர் கூறி அழைத்தது, அருகே நின்ற வேப்பமரத்திலிருந்து அசரிரீ.

‘‘எப்பா, நான் வயித்த நிரப்பவே கடும் பாடு பட வேண்டியிருக்கு, இதுல உனக்கு எங்க பூச பண்ண’’ என்று சொல்ல, பதிலுரைத்தார் மொட்ட கலுங்கன்.
‘‘என் பெயரைச்சொல்லி பீடம் அமைத்து ஒத்த மாலை போட்டு பூஜைவை, ஊரே ஒட்டு மொத்தமா உன்னை தேடி வரும். எனக்கு தேவையானதை அவங்ககிட்ட, நான் கேட்டு வாங்கிக்கிறேன். எனக்கு பணிவிடை செய்வதை மட்டும் நீ பாரு’’ என்றுரைத்தார்.

அதன்படி ஆவுடையானூர் குளக்கரையில் கோயில் உருவானது. ஆண்டுகள் பல செல்ல கோயில் வளர்ந்தோங்கியது. எல்லா சமூகத்தினரும் வழிபட்டு வருகின்றனர். இக்கோயிலில் ராமருக்கு சைவ படையலுடன் முதல் பூஜை. ராமர் அருள் வந்து ஒருவர் ஆடுகிறார். ராமருக்கு மட்டுமே கற்சிலை. மற்ற தெய்வங்களுக்கு மண்ணால் கட்டப்பட்ட பீடம். அதில் ஓவியத்தில் அந்த சாமிகளின் உருவம் தீட்டப்பட்டிருக்கும். இக்கோயிலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆடி மாதம் அமாவாசையொட்டி வரும் வியாழன், வெள்ளி, சனி மூன்று நாட்கள் கொடை விழா நடைபெறுகிறது.

கொடைக்கு இரண்டு தினங்கள் முன்னமே சாமி பீடங்களுக்கு வெள்ளை அடித்து ஓவியம் தீட்டப்படும். அதில் கண் மட்டும் வரையப்படாமல் இருக்கும். கொடை விழா தொடக்கமாக குடியழைப்பு நடைபெறும். அன்றைய தினம் மாலை 6 மணிக்கு கண் திறக்கும் வைபவம் நடக்கும். அப்போதுதான் கண் வரையப்படும். ராமர் கல் சிலையில் மஞ்சள், பச்சரிசி மாவு கொண்டு அலங்கரிக்கப்பட்டிருக்கும் அதில் கண் திறப்பர். தொடர்ந்து ராமருக்கு பழம், தேங்காய் கொண்ட படையலுடன் பூஜை, தொடர்ந்து எல்லா தெய்வங்களுக்கும் நடந்தேறும்.

மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு ராமருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் அவரது சந்நதியில் பொங்கல் இடுகின்றனர். தொடர்ந்து நடைபெறும் மதியவேளை பூஜையில் பரிவார தெய்வங்களுக்கு அசைவப் படையல் வைத்து ஆடு, கோழி, பலியிட்டு பூஜை செய்கின்றனர்.  முதலில் அசரிரீ கேட்ட வேப்பமரம், அய்யன் சாஸ்தா இவர்களுக்கு சைவ படையல்தான்.

கோயிலில் பேச்சி, முன்னடியான், சிவனணைந்தப் பெருமாள், இருளப்பன், வனப்பேச்சி, சக்தி, அரும சண்டாளன், சுடலைமாடன், ஒளி முத்து, பலவேசம், காளி, முண்டன், மெதூர் ராசா, பரண்மாடன், வன்னியராயன், பிச்சை, பிச்சமாடன், பிரம்மசக்தி, இருளாயி, முத்துப்பேச்சி, பலவேசக்காரி, வன்னிச்சி, பிச்சகாலன், பிச்சம்மாள், புலமாடன், புலமாடத்தி, சப்பாணி மாடன் ஆகிய தெய்வங்கள் அருளாட்சிபுரிகின்றனர். மயான பூஜையும், பேய்களுக்கு விருந்தளித்தலும் கொடை விழாவில் நடைபெறுகிறது.

நள்ளிரவு கொடைவிழாவின் உச்ச நேரத்தில், மகுட கலைஞர்கள் ஐந்து பேர், கோயில் பூசாரி உள்பட விழாக்குழுவினர் ஏழு பேர், மொட்ட கலுங்கன், முண்டன் சாமிக்கு ஆடும் நபர்கள் என மொத்தம் பதினைந்து பேர் சுடுகாட்டுக்குச் செல்வார்கள். சாமியாடி தீப்பந்தம் கொண்டு முன்னே செல்வார். மயானம் சென்றதும், அங்கே அடுப்பு கூட்டி சமையல் செய்து, அந்த உணவை மயான பேச்சி, சுடலை, முண்டன் மூவருக்கும் தலை வாழைஇலை விரித்து படைப்பார்கள். அதில் கோழியை அறுத்து ரத்தம் விடுவர்.

அடுத்து பன்றி ரத்தம், அதன் பிறகு மகுடக் கலைஞர் தனது வலது முழங்கையை கத்தியால் சிறிது கீறி, சாமிக்கு வைக்கப்பட்ட உணவின் மீது ஒரு இலைக்கு இருபத்தியோரு சொட்டு என மூன்று இலைக்கும் சேர்த்து அறுபத்து மூன்று சொட்டு ரத்தம் விடுவார். பின்னர், அந்த உணவை முண்டன் சாமிக்கு ஆடுபவர் மேலே தூக்கி போடுவார். உணவிலிருந்து ஒரு பருக்கைகூட கீழே விழுவதில்லை. அதுபோல, ஒருபடி (ஒன்றரை கிலோ) பொரியை வானை நோக்கி எறிகிறார்கள். அதிலும் ஒன்றுகூட கீழே விழுவதில்லை.

பிரம்மனின் ஐந்தாவது தலை வெட்டியபோது அது சிவனின் கையில் ஒட்டிக் கொண்டதாகவும், அதனை விடுவிக்க, மகாவிஷ்ணுவும், சக்தியும் உணவை மேலே போட, தலை கையை விட்டதாகவும், அதன் வழியே இது நடப்பதாகவும், பேய்களுக்கு விருந்தளிக்கிறார் பேயாண்டி சுடலை ஈசன் என்றும் பக்தர்கள் கூறுகின்றனர். இதை `திரள சோறு கொடுத்தல்’ என்று கூறுகின்றனர். இந்த சம்பவம் மயானத்தில் நடக்கும் போது, கோயிலில் பல வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தாலும் அந்த நேரத்தில் நள்ளிரவு பொழுதில் மட்டும் ஒரு மின்சார விளக்கு மட்டும் எரிய, ஒத்த முரசு கொட்ட, குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஊரே திரண்டு கோயிலில் அமைதியாக அமர்ந்திருப்பார்கள்.

பேய்களுக்கு விருந்தளிப்பதை பார்க்க வேண்டும் என்று ஆவலோடு சென்றவர்கள் சாமியின் கோபத்துக்கு ஆளாகியதும் உண்டு என்கின்றனர் அந்த ஊர் மக்கள். சனிக்கிழமை மாலையில் விழா நிறைவாக வாழி பாடுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வில்லிசை கலைஞரும், மகுட கலைஞரும் ஊர் மக்களை வாழ்த்தி பாடுவார்கள். விழா நிறைவில் ஊரைச்சேர்ந்த பெண்கள் வெளியூர்களுக்கு திருமணமாகி சென்றிருப்பார்கள். அவர்கள் கோயில் திருவிழாவில் கண்டிப்பாக கலந்து கொள்வார்கள். அவர்களுக்கு கோயிலின் சார்பில் தேங்காய், பழம் கொடுத்து அனுப்புவார்கள். இது தாயும், தகப்பனாக நின்றருளும் மொட்டகலுங்கன் வழங்கும் சீதனமாக அவர்கள் கருதுகிறார்கள்.

சொத்துத்தகராறில் உடன் பிறந்த பெண்களை அழைக்காமல் விட்டவர்களை, சாமியாடுபவர், அருளோடு இருக்கும் போது, அந்த நபரை அழைத்து, ``என்னப்பா, என் கோட்டைக்கு பெண் கொடியை அழைக்காம வந்திட்டியப்பா, அடுத்த கொடைக்கு அவ குடும்பத்தோடு வரணும் என்ன’’… என்றபடி ஓ…ஓ…வென சத்தமிட்டு திரு நீற்றை கொடுப்பார்.

அண்ணன், தங்கை, தம்பி முதலான குடும்ப உறவுகளை ஒருங்கிணைக்கும் தாயுமானவன் மொட்ட கலுங்கன். கூப்பிட்டால் குரல் கொடுப்பான். வழித்துணையாய் வந்து நிப்பான். சத்ரு பகையை விலக்கி வைப்பான். நினைத்ததை நடத்தி காட்டுவான் அய்யன் மொட்ட கலுங்கன்.

சு. இளம் கலைமாறன்

Tags : Mota Kalungan Sami ,
× RELATED காமதகனமூர்த்தி