
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மிஷ்கின், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான படம் ‘டிராகன்’. 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் 100வது நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது. இதில் படக்குழு பலர் கலந்துகொண்டனர். ஆனால், இந்நிகழ்ச்சியில் மிஷ்கின், ஹீரோயின் கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை. மிஷ்கின் நிகழ்ச்சிக்கு வரமுடியாததால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் பேசியதாவது, ‘‘நான் இப்போ பிரான்சில் இருக்கேன். அதனால் ‘டிராகன்’ படத்தின் 100வது நாள் விழாவுக்கு என்னால் வர முடியவில்லை. இங்கே ஒரு இந்திய கணவன், மனைவியைச் சந்தித்தேன். ‘டிராகன்’ படத்தைப் பார்த்திருக்காங்க. அதிர்ஷ்டவசமாக, படம் பார்த்து முடிச்சதும் நான் அவங்க முன்னாடி இருந்திருக்கேன். இப்போ எல்லோருமே என்னை ஒரு கல்லூரிப் பேராசிரியராக தான் பார்க்கிறார்கள். அதற்கு நான் அஸ்வத் மாரிமுத்துவுக்கு நன்றி சொல்லணும். அஸ்வத் மாரிமுத்து நிறைய நல்ல படங்கள் பண்ணி உச்சத்துக்குப் போகணும்.
நிறைய நல்ல படங்கள் பண்ணனும். ஏ.ஜி.எஸ். நிறுவன குடும்பத்துக்கு நான் கடமைப்பட்டிருக்கேன். நான் படங்கள்ல பணிபுரியும்போது நான் ரொம்ப கோபக்காரன்னு என்னைப் பற்றி புகார்களெல்லாம் வந்திருக்கு. ஆனால், என்னைக் குழந்தை மாதிரி தொட்டில்ல வச்சு இந்தப் படத்தோட உதவி இயக்குநர்கள் பார்த்துக்கிட்டாங்க. பிரதீப் ரங்கநாதன் ஒரு ஸ்வீட் பாய். இந்தக் காலத்துல 100 நாள்கள் படம் ஓடுறது பெரிய விஷயம். ஆனா, அதை அஸ்வத் பண்ணியிருக்கார்’’ என்று பேசியுள்ளார்.
