×

இச்சா சக்தி நிறைந்திருக்கும் மேலூர் திருவுடையம்மன்

சென்னை மாநகரில் எத்தனையோ அம்மன் ஆலயங்கள் இருந்தாலும் பௌர்ணமி தினத்தன்று ஒரே நாளில் வழிபட வேண்டிய மூன்று அம்மன் ஆலயங்கள் மிகவும் முக்கியமானவை ஆகும். அவற்றுள் மிக முக்கியமானது பொன்னேரி ஊராட்சியில் மீஞ்சூர் அருகேயுள்ள மேலூரில்  அமைந்துள்ள அருள்மிகு திருவுடையம்மன் உடனுறை திருமணங்கேஸ்வரர் ஆலயமாகும். இங்கு சித்ரா பௌர்ணமியன்று வழிபடுவது மிகுந்த நற்பலனை வாரி வழங்கும்.

தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் வழங்கும் முப்பெரும் தேவிகளில் இச்சா சக்தி மீஞ்சூர் அருகிலுள்ள மேலூரிலும், ஞானசக்தி திருவொற்றியூரிலும்,  கிரியா சக்தி திருமுல்லைவாயிலிலும் வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அளித்து காக்கும் தெய்வங்களாக அருள்பாலிக்கின்றனர். இத்தகைய மகத்துவம் வாய்ந்த மூன்று அம்மன் ஆலயங்கள் பற்றி பலர் ஏற்கனவே கேள்விப்பட்டு இருப்பார்கள். திருவுடையம்மன், வடிவுடையம்மன், கொடியிடையம்மன் ஆகியோரே அந்த மூன்று அம்மன்கள்.

இந்த மூன்று அம்மன்களும் நின்ற கோலத்தில் அருள்பாலிப்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை ஒரே நாளில் வழிபட வேண்டும். அதுவும் காலையில் திருவுடையம்மனையும், மதியம் வடிவுடையம்மனையும், மாலையில் கொடியிடையம்மனையும் வழிபட வேண்டும் என்று முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். இந்த மூன்று அம்மன்களையும் வழிபட்டால் நீங்கள் விரும்பும் அனைத்து பலன்களையும் பெற முடியும் என்பது ஐதீகம். குறிப்பாக இந்த அம்மனை சித்ரா பௌர்ணமியில் வழிபடுவது மிகச்சிறப்பு. இந்த மூன்று அம்மன் விக்கிரகங்களும் ஒரே சிற்பியால் செய்யப்பட்ட சிறப்புக்குரியவர்கள்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக மீஞ்சூர் அருகில் உள்ள மேலூர் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்தது. அந்தப் பகுதியில் ஒரு சிறிய கிராமம் உருவானது. அந்த கிராமத்தில் வாழ்ந்து வந்த ஒரு செல்வந்தரின் பசு அப்பகுதியில் சுகந்த வனம் என்ற அடர்ந்த காட்டின் உள்ளே சென்று, ஒரு மேட்டுப்பகுதியில் தானே பால் சொரிவதையும், பாம்பு ஒன்று பாலை அருந்துவதையும் அபூர்வ காட்சியாகக் கண்டு மெய்சிலிர்த்தனர்.

அந்த முட்புதரை விலக்கிப் பார்த்தபோது புற்றானது சிவலிங்க வடிவமாக இருந்தது. சிவ பெருமான் புற்று வடிவில் அங்கு வாசம் செய்ததால் ஊர்மக்கள் அவ்விடத்தில் கோவில் கட்டினார்கள். அந்தச் சுயம்பு லிங்கத்துக்கு திருமணங்கீஸ்வரர் எனப் பெயர் சூட்டி வழிபட்டு வந்தார்கள். சோழநாட்டினை ஆண்டு வந்த விக்கிரம சோழ மன்னன் ஒரு தடவை வடநாடு மீது போர் தொடுத்து, வெற்றி பெற்று சுகந்தவனம் வழியாக திரும்பி வந்து கொண்டிருந்தான். காலை பூஜைக்காக விசாரித்த மன்னன்  திருமணங்கீஸ்வரர் வரலாற்றை அறிந்து, இத்திருக்கோவில் சிவனை வழிபட்டபோது, சக்தி இல்லாமல் சிவன் மட்டுமே உள்ளதை கண்டான். உடனே மன்னன் சிற்பியை அழைத்து, சிவனுக்கு நிகராக சக்தியை அம்மன் சிலையாக வடித்து பிரதிஷ்டை செய்யுமாறு உத்தரவிட்டான்.

அம்மனை வடிக்க தேர்ந்த கல் ஒன்றைக் கொண்டு வர, சிற்பி அலைந்து திரிந்து மலை உச்சியில் கல் ஒன்றைக் கண்டான். அதனை கீழே கொண்டுவரும்போது கைபிடி நழுவி உருண்டு விழுந்ததில் கல் உடைந்து மூன்று பாகங்களாக ஆனது.

அந்த சிற்பி தான் தவறு செய்து விட்டதாக நினைத்து கையை சிதைத்துக் கொள்ள முற்பட்டான். அப்போது அம்மன் தோன்றி - தவறு உன்னிடம் இல்லை. நான் இங்கு மட்டும் இச்சா சக்தியாக தனித்து இல்லாமல், ஞான சக்தியாக வடிவுடையம்மனாக கிரியா சக்தியாக கொடியிடை அம்மனாக  ஆக முப்பெரும் சக்திகளான இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியா சக்தி வடிவமாக நாம் உருக்கொள்ளவே மூன்று பாகங்கள் ஆனோம். மூவகை உருவையும் வடித்து மேற்படி திருக்கோவில்களில் பிரதிஷ்டை செய்து விடு என உத்தரவிட்டு மறைந்தாள். அதன்படி திருப்பணிகள் செய்து, மூன்று அம்மன்களுக்கும் தனி சந்நதிகளாக அமைக்கப்பட்டது.

முதல் சக்தியான திருவுடையம்மன் நான்கு கர நாயகி, மேலிருகரங்களில் பாச அங்குசம். கீழ்வலக்கரம் அபய முத்திரையாகவும் இடக்கரம் வரஹஸ்தமாகவும் திருக்கோலம் கொண்டு காட்சி தரும் திருமேனியாள் கருணை வடிவே உருவாகி நிற்கிறாள். இத்திருக்கோவிலில் நுழைந்தவுடன் 16 கால் மண்டபம் உள்ளது. உள்ளே பிரகாரத்தில் விநாயகர், தென்முகக்கடவுள்,  நாகர், விசாலாட்சி சமேத விஸ்வநாதர், வள்ளி-தெய்வானை சமேத சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், துர்க்கை, பைரவர் சிலைகள் உள்ளது. வெளியே திருவுடையம்மன் சந்நதி தெற்கு நோக்கி உள்ளது. கோவிலின் தலவிருட்சம் சரக்கொன்றை. கோவில் வெளிப் பிரகாரத்தில் பெரிய பாம்பு புற்றுக் கோவில் தனியாக பராமரிக்கப்படுகிறது.

ஆறு வெள்ளிக்கிழமைகளில் திருவுடையம்மனை வணங்கி வருபவர்களுக்கு திருமணத்தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். புத்திர பாக்கியம் இல்லாதோர் திருவுடையம்மனை ஆறுவாரம் அபிஷேகம் செய்து வழிபட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பதும் ஐதீகம். இந்த அம்மன் கடன், எதிரி, நோய் போன்றவற்றை தீர்க்கும் சக்தி வாய்ந்தவள். முன் ஜென்ம பாவங்களையும் தீர்க்கும் சக்தி திருவுடையம்மனுக்கு உண்டு என்கிறது ஐதீகம்.

இத்திருக்கோவிலில் ஆடிப்பூரம், பங்குனி உத்திர நாளில் திருக்கல்யாணம் உற்சவம் நடைபெறும். மஞ்சள் நிற வஸ்திரம் அணிவித்து மாம்பழ நைவேத்தியம் செய்வது விசேஷ பலனை தரும். கோவில் அமைவிடம் சென்னையிலிருந்து மீஞ்சூர் செல்லும் அனைத்து பேருந்திலும் செல்லலாம். மீஞ்சூரிலிருந்து பத்து நிமிட தொலைவில் மேலூர் உள்ளது. பொன்னேரியிலிருந்தும் செல்லலாம்.கோவில் திறந்திருக்கும் நேரம் காலை 8.00 மணி முதல் பகல் 12.00 மணி  வரை. மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை. பௌர்ணமியன்று காலை 6.00 மணிக்கு கோவில் திறக்கிறார்கள்.

தொகுப்பு: தனுஜா ஜெயராமன்

Tags : Icha ,
× RELATED இச்சா சக்தி, கிரியா சக்தி; ஞான சக்தி என்பது யாது?