×

தரணியெங்கும் கொண்டாடப்படும் தைப் பூசம்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

முத்துக்கள் முப்பது

1. முன்னுரை

தமிழ் மாதங்கள் 12 ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு ஆன்மிகச் சிறப்பு உண்டு. விழாக்கள்உண்டு. உற்சவங்கள் உண்டு. அதில் சில மாதங்கள் மிக மிகச்  சிறப்பான மாதங்கள். அப்படிப்பட்ட ஒரு மாதம் தான் தை மாதம் இந்த தை மாதத்திலும்  பூச நட்சத்திரம் மிகச் சிறப்பான நட்சத்திரம். தை மாதத்தின் சிறப்பையும், தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்தின் சிறப்பையும்  முத்துக்கள் முப்பது பகுதியில் காண்போம்.

2. நட்சத்திரமும் மாதங்களும்

நட்சத்திரங்களையும், மாதங்களையும் அடிப்படையாகக்கொண்டு சில முக்கியமான பண்டிகைகள்,உற்சவங்கள்  கொண்டாடப்படும். உதாரணமாக ஆடி மாதத்தில் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பு. தை மாதத்திலும்  கிருத்திகை நட்சத்திரம் சிறப்பு. ஆவணி மாதத்தில் அவிட்ட நட்சத்திரம் சிறப்பு. அதைப்போல திதியையும் மாதத்தையும் இணைத்து சில பண்டிகைகள் உண்டு. சித்திரை மாதத்தில் சித்ரா பௌர்ணமி. தையில் பூசம்.

3. தை பிறந்தால் வழி பிறக்கும்

தைப்பூசத்துக்கு மட்டும் அப்படி என்ன விசேஷம் என்று யோசித்துப் பார்த்தால் தை மாதம் உத்திராயண  காலத்தில் முதல் மாதம். நமக்கு ஒரு ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள். ஒரு நாளின் 24 மணி நேரம் 12 மாதங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால் ஒவ்வொரு மாதமும் இரண்டு மணி நேரத்தைக்  குறிக்கும். தை மாதம் என்பது விடிகின்ற காலை 6 மணி முதல் 8 மணி வரை உள்ள 2 மணி நேரத்தைக்  குறிக்கும் என்பதால் தை மாதத்தை விடியல் நேரம் என்று ஆன்மிக ரீதியில் சொல்லுவார்கள். காலை ஆறு மணிக்குத்தானே  சூரிய உதயம் ஆகும். சூரிய உதயம் பிறந்துவிட்டால் விடிந்து விட்டது என்று அர்த்தம். வழி கிடைத்துவிட்டது என்று அர்த்தம். இதன் அடிப்படையில்தான் தை பிறந்தால் வழி பிறக்கும் என்கின்ற
சொற்றொடரே உருவானது.

4. அருளாளர்கள் பிறந்த மாதம் தை மாதம் பல

வகையில் சிறப்பு பெற்ற மாதம். ஆழ்வார்களில் திருமழிசை ஆழ்வார் தை மாதத்தில் தான் அவதரித்தார். ஆசாரியர்களில் கூரத்தாழ்வார், குருகைக்  காவலப்பன், சொட்டை நம்பி, திருக்கோவிலூர் எம்பெருமானார் ஜீயர், இவர்களெல்லாம் தை மாதத்தில் அவதரித்தவர்கள். நாயன்மார்களில் திருநீலகண்ட நாயனார், தாயுமானவசுவாமிகள், அப்பூதி அடிகள், கலிக்காம நாயனார், கண்ணப்ப நாயனார், சண்டிகேஸ்வர நாயனார் அரிவாட்டாய நாயனார் முதலியவர்கள் தை மாதத்தில் அவதரித்தவர்கள்.பூச நட்சத்திரம் கடக ராசியில் உள்ள சனியினுடைய நட்சத்திரம். கடக ராசி சந்திரன் ஆட்சி வீடு.

5. சனியின் வீடு

தை மாதம் என்பது மகரமாதம். அதாவது சனியின் வீடு. அங்கே சூரியன் இருக்கக்கூடிய காலம்தான் தை மாதம். சூரியன் வடக்கு நோக்கிய பயணத்தின் முதல் வீடு மகரவீடு .தை மாதமாகிய மகரத்தில் சூரியன் இருக்க, நேர் எதிர் மாதமாகிய கடகத்தில் மகரவீட்டுக்குரிய சனியின் பூசநட்சத்திரத்தில் சந்திரன் இருக்க, இந்த விசேஷமான பின்னணியில் கொண்டாடுவதுதான் தைப்பூசம். பூசநட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடிவரும் தைப் பூசம்  விழா முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும்.பூசம் எட்டாவது நட்ஷத்திரம்.எண் கணிதப்படி 8 என்பது சனியைக்   குறிக்கும். சனி நீதி பரிபாலனத்தைக்  குறிக்கும்.

6. பூச நட்சத்திர நாளன்று பொங்கல்

மார்கழியில் நிறுத்தப்பட்டிருந்த சுப காரியங்கள் எல்லாம் தை மாதத்தில் தொடங்கும். தை மாதம் முதல் நாள் இப்போது  பொங்கல் பண்டிகை வைத்தாலும் கூட, ஒரு காலத்தில் தையில் அறுவடை செய்த புது நெல்லை, பூச நட்சத்திர நாளன்று பொங்கல் வைத்து கொண்டாடுகின்ற வழக்கமும் இருந்தது இது குறித்த பல குறிப்புகள் இலக்கியங்களில் இருக்கின்றன. தையில் தான் பொங்கல் பண்டிகை வருகிறது. தையில் தான்  வெள்ளிக்கிழமை  விசேஷம். சைவத்தில் எல்லா அம்பாள் கோயில்களிலும் ,திருமால் ஆலயங்களில் எல்லா தாயார் சந்நதிகளிலும் தை வெள்ளிக் கிழமை  கோலாகலமாகக் கொண்டாடப்படும்.  

7. சனியின் மாதம்

சனிக்கு ஜோதிட சாஸ்திரத்தில் இரண்டு வீடுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஒன்று மகரம். இன்னொன்று கும்பம். மகரம் என்பது வினைகளை, காரியங் களைக்  குறிக்கிறது .அதனால் அதற்கு கர்மஸ்தானம் என்று பெயர். அதே சனி அதற்கான பலனையும் கொடுப்பார் என்பதால் அதற்கு அடுத்த பாவத்தை லாப பாவம் என்று சொல்வார்கள். பத்தாம் இடத்தில் என்ன விதைக் கிறோமோ, அது பதினொன்றாம் இடத்தில்  அறுவடையாகும். நல்ல கர்மாவை செய்வதன் மூலமாக நன்மை அடையலாம் என்பதைச்  சொல்பவர் சனி.

8. உங்கள் செயல்தான் உங்கள் பாவ புண்ணியங்களைத்  தீர்மானிக்கிறது

உங்கள் செயலை நீங்கள் தொடங்குகின்ற நேரம் காலை நேரம் அல்லவா. அந்த காலை நேரத்தில் நீங்கள் எந்த செயலைத்  தொடங்குகிறீர்களோ, (10ம் பாவம்) அதற்கான விளைவு, அதற்கு அடுத்த பாவமாகிய லாப பாவத்தில் (11ம் பாவத்தில்) சனி தந்து விடுவார். எனவே, இரண்டு வீடுகளும் அவருக்கு உரியதாக இருக்கிறது. அந்த லாப பாபத்துக்கு (11), 12 ஆவது பாவம் கர்ம பாவமாக (10ம் பாவம்) அமைவதால், உங்கள் புண்ணியங்களின் விளைவுகளையும் (அறுவடை) நீங்கள் பத்தாம் பாவமாகிய மகர மாதத்தில் செலவு செய்யப் போகிறீர்கள் (reflection to your action) என்று பொருள். அந்தச்  செலவை நீங்கள் எப்படி செய்கிறீர்களோ, அதற்கு தகுந்த மாதிரி அதற்கு அடுத்த பாவத்தில் லாபம் கிடைக்கும் என்கிற அற்புதமான உண்மையைச் சொல்லுவது இந்த மகரமாதம் ( தை மாதம்).

9. பிள்ளைக்கு உரிய கடமை

புராண ரீதியாக சூரியனுக்குப்  பிள்ளையாகப்  பிறந்தவர் சனி பகவான். சூரியதேவரின் மனைவி சந்தியாதேவி, நீண்ட நெடுங்காலமாக சூரியனையும், அவரது வெப்பத்தையும் அருகில் இருந்து தாங்கி வந்ததன் காரணமாக தன்னுடைய சக்தியை இழந்திருந்தார். ஆகவே அவர் பூலோகம் சென்று தவம்செய்து மீண்டும் சக்தியைப் பெற எண்ணினார். அதை சூரியனிடம் சொல்ல பயந்த சந்தியா, தன்னுடைய நிழலில் இருந்து தன்னைப்போன்ற உருவம் கொண்ட பெண்ணைத் தோற்றுவித்தார். நிழலில் இருந்து உருவானதால் அந்தப் பெண்ணுக்கு சாயாதேவி என்று பெயரிட்டார். சூரியதேவன் - சாயா தேவி தம்பதியினருக்கு பிறந்தவர் சனி . பொதுவாக காகத்தினை வாகனமாக கொண்டவர்.

இவருடைய கால் சிறிது ஊனம்.அதனால் மந்தமாக நடப்பவர். மந்தன் எனும் பெயர் வழங்கப்படுகிறது. ஒரு ராசியில் இரண்டரை வருடம் இருப்பார். ஒரு பிள்ளையின்  மிக முக்கியமான கடமை, தன் தந்தைக்குச் செய்ய வேண்டிய கடமைகள். தந்தை உயிரோடு இருக்கின்ற வரை, அவருக்கு பணிவிடைகளைச்  செய்வது உத்தமமான கர்மா. அதைச்  செய்யாமல் தந்தையை அலட்சியப்படுத்துவதோ அவமானப்படுத்துவதோ அவர் மனம் புண்படும்படி நடந்து கொள்வதோ மிகப் பெரிய பாவம் என்கின்றன தர்ம  சாஸ்திரங்கள்.

அவர் இருக்கும் போது எல்லாப்  பணிவிடைகளையும் செய்து, அவர் காலத்துக்குப்  பின் தொடர்ந்து அவருக்கான மற்ற வைதிகச்  சடங்குகளையும் தவறாமல் செய்ய வேண்டும் என்பதும் சாஸ்திரம். அது ஒவ்வொரு பிள்ளைக்கும் உரிய கடமை என்பதால் சூரியனின் பிள்ளையாகிய சனியின் தைமாதத்தில் தை அமாவாசை போன்ற கடமைகளை அவசியம் செய்யச் சொன்னார்கள்.

10. பூச நட்சத்திரம்

அதேபோல தை பூச நட்சத்திரம் விசேஷமானது. சனியினுடைய நட்சத்திரமான பூசம், காலச்சக்கரத்தின் நாலாவது வீடான கடக ராசியில் இருக்கிறது. இதை சுப நட்சத்திரம் என்பார்கள். பதவி ஏற்கவும், சபையைக்  கூட்டவும், சீமந்தம் முதலிய விசேஷங்கள் செய்யவும், பசு மாடு வாங்கவும், வாஸ்து சாந்தி செய்யவும், திருமணம், கிரகப்பிரவேசம் முதலிய விசேஷங்களைச்  செய்யவும், யாத்திரை மற்றும் வெளிநாடு பிரயாணம் செய்யவும் ஏற்ற நட்சத்திரம் பூசம் நட்சத்திரம்.

11. மனமது செம்மையானால்

பூசநட்சத்திரம் கடக ராசியில் இருக்கிறது. கடகராசியில் புனர்பூசம், பூசம், ஆயில்யம் முதலிய மூன்று நட்சத்திரங்கள் இருக்கின்றன. இதில் பூச நட்சத்திரத்தில் சந்திரன் பிரவேசிக்கும் காலம் தான் தைப்பூசம் கொண் டாடப்படுகிறது. கடகராசி சந்திரனுடைய ஆட்சிவீடு. சந்திரனுக்கு எத் தனையோ காரகத்துவங்கள் சொல்லப்பட்டிருந்தாலும், மிக முக்கியமான காரகம் மனத்தை ஆள்பவன் என்பது. அதனால் தான் சந்திரனை “மதி” என்று சொன்னார்கள் அந்த கடக ராசியின் நேர் ஏழாவது ராசி தான் தை மாதத்திற்குரிய மகர ராசி. அப்படியானால் என்ன பொருள்? நான்காவது ராசி மனம், சுகம் அல்லவா? அதனுடைய நேர் எதிர் விளைவு தான் கர்ம ராசி.

எனவே மனத்தை ஒழுங்கு செய்தால் கர்மாவை ஒழுங்கு செய்யலாம் என்பதைக்  காட்டுவது தை மாதம் பூச நட்சத்திரம். இதைத்தான் திருமூலரும் மனமது செம்மையானால் மந்திரம் ஜபிக்க வேண்டாம் என்று குறிப்பால் உணர்த்தினார்.. அதற்கு இறையருள் வேண்டும் என்பதற்காகத்தான் பூச நட்சத்திர நாளில் எல்லாக்  கோயில்களிலும் சிறப்பான விழாக்களைக்  கொண்டாடுகிறார்கள்.

12. முருகனுக்கு ஏன் சிறப்பு?

இன்னொரு நுட்பத்தையும் நாம் இங்கு கவனிக்கலாம் தை மாதமாகிய மகர ராசியில் செவ்வாய் உச்சமடைகிறார். செவ்வாய் என்பது முருகப் பெரு மானைக்  காட்டும் கிரகக்  குறியீடு. பெண் தெய்வமாக இருந்தால் துர்க் கையைக்  குறிக்கும். அதனால்தான் தை மாதம் வெள்ளிக்கிழமை அம்பாளையும் பூசத்தில் முருகப் பெருமானையும் வணங்கி, எட்டாத இலக்கையும் எட்டுகின்றனர். எட்டு என்பது துன்பத்தைக் குறிப்பதால் அந்தத்  துன்பத்தையும் முருகப்பெருமான் வழிபாட்டின் மூலம் நீக்கிக் கொள்ளுகின்றனர். சனியின் ஆதிக்கம் கடுமையாக இருக்கும் போது(ஏழரைச் சனி, அஷ்டமச்சனி, கண்டச் சனி, அர்த்தாஷ்டம சனி) அதே சனி நட்சத்திரமான பூசநட்சத்திரத்தில் சனியின் மகர ராசியில் உச்சம் பெறும் முருகனை வணங்கி நிவாரணம் பெறுகின்றனர்.

13. எல்லாத்  தெய்வங்களுக்கும் உரிய விழா

தைப்பூச விழாவானது பழங்காலந் தொட்டே தமிழகத்தின் முருகன், சிவன் கோயில்களில் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. திருமால் ஆலயங்களிலும் தைப்பூச மகோத்சவங்கள் கொண்டாடப்படும். எனவே முப்பெரும் தெய்வங் களுக்கும் உரிய முத்தான விழா தான் தைப்பூசத் திருவிழா. முப்பெரும் தெய்வங்களுக்கு உரிய விழாவாயினும் சிவன் கோயில்களிலும்
முருகன் கோயில்களிலும் தைப்பூசத் திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப் படுகிறது.சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு தைப் பூசம் கொண்டாடப்பட்டது குறித்து தேவாரப் பதிகங்களில் குறிப்புகள் உண்டு. குறிப்பாக பொருந்திய “தைப்பூசமாடி உலகம் பொலிவெய்த” என்று திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்.

திருமயிலாப்பூரில் உள்ள கபாலீச்சரம் என்னும் கோயிலில் கைகளில் நீறுபூசியவனாய் அமர்ந்துள்ள பெருமானுக்கு அணிகலன் பூண்டுள்ள மகளிர், நெய்யொழுகும் சிறந்த பொங்கல் படைத்துக் கொண்டாடும் தைப்பூசவிழாவைக் காணாது செல்வது முறையோ? என்ற பாடலின் மூலம்

பொங்கல் படைத்தது பூச நாள்
கொண்டாடிய வரலாறு அறிகிறோம்.
மைப்பூசு மொண்கண் மடநல்லார்
மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலீச் சரமமர்ந்தான்
நெய்ப்பூசு மொண்புழுக்க னேரிழையார் கொண்டாடும் தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய்.

14. ஆனந்த நடன தரிசனம் தந்த நாள்

சைவத்தில் கோயில் என்றால் சிதம்பரத்தை குறிக்கும் அந்த சிதம்பரத்திற்கும் தைப்பூசத் திருநாளுக்கும் ஒரு இணைப்பு உண்டு. சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப் பூசம் என்பர். அது மட்டுமல்ல, சிதம்பரத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து, நடராஜரை இரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது இந்நாளிலேயே. இக்காரணங்களுக்காகவே சிவன் கோயில் களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன.

15. தைப்பூசமும் முருகனும்

தைப்பூசத் திருவிழா என்றாலே முதலில் நினைவுக்கு வருவது முருகப்பெருமான்தான். முருகப் பெருமானுக்கு எண்ணற்ற ஆலயங்கள் இருக்கின்றன ஒவ்வொரு ஆலயத்திலும் தைப்பூசத் திருவிழா மிக கோலாகலமாகக் கொண்டாடப்படும். தைப்பூசம் அன்று உற்சவங்கள் இல்லாத முருகப்பெருமான் கோயிலே இல்லை என்று சொல்லலாம் நம் நாட்டில் மட்டுமல்ல, வெளிநாட்டிலும் முருக பெருமான் கோயில்களில், தைப்பூசத் திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். மலேசியா, சிங்கப்பூர் பினாங்கு, மத்திய ஐரோப்பா நாடுகள், மேற்கு ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்து, அமெரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா முதலிய நூற்றுக்கணக்கான நாடுகளில் தைப்பூசத் திருவிழா சிறப்பாகக்  கொண்டாடப்படும்.

16. ஆறுபடை வீடுகள்

ஆனாலும், முருகனுக்கு மிக மிக விசேஷமான தலங்களாகச்  சொல்லப் படுவது ஆறு படை வீடுகள். ஆறுபடை வீடுகள் என்பது திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை. ஆறுபடை வீடுகள் தத்துவம் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஆறுபடை வீடுகள் என்பது குறித்து முதல் முதலில் நக்கீரரின் திருமுருகாற்றுப்படை இலக்கியத்தில் வருகிறது. அதில் ஆறுபடை என்று வரவில்லை ஆற்றுப்படை என்று வருகின்றது.

முருகப் பெருமானைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட இந்நூல் 317 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவால் ஆக்கப்பட்டுள்ளது. ‘ஆற்றுப்படுத்தல்’ என்னும் சொல் ‘வழிப்படுத்தல்’ என்னும் பொருள்படும். \”முருகாற்றுப்படை\” எனும்போது, வீடு பெறுதற்குப் பக்குவமடைந்த ஒருவனை வீடு பெற்ற ஒருவன் வழிப்படுத்துவது எனப் பொருள்படும் என்பது நச்சினார்க்கினியர் கூற்று. சமய தத்துவங்கள் ஒருவருடைய வாழ்க்கையின் உன்னதத்தை நோக்கி ஆற்றுப்படுத்துவதற் காகவே ஏற்பட்டன. ஆறு என்றால் வழி என்று பொருள். ஒருவன் வாழ்வில் உயர்வும் உன்னதமும் பெற உய்வும் பெற என்ன வழி என்பதைக்  காட்டுவது தான் ஆறுபடை வீடுகள்.ஆறுபடை வீடுகள் தத்துவம் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

17. ஆறுமுகமான பொருள் முருகன்

இந்த ஆறு என்கிற எண் முருகப் பெருமானோடு எப்படித் தொடர்பு படுகிறது என்பதைப் பார்க்க வேண்டும். முருகப் பெருமானுக்கு முகங்கள் ஆறு.
ஏறுமயிலேறி விளை யாடுமுகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்த்த முகம் ஒன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுகம் ஒன்றே
ஆறுமுகமான பொருள் நீ அருளல் வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே.
- என்று ஆறுமுகத்தின் தத்துவத்தை அருணகிரிநாதர் அற்புதமாகப் பாடுகின்றார்.

18. சடாட்சர மந்திரம்

முருகப் பெருமானின் மந்திரம் “சடாட்சர மந்திரம்” .ஆறு எழுத்துக்களை உடைய மந்திரம் “சரவணபவ” எனும் மந்திரத்தில் ஒவ்வொரு எழுத்தும் ஒரு சூட்சும தத்துவத்தைக்  குறிக்கிறது சரவணபவ  மந்திரத்தின் விளக்கத்தை வள்ளலார் அருளியிருக்கிறார். ச - என்பது உண்மை; ர - என்பது விஷய நீக்கம். வ - என்பது நித்ய திருப்தி; ண - என்பது நிர்விஷயம்; ப - என்பது பாவ நீக்கம்; வ- என்பது ஆன்ம இயற்கைக் குணம். இதை இன்னும் பலவிதமாகவும் சொல்லுவார்கள்.

யோக சாஸ்திர அடிப்படையிலும் சொல்லுவார்கள். ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு படை வீடு உண்டு. ஆறு எழுத்துக்கும் ஆறுபடை வீடு. முருகனுக்கு உரிய விரதம் சஷ்டி விரதம் அது ஆறாவது திதி. எண்  கணித சாஸ்திரத்தில் ஆறு  என்கிற எண் சுக்கிரனைக்  குறிக்கிறது. சுக்கிரன் செல்வத்தைக்  குறிக்கக்கூடிய கிரகம். இகத்திலும் பரத்திலும் ஒருவனுக்குத்  தேவையான எல்லா ஐஸ்வர்யங்களையும் தரக்கூடிய, சுக்கிரனின் ஆதிக்கம் உடைய, ஆறு என்கின்ற எண்ணின் தத்துவமாக விளங்குபவர் முருகப் பெருமான்.

19. பூசத்தில் முருகனை வணங்க வினை அறுபடும்

ஆற்றுப்படை வீடுகளை அறுபடை வீடுகள் என்றும் சொல்வார்கள். ஏற்கனவே தைமாதம் என்பது வினைகளையும், வினைகளால் ஏற்படுகின்ற விளைவுகளையும் குறிக்கக்கூடிய மாதம் என்ற தத்துவத்தைப் பார்த்தோம். பூச நட்சத்திரம் என்பது மனத்தைத்  தூண்டும் ராசியான கடக ராசியில் இருக்கக்கூடிய நட்சத்திரம் என்பதையும் பார்த்தோம். இந்த வினையும் விளைவுகளும் என்பது சக்கரத்தைப்போல் சுழன்று கொண்டே இருக்கும். இந்த கர்ம வினையின் சுழற்சியை விலக்கினால் தான் கதி மோட்சம் கிடைக்கும் .கர்ம வினையின் சுழற்சியை அறுக்கின்ற வீடுகள் இந்த படை வீடுகள் என்பதால் அறுபடை வீடுகள் என்றும் சொல்வார்கள். கூரான  ஞானவேல் கொண்டு நிற்கும் முருகப்பெருமானை, தைப்பூசம் அன்று அறுபடை வீடுகளிலும் வணங்குவதன் மூலமாக தீவினைகளை அடியோடு அறுத்துக் கொள்ளலாம்.

20. பழனியில் தைபூசம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழநிக்கு திருவாவினன்குடி, சக்திகிரி என்று பெயர். முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று. தை பூசத்தன்று முருகன் தாருகாசுரனை வதம் செய்த நிகழ்வு பழனியில் அனுஷ்டிக்கப்படுகிறது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோயில் ஒரு மலைக் கோயிலாகும். மூலவர் அருள்மிகு தண்டாயுதபாணி. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான போகர் மூலவர் சிலையை நவபாஷாணத்தால் செய்து நிறுவியுள்ளார். இக்கோயிலில் தைப்பூசம் பத்து நாட்கள் நடைபெறும் .ஏழாம் நாள் விழாவில் தேரோட்டம் நடைபெறும். முருகன் வள்ளி தெய்வயானையுடன் திருமணக் கோலத்தில் ரதவீதிகளில் தேரில் பவனி வருவார். பத்தாம் நாள் தெப்போற்சவம் நடைபெறும்.

21. காவடிச் சிந்து தந்த முருகன்

இசை வடிவங்களில் புகழ்பெற்ற எளிய மக்களால் பாடக்கூடிய வடிவம் காவடிச்சிந்து. தைப்பூசத்தன்று  பக்தர்கள் பல பகுதிகளிலிருந்தும்  பாதயாத்திரையாக பழனிக்கு வருகிறார்கள். நேர்த்திக் கடனாக  விரதமிருந்து  முருகனுக்குக்  காவடி எடுக்கிறார்கள். காவடி எடுப்பவர்கள் வரும் வழிகளில் பாடும் பாடல்கள் காவடிசிந்து என்று அழைக்கப்படுகின்றன. முற்காலத்திலே முருகப் பெருமானின் வழிபாட்டிற்காகப் பால் எடுத்து வருபவர்கள் ஆடல் பாடல்களுடன் ஆலயங்களை நோக்கிச் செல்வது வழக்கம். அப்படிச் செல்லும் பொழுது அவர்களின் ஆட்டத்திற்குப் பாடப்படும் பாடல் வகைகளிலிருந்து இக்காவடிச் சிந்து என்ற பாவடிவம் தோன்றி உருவாகியது. சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தினார்.

22. காவடி வகைகள்

கண்ணுக்கும், காதுக்கும், நெஞ்சுக்கும் பக்தி உருக்கத்தைத்  தரும் தைப்பூசம் அன்று  முருகப் பெருமானுக்கு எண்ணற்ற பக்தர்கள் காவடி எடுக்கிறார்கள். அந்தக் காவடி
யிலேயே எத்தனை எத்தனை வகைகள்?

1. அலகு குத்துதல் - நாக்கு, கன்னம், கை, உடம்பின் பிற பகுதிகளில் சிறிய பெரிய வேல் வடிவமுடைய ஊசியால் குத்திக்கொண்டு கோவிலுக்கு வருதல். சிலர் சின்ன ரதம் போன்ற வண்டியை பக்தர்களின் முதுகில் கொக்கிகளால் இணைத்து இழுத்து வருகிறார்கள்.

2. சர்க்கரை காவடி - சர்க்கரை பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.

3. தீர்த்தக் காவடி - கொடுமுடியிலிருந்து (கரூர் மாவட்டம்) காவிரி தீர்த்தம் பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.

4. பறவைக் காவடி - அலகு குத்தியவர் தொங்கியவாறு ஒரு வாகனத்தில் அழைத்து வரப்படுகிறார்.

5. பால் காவடி - பால்குடம் காவடியாக பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.

6. மச்சக்காவடி - மீன் நீருடன் பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.

7. மயில் காவடி - மயில் தோகையால் அலங்கரிக்கப்பட்ட காவடி பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது..இது தவிர சர்ப காவடியில் உண்டு.நம் நாட்டில் மட்டுமல்ல வெளிநாட்டிலும் காவடி எடுத்துக் கொண்டு முருகனின்  பாடல்களைக்  பாடிக் கொண்டு, அற்புதமான நாதஸ்வர இசையோடு வருவது மனதை உருக்கும். அதுதான் தைப்பூசம்.

23. திருத்தணியில் தைப் பூசம்

திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருத்தணி. ஆறுபடைவீடுகளில் ஐந்தாம்படை வீடு.  நக்கீரரின் திருமுருகாற்றுப்படையிலும் ,அருணகிரிநாதர் திருப்புகழிலும்  பாடிய தலம். முத்துசாமி தீட்சிதர் இந்தத் தலத்து முருகப்பெருமானை போற்றிக்  கீர்த்தனை  பாடியிருக்கிறார். இங்கு தைப்பூசத் திருவிழா  வெகு விமர்சையாக நடைபெறும் . விழாவை முன் னிட்டு
மூலவருக்குச் சிறப்பு அபிஷேகம் நடத்தப்படும்.

தங்கக கவசம், வைரக் கீரிடம், பச்சைக்கல் மரகத மாலை அணிவிக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள்  செய்யப்படும். பக்தர்கள் விரதமிருந்து உடலில் அலகு குத்தியும், காவடிகள் சுமந்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்துவர்  அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிவர்.

24. ஆட்டமும் பாட்டமும் கலந்த தைப்பூசம்

முருகப் பெருமான் சூரசம்ஹாரம் செய்த கடற்கரைத்  தலமான திருச்செந்தூரிலும் தைப்பூசம் விமரிசையாகக்  கொண்டாடப்படுகிறது. தை மாதம் நடைபெற இருக்கும் தைப்பூச நிகழ்வுக்காக மார்கழி மாதம் முதலே பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து பாதையாத்திரையாக செந்தூர் நோக்கி படையெடுக்கின்றனர். திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் முதலிய அருகாமை மாவட்டங்களின்  ஆயிரக்கணக்கான ஊர்களில்லிருந்து சாரி சாரியாகத்  திருச்செந்தூர் நோக்கி, கால்நடையாக, பாடல் களைப்  பாடிக் கொண்டே செல்லும் மக்கள் வெள்ளம் காணக் கிடைக்காத பரவசக் காட்சி. கொடியைப் பிடித்துக் கொண்டு,  காலில் பாத அணி அணியாது, கிடைத்த வண்டிகளில் முருகப்பெருமானை அலங்கரித்து வைத்து, பாட்டு பாடிக்கொண்டே அவர்கள் செல்லுகின்ற பொழுது, உள்ள  உணர்வு மற்ற மக்கள் மனதிலும் தைப்பூசத் திருநாளின் அதிர்வலைகளை ஏற்படுத்தும்.

25. இலங்கையில் தைப் பூசம்

சுவாமிமலை, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, மயிலம், எண்கண், எட்டுக்குடி, சிக்கல், மருதமலை முதலிய பல்வேறு முருகன் தலங்களில் மிக விரிவாக  தைப்பூசம் கொண்டாடப்படும். தைப்பூசத்தில் தான் யாழ்ப்பாண மக்கள் புதிர் எடுப்பர். உழவர்கள் தம் வயலில் விளைந்த நெல்லை முதன் முதலில் சமைத்து உண்ணும் சடங்கு புதிர் எடுத்தல் எனப்படும். தைப்பூச நாளில் சில இடங்களில் புதிர் எடுத்தல் நடைமுறையில் உள்ளது.

அதிகாலையில் எழுந்து வீடு வாசலைச் சுத்தம் செய்து வீட்டில் இருக்கும் ஆண்கள் நெல்லறுக்கும் அரிவாள், தேங்காய், கற்பூரம், கத்தி, கடகம் என்பவற்றுடன் வயலுக்குச் சென்று கிழக்கு முகமாக நின்று, சூரியனை வணங்கி, ஒருவர் தேங்காய் உடைக்க மற்றவர் முற்றிய புது நெற்கதிர் சிலவற்றை அறுத்து வீட்டிற்கு எடுத்து வருவர். அதனை பூஜை அறையில் வைத்து, அதிலிருந்து சில நெல்மணிகளை எடுத்து உமியை நீக்கி அந்த அரிசியைப் பசும்பாலுடன் கலந்து வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி பூஜைசெய்து உண்பர். முருகன் கோயில்களில் பால் குடம் எடுத்தும் காவடி எடுத்தும் தத்தம் நேர்த்திகளை நிறைவேற்றுவர்.

26. பத்துமலை முருகன்கோயில்

மலேசியாவில் கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ளது பத்து மலை முருகன்கோயில். இது ஒரு மலைக் கோவில்; சுண்ணாம்புப் பாறைகளாலானது. மலையை ஒட்டி சுங்கைப் பத்து ஆறு ஓடுகிறது. பத்து கோயில் தைப்பூச விழா உலகப்புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்து மலையில் குவிகிறார்கள். தைப்பூச நன்னாளில் பக்தர்கள் கோலாலம்பூர் மாரியம்மன் கோயிலிருந்து பத்து மலைக்கு ஊர்வலமாக நடந்து வருகிறார்கள். மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள ஜோர்ஜ் டவுன் மாநகர அருகில் உள்ள தண்ணீர் மலை கோயிலில் பினாங்கு தைப்பூசம் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பூசத் திருநாளை பினாங்கு மாநில அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. மலேசி யாவில் ஈப்போ அருகில் குனோங் சீரோ என்னுமிடத்தில் அமைந்துள்ள  சுப்பிரமணியன் கோயிலில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

27. பிரம்மஹத்தி தோஷம் நீக்கிய பூசம்

எல்லாச்  சிவத்தலங்களிலும் தைப் பூசம் கொண்டாடப்பட்டாலும், நமக்கு உடனடியாக நினைவுக்கு வருவது தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் அருகே அமைந்துள்ள திருவிடைமருதூர்தான். இத்தலத்தில் உள்ள இறைவன் சுயம்புலிங்க மூர்த்தியாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலமாகும்.

வருந்திய மாதவத்தோர் வானோரேனோர் வந்தீண்டிப்
பொருந்திய தைப்பூச மாடியுலகம் பொலிவெய்தத்
திருந்திய நான்மறையோர் சீராலேத்த விடைமருதில்
பொருந்திய கோயிலே கோயிலாகப் புக்கீரே.

விரதங்களால் மெய்வருந்திய மாதவத்தோர் வானவர் ஏனோர் வந்து கூடி தைப்பூச நாளில் காவிரியில் பொருந்தி நீராடி உலகவரோடு தாமும் மகிழுமாறும் திருத்தமான நான்மறைவல்ல அந்தணர்கள் முறையால் ஏத்தவும் இடைமருதில் பொருந்தியுள்ள கோயிலையே இருப்பிடமாகக் கொண்டுள்ளீர் என்பது தேவாரம்.

28. நான்கு நாட்கள் நடக்கும் கூத்துகள்

வரகுண பாண்டியன் என்ற பாண்டிய நாட்டு அரசன் வேட்டையாடச் சென்றபோது, ஒருமுறை  மாலை நேரம் முடிந்து இரவு தொடங்கி விட்டது. அரசன் குதிரை மீதேறி வரும் வழியில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு அந்தணன் மீது குதிரை ஏறியது. அவன் இறந்து விட்டான். அந்தணனைக்  கொன்ற அரசனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது.  சிவபக்தனான வரகுண பாண்டியன் மதுரை சோம சுந்தரரை வணங்க அவர் திருவிடைமருதூர் சென்று  வழிபடும்படி கூறினார்.எதிரி நாடான சோழ நாட்டுக்கு எப்படிச்செல்வது?இறைவன் வழி காட்ட மாட்டானா  என்ன? சோழ மன்னன் பாண்டிய நாட்டின் மேல் படையெடுத்து வந்தான்.

வரகுண பாண்டியன் சோழ மன்னனைப் போரில் தோற்கடித்து சோழநாடு வரை துரத்திச் சென்றான். அப்போது திருவிடைமருதூர் சென்றான். கிழக்குக் கோபுர வாயில் வழியாக நுழைந்தான்.  பிரம்மஹத்தியும் அந்தணனின் ஆவியும் அரசனைப் பின்பற்றிச் சென்றது. ஆனால்,  கோயிலினுள் செல்ல முடியவில்லை. அரசன் திரும்பி வரும்போது  பிடித்துக் கொள்ளலாம் என்று காத்திருந்தன. திருவிடைமருதூர் இறைவனோ வரகுண பாண்டியனை மேற்கு வாயில் வழியாக வெளியேறிச் செல்லும்படி ஆணையிட்டு அருள் புரிந்தார். அரசனும் பிரம்மஹத்தி நீங்கியவனாக பண்டியநாடு திரும்பினான்.

இதை நினைவுகூரும் வகையில் இன்றளவும் இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்கள் பிரதான கிழக்குவாயில் வழியாக உள்ளே சென்று மேற்கிலுள்ள அம்மன் சந்நதி கோபுரவாயில் வழியாக வெளியே செல்லும் முறையைக் கடைப்பிடித்து வருகிறார்கள். தைப் பூசத்தில் திருவிடைமருதூர் ஈஸ்வரனை வணங்க, பொல்லாத பாவங்களும் நில்லாது  தீரும். சோழர் ஆட்சியில் திருவிடை மருதூர் மகாலிங் கேஸ்வரர் கோயிலில் தைப்பூசதை ஒட்டி  நான்கு நாட்கள் கூத்துகள் நடந்ததாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

29. வள்ளலாரும் தைப்பூசமும்

தைப்பூசம் என்றாலே அடுத்து நமக்கு நினைவுக்கு வருவது வள்ளலார். “வாடிய பயிரைக்  கண்டபோதெல்லாம் வாடிய” வள்ளலார். “அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி” என்று பாடியவர், வள்ளலார். இந்தியாவில் ஆயிரக்கணக்கான வள்ளலார் மன்றங்கள் இயங்குகின்றன.சிறு  வள்ளலார் கோவில்கள் இயங் குகின்றன. அத்தனைக்  கோயில்களிலும் தைப்பூசத்  திருவிழா மிகச் சிறப்பாகக்  கொண்டாடப்பட்டு அன்னதானம் நடத்தப்படும்.

30.வடலூரில் அன்னதான விழா
வள்ளலாரின் மிகப்பெரிய தத்துவம்
1. ஜீவகாண்ய  ஒழுக்கம்.
2. தனி மனித ஒழுக்கம்
3. உயிர்களிடத்தில் அன்பு.
4. செய்யவேண்டிய தொண்டுகளில் மிகச்சிறந்த தொண்டு மனிதகுலத்தின் பசியைப்  போக்குதல்.

புத்தரைப்போலவே ஒருவனுக்கு பசி இருக்கும் வரை அவனிடத்திலே எந்த ஆன்மிக எண்ணமும் எழுவதற்கு வழி இல்லை என்று கண்டவர் வள்ளலார். எல்லாப் பிணிகளுக்கும் மூலக்காரணம் பசிப்பிணிதான் என்பதை எடுத்துச் சொன்ன வள்ளலார் கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு ஜனவரி மாதம் தைப்பூசத் திருநாளில் தான் சத்திய ஞானசபையைத்  தொடங்கினார். ஏழு திரைகளை விலக்கி ஜோதி தரிசனத்தை காட்டும் உன்னத விழாவான  தைப்பூச திருவிழா வடலூரில்  பெரு விழாவாகக் கொண்டாப்பட்டு வருகிறது.

ஒரு தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்றுதான் வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஒளியானார். வடலூருக்கு அருகில் உள்ள மேட்டுக் குப்பத்தில், தைப்பூசத்தன்று இலட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள். வள்ளலார் இராமலிங்க அடிகளார் தை பூச நாளை ஞானத்தின் வெளிப்புற நாளாக காட்டினார்கள்.

இப்படிப்  பல சிறப்புகளைச்  சொல்லிக் கொண்டே போகலாம். அதுவும் இந்த ஆண்டு தைப்பூசத்திற்கு இன்னும் ஒரு சிறப்பு உண்டு. தை மாதம் என்று சொல்லப்படும்  மகர ராசிக்கு உரிய  சனி பகவான் ஆட்சி பலத்தோடு   இந்த ஆண்டு இருக்கிறார். அடுத்த ஆண்டு அவர் கும்ப ராசிக்குப்  போய் விடுவார். மறுபடியும் நீங்கள் மகர ராசியில் சனி இருக்கும் காலத்தில் தைப்பூசத்தைத்  தரிசிக்க 27 வருடங்களாவது  காத்துக் கொண்டிருக்க வேண்டும். அத்தனை சிறப்பு இந்த ஆண்டு தைப் பூசத்திற்கு.

தொகுப்பு: எஸ்.கோகுலாச்சாரி

Tags : Thai Poosam ,
× RELATED காரைக்காலில் தைப் பூசம் தினத்தன்று...