×

இச்சா சக்தி, கிரியா சக்தி; ஞான சக்தி என்பது யாது?

– சு.பாலசுப்ரமணியன், ராமேஸ்வரம்
ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய சக்திகள் இம்மூன்றும். இச்சா சக்தி எதைச் செய்ய வேண்டுமானாலும் அதற்கு முதலில் தேவைப்படுவது இச்சை, ஆர்வம்; இது இச்சா சக்தி. இச்சை இருந்தால் போதுமா? விரும்பியதை அடைய, உழைக்க செயல்பட வேண்டுமல்லவா? இது கிரியா சக்தி. இந்த இரண்டும் இருந்தால்கூட, தெளிவு அதாவது ஞானம் என்பது இல்லாவிட்டால், முன் சொன்ன இச்சா-கிரியா சக்திகளால் பலனில்லை. எல்லோரிடமும் ஏதாவது ஒரு விதத்தில், இச்சா சக்தி என்பது இருக்கும். அது நல்லவிதத்தில் திரும்பவும், அதற்கு ஏற்றாற் போல, செயல்படும் திறன்-கிரியா சக்தி பலருக்கு இருக்காது. அந்தக் கிரியா சக்தி படைத்தவர்கள் கூட, ஞான சக்தி அதாவது தெளிவு இல்லாமல் கஷ்டப்படுவார்கள். இந்தக் கஷ்டம் தீரவே, சுவாமியிடம் போய், இச்சா-கிரியா-ஞான சக்திகளில் எது குறைந்து இருக்கிறதோ, இல்லாமல் இருக்கிறதோ, அதைத்தந்து நிறைவு செய்ய வேண்டுகிறோம் இறைவனிடம்.

கோயிலில் பால் குடம் – காவடி என நேர்த்திக்கடன் செலுத்தும் முன், பெண்களுக்கும் ஆண்களுக்கும் காப்புக் கட்டுதல் செய்கிறார்கள். அது எந்தக் கையில் கட்ட வேண்டும்? ஏன் கட்ட வேண்டும்?
– பாண்டியன், விராலிமலை.

ஆண் என்றால் இடது கையிலும்; பெண் என்றால் வலது கையிலும் கட்ட வேண்டும். காரணம், ஆண் பாதி – பெண் பாதியாகக் கொண்ட அர்த்தநாரீஸ்வரக் கோலம் எனும் திருவடிவில் அம்பிகை இடப்பாகமாகவும், சிவபெருமான் வலப்பக்கமாகவும் இடம் பெற்றிருக்கிறார்கள் அல்லவா? அதன் காரணமாக, பெண்களுக்குக் காப்பு கட்டும்போது, சக்தி அம்சமான அவர்களுடன் சிவ அம்சமும் சேர்ந்து அருள் புரிய வேண்டும் என்பதற்காகப் பெண்களின் வலது கையில் (சிவ அம்சமாக) காப்பு கட்டுவார்கள். ஆண்களுக்குக் காப்பு கட்டும்போது, சிவ அம்சமான அவர்களுடன் சக்தி அம்சமும் சேர்ந்து அருள் புரிய வேண்டும் என்பதற்காக, ஆண்களின் இடது கையில் (சக்தி அம்சமாக) காப்பு கட்டுவார்கள்.

சுக்கிரதசை அடிக்கிறது என்கிறார்கள். சுக்கிராச்சார்யார் அசுரர்களின் குரு அல்லவா?
அசுர குருவான அவர் போய், எப்படி வாழ்க்கையில் வளம் காட்டுவார்?
– ஆர். விஷ்ணுபிரபா, சின்ன சேலம்.

தேவ குருவுக்குக்கூடத் தெரியாத சஞ்ஜீவினி மந்திரம் தெரிந்தவர்; அதன் மூலம், இறந்தவர்களைப் பிழைக்கச் செய்பவர்; தவம் – கல்வி ஆகியவற்றில் தலைசிறந்தவர்; சிவபக்தி மிகுந்தவர்; தான் இழந்திருந்த கண் பார்வையைக் கடும்தவம் செய்து, சிவபெருமானிடம் இருந்து பெற்றவர். எனப் பல்வேறு விதங்களில் புகழ்பெற்றவர் சுக்கிராச்சார்யார். ‘தாரா’ என்ற சொல், நட்சத்திரங்களில் இரண்டை மட்டும் குறிக்கும் என்பார்கள். சுக்கிரன் – செவ்வாய் என்பவையே அவை. அடுத்தது, இந்த அண்டத்தையே அம்பிகையின் திருவடிவாகக் கொண்டால், அந்த அம்பிகை அணியும் இரு மூக்குத்திகள் வெள்ளியும் செவ்வாயும். வெள்ளைக்கல் மூக்குத்தி – வெள்ளி. சிவப்புக்கல் மூக்குத்தி – செவ்வாய். இதன் காரணமாகவே செவ்வாய் – வெள்ளி அம்பாளைப் பூஜை செய் என்றார்கள். அதிலும் குறிப்பாக, வெள்ளிக்கு ஏற்றம் கொடுத்து, வெள்ளிக்கிழமை அம்பாள் வழிபாடு என்றே சொல்லி வைத்தார்கள். சுக்கிரதசை அடிக்கட்டும்! சுபீட்சங்கள் வளரட்டும்!

 

The post இச்சா சக்தி, கிரியா சக்தி; ஞான சக்தி என்பது யாது? appeared first on Dinakaran.

Tags : Icha Shakti ,Shakti ,Su. Balasubramanian ,Rameswaram ,
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...