×

ஆனந்த வாழ்வருளும் ஆதி திருவரங்கம்

முகில் சூழ்ந்த மேற்குத் தொடர்ச்சி மலையில் பிறப்பெடுத்து, பொன்மணல் பரப்பியபடி பரந்து விரிந்திருக்கும் தென்பெண்ணை ஆறு. எந்நேரமும் மென்காற்று வீசும் இதமான சூழல். காற்றில் கசிந்து வரும் பாசுரங்கள் செவி நிறைக்க, ஸ்வரத்தினிடையே பிரிந்திருக்கும் நிசப்தத்தில் மனம் லயிக்க, தெய்வீக உணர்வு நம்மைச் சூழ்கிறது. இவ்வாறு மெய் மறந்து, மனம் கரைந்து, விழி விரியும் தருணத்தில் நம் கண்முன் நிமிர்ந்து நிற்கிறது ஆதிரங்கம் ஆலயம். ஆஹா...இதுவே பூலோக வைகுண்டம் போலல்லவா இருக்கிறது.

ரங்கநாயகி சமேத ரங்கநாதர் அருள்பாலிக்கும் திருத்தலம் நம்மை ‘வா’ என வரவேற்கிறது. கோயிலின் வாயிலே நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. சிந்தை தெளியச்செய்யும் வேதங்களை மீட்டெடுத்ததே இந்த தலநாயகனின் வரலாறாயிற்று. அந்த திவ்ய சரிதத்தைக் காண்போமா! மூவுலகும் என் கட்டுப்பாட்டுக்குக் கீழ் வரவேண்டுமென்று வெறியோடு அலைந்தான் சோமுகன் எனும் அசுரன். தேவலோகத்தின் அரியணையில் அமர்ந்திருந்த இந்திரனின் முன்பு அசுரக் கூட்டத்தோடு நின்றான். இந்திரன் இருண்டுபோனான்.

அசுரர்களின் அட்டகாசச் சிரிப்பே இந்திரனை ஓட வைக்கப் போதுமானதாக இருந்தது. அரியணை வரை வந்தவர்கள் எப்படியும் தேவர்களைத் தோற்
கடித்திருப்பார்கள் என தேவலோகத்தை விட்டு வெளியேறினான், தேவேந்திரன். பிரம்மதேவன் என்பவன் யார் எனக் கொக்கரித்தது அசுரர் கூட்டம். இறுதியில் பிரம்மதேவனைச் சிறைப் பிடித்தார்கள். உங்களுக்கு நான்கு முகமல்லவா, வேதங்கள் அனைத்தும் உங்களின் படைப்பாற்றலுக்கு ஆதாரமாக உள்ளதல்லவா.

அதை இப்படிக் கொடுங்கள் என வேதமோதி கனிந்திருந்த பிரம்மனை, வேதங்களை ஓத விடாது பார்த்துக்கொண்டார்கள். தர்மச் சக்கரம் நின்று போனது. வேதத்தின் அருமையை அசுரர்களும் அறிந்திருந்தார்கள். சோமுகனும் அதைக் கவனமாக பிரம்மாவிடமிருந்து கவர்ந்தான். இனி வேதம் நான்கும் எவ்வுலகிலும் பரவாது தடுக்க வேண்டும். வேதம் அறுத்தால் தர்மம் குலையும். நமது குலத் தொழிலான அதர்மத்தை, கொடுங்கோலாட்சியை மீண்டும் கொண்டு வந்துவிடலாம் என முடிவெடுத்தான்.

ஆழ்கடலின் அடியில், தான் உருவாக்கி வைத்திருந்த இடத்தில் சென்று பதுங்கிக்கொண்டான். உலகம் தமது சுழற்சியில் இருந்து புரண்டது. அசுரர்கள், யாக குண்டங்களைச் சிதைத்தனர். வேதம் சொல்வோர்களின் சிரசைச் சீவி எறிந்தனர். அசுரர்கள் சொல்லும் வழியில் நடப்போரை மன்னராக்கினர். அல்லாதோரை விண்ணுலகிற்கு அனுப்பினர். தேவர்கள் தனித்தனியாகத் திரிந்தனர். யாகங்களை ஏற்று பூவுலகிற்கு நற்பலன்களைத் தரும் தகுதியை பெற்றிருந்தாலும், தங்களைக் காத்துக் கொள்ள ஒவ்வொரு உலகமாகச் சென்று தங்கி வாழ்ந்துவந்தனர்.

வேதம் உரைக்கும் ஆதி மூர்த்தியான பாற்கடல் பரந்தாமன், தன் மைய சக்தியை அசைத்தது யாரெனப் பார்த்தார். சோமுகனை பயம் சூழ்ந்தது. அது இன்னும் சீற்றத்தை அதிகரித்தது. நம்மை யாரோ தொடருகிறார்கள் என பிதற்றினான். எல்லோரும் நம் கட்டுப்பாட்டில் தானே இருக்கிறார்கள் என தனக்குத்தானே பேசத் தொடங்கினான்.

கடலுக்கு அடியில் உன்னதமான அந்த வேதங்களை அவன் வைத்திருந்ததால் ஆதிகேசவனான மகாவிஷ்ணு எல்லாமுமாக நிறைந்தவன் இம்முறை கடலுக்குள் மீனாக மச்சாவதாரம் எடுத்தார். ஏதோ மீன் என வீணாக அலட்சியம் காட்டிய சோமுகனை உந்தித் தள்ளியது. இது மச்சமல்ல நம்மை மாய்க்க வந்த மாலோலன் என எதிர்த்தான்.

அவனுக்குப் பக்க பலமாகத் தாக்க வந்த மற்ற அசுரர்களைக் கொன்று குவித்தார் மகாவிஷ்ணு. இறுதியாக சோமுகன் எனும் அரக்கனை வதம் செய்து அசுரனே ஆனாலும், அவனைத் தம் திருவடியில் சேர்த்துக்கொண்டார். வேதங்களை மீட்டெடுத்தார். இக்காட்சியைக் கண்ட தேவர்கள் கைதொழுது நின்றனர். பூவுலகில் வேதம் அதிர்ந்து முழங்கியது.

யாகத்தீ உயர்ந்து எழுந்தது. தேவர்கள் மக்களை ஆசிகூறி வாழ்வைப் பெருக்கினர். தர்மச் சக்கரம் மீண்டும் சீராகச் சுழன்றது. சோமுகனை வதம் செய்த அதே வேகத்தோடு எம்பெருமான் தென்பெண்ணை ஆற்றங்கரையில் பிரம்மாவைச் சந்தித்தார். வேதங்களை மீண்டும் ஒரு முறை உபதேசித்தார். அப்படி பிரம்மாவிற்கு மச்சாவதாரமாக, மகாவிஷ்ணுவாக, பாற்கடல் பரந்தாமனாக அருட்கோலம் காட்டிய தலமே இந்த ஆதி திருவரங்கமாகும். இன்றும் தென்பெண்ணைத் தென்றலில் அருவமான வேத ஒலிகள் நம்மையறியாது உரசியபடி இருக்கின்றன.

பிரம்மனும், ``கண்டேன்... கண்டேன்...’’ என தான் திருமாலைக் கண்ட திருக்கோலத்திலேயே இங்கு ஆலயம் அமைத்துத் தாருங்கள் என வேண்டி நின்றார். எம்பெருமான் வைகுண்டம் ஏற்கும் முன்பு, தேவலோகச் சிற்பியான விஸ்வகர்மாவை அழைத்தார். திருப்பாற்கடலில் பள்ளிகொண்ட தம்முடைய திருமேனியைப்போல, அனந்த சயனமூர்த்தியை நிர்மாணிக்க திருவாய் மலர்ந்தார். நவபாஷாணத்தாலும், மூலிகைகளாலும் உருவான விஸ்வகர்மாவின் கைவண்ணம்தான் திருமாலின் திருவடிவம்.

முதல் அவதாரத் திருத்தலமாக அமைந்துள்ள திருவரங்கக் கருவறையில் சாந்நித்தியமாகி ஆண்டாண்டு காலமாக ரங்கநாதர் சேவை சாதித்துவருகிறார்.

* முதல் பிராகாரத்தின் உள்ளே, கருவறையில் பாம்பணையில் பள்ளிகொண்ட திருக்கோலத்தில் அனந்தசயனப் பெருமாள்.

* இதுவரை நாம் எங்குமே தரிசித்திராத முப்பது அடி நீளத்தில் பிரமாண்டமாகக் காட்சிதருகிறார்.

* அந்த பிரமாண்டத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது அந்த திருமாலின் திருவடியின் கீழ் வைக்கப்பட்டிருக்கும் ஆளுயரக் கண்ணாடி. அதன் வழியே தரிசித்தால் 30 அடி நீள திருமால் அறுபது அடியாக விஸ்வரூப தரிசனம் தருவது சிலிர்ப்பூட்டுகிறது.

* வெள்ளிக் கிரீடம், மார்புக் கவசம், திருவடிக் கவசங்களுடன் ரங்கநாதர் அருள்கிறார்.

* வேதங்களை மீட்ட ஆதி அரங்கத்து அண்ணல், வலக்கையைத் தலையணையாக கொண்டு, இடக்கையால் நாபிக்கமலத்தில் தோன்றிய நான்முகனுக்கு நான்கு வேதங்களையும் அருள்கிறார்.

* திருமகளின் மடிமீது ரங்கநாதர் சயனித்திருக்கிறார்.

* வடதிசை நோக்கியிருக்கும் திருவடியை நிலமகள் வருடியபடி அமர்ந்துள்ளார். மற்றொரு திருவடி ஆதிசேஷனின் வால்மீது உள்ளது.

* பெருமாளின் வலது கையைத் தாங்கி மண்டியிட்டபடி, கருடாழ்வார் அமர்ந்துள்ளார்.

* கருவறையின் வலதுபுறத்தில் அமைந்துள்ளது தாயார் சந்நதி.

* அமர்ந்த திருக்கோலத்தில், கரங்களில் தாமரைமலர்களை ஏந்தியபடி சேவை சாதிக்கிறாள், ரங்கநாயகி தாயார். அதற்கு முன்னே உற்சவ திருமேனி உள்ளது.
* ரங்கநாதர் குடிகொண்டுள்ள கருவறைக்குச் செல்லும் வழியில், மூலமூர்த்திகள் அமர்ந்துள்ள மண்டபம் உள்ளது.

* கோதண்டராமர் சந்நதியில், கம்பீர ராமரோடு, அண்ணனுக்கு அருகில் அமைதியோடும், சாத்வீகமான லட்சுமணரும், விழிகளில் அருளைத் தேக்கி கருணையோடு சீதாப்பிராட்டியாரும், வணங்கிய கரங்களுடன் வினய ஆஞ்சநேயராக அனுமன் நம்மை மெய்மறக்கச் செய்கிறார்.

* வீர ஆஞ்சநேயர் சந்நதியும் தனியே அமைந்துள்ளது.

* இரண்டாவது பிராகாரத்தின் தென்கிழக்கு மூலையில் வரதராஜப் பெருமாள் சந்நதி அமைந்திருக்கிறது.

* வெளிப்பிராகாரத்தில் அஷ்டபுஜ துர்க்கையானவள் சங்கு, சக்கரம், கத்தி, கேடயம், திரிசூலம் ஆகியவற்றுடன் காட்சி தருவது சிறப்புக்குரியதாகும். அருகிலேயே அஷ்டதசபுஜ சக்கரத்தாழ்வார் சந்நதி அமைந்துள்ளன. பதினாறு கரங்களுடன் நின்றகோலத்தில் காட்சியளிக்கிறார் சக்கரத்தாழ்வார்.

*  உயர்ந்து நிற்கும் கொடிமரத்தின் அருகேயுள்ள சுவரின்மீது ஒரு சாளரம் தெரிகிறது. அந்த வழியே நோக்க அங்கே உறியடி கண்ணன் சந்நதி அமைந்திருக்கிறது. வலது கரத்தில் வெண்ணெய் உருண்டையுடனும், இடது கரத்தில் கயிறுடன் கூடிய உறியுடன் காட்சி தருகிறார். அங்கம் முழுதும் அலங்கரிக்கும் மணிமாலைகள், திருப்பாதங்களைத் தவழும் கொலுசு, கரங்களில் ஒளிமிளிரும் காப்பும், கடகமும். அடடா..!
இங்குள்ள கண்ணனின் கள்ளச்சிரிப்புக்கு எல்லையே இல்லை.

* பிராகாரத்தின் ஒரு பகுதியில், ரங்கநாதரின் பொன்மலரடிகளை தரிசிக்கலாம். அதற்கு அருகிலேயே சப்த ஸ்வர ராமர் திருவுருவச்சிலை. ஏழு ஸ்வரங்களையும் எழுப்பும் அபூர்வமான இசைச் சிற்பமாகும்.

* கோயிலின் வெளிமுகப்புப் பகுதியில், நான்கு கால் மண்டபம். அதன் அருகே, பெரிய நெற்குதிர். கருவறையின் விமானம் போலத் தோற்றமளிக்கும் தானியக் கிடங்கு. ஆலயத்தின் வெளியே ரங்கநாதரை எதிர்நோக்கியபடி, சஞ்சீவிராயர் சந்நதி அமைந்திருக்கிறது.

* வேலைக்காக அல்லாடுபவரா, திருமணம் தடைப்படுகிறதா, என வாழ்வின் ஒவ்வொரு நிலையில் உற்ற துணையாக நிற்கிறான்.

இந்தத் தலம், திருவண்ணாமலையிலிருந்து மணலூர்பேட்டை வழியாக 32 கி.மீ தூரத்தில் உள்ளது. விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் தாலுக்காவில் திருக்கோவிலூரில் இருந்து மணலூர்பேட்டை வழியாக 20 கி.மீ சென்றாலும், ஆதி திருவரங்கத்தை அடையலாம்.

படங்கள்: வி.சுதாகர்

தொகுப்பு: கி.வினோத்குமார்

Tags : Adi Thiruvarangam ,
× RELATED இந்த வார விசேஷங்கள்