குவாலியர்: மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. காலையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றபோது பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மாலையில் பாடகர் கைலாஷ் கெர் பங்கேற்ற இசை நிகழ்ச்சி நடந்தது. அவர் பாடியபோது, திடீரென்று கட்டுக்கடங்காத ரசிகர்களின் கூட்டம், பாதுகாப்பு வேலிகளை உடைத்தபடியே மேடையை நோக்கி பாய்ந்தது.
சிலர் மேடையில் ஏறி பாடகரை நெருங்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த கைலாஷ் கெர், ‘இந்த இக்கட்டான நேரத்தில் நீங்கள் மிருகங்களை போல் நடந்துகொள்கிறீர்கள்’ என்று ரசிகர்களை பார்த்து ஆவேசமாக திட்டினார்.
இசைக்கருவிகள் மற்றும் கலைஞர்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டதாலும், கூட்டத்தினரை கட்டுப்படுத்த போதுமான பாதுகாப்பு இல்லாததாலும் அவர் நிகழ்ச்சியை பாதியிலேயே நிறுத்திவிட்டு வெளியேறினார். பதற்றம் ஏற்பட்ட நிலையில், பிறகு கூட்டத்தை போலீசார் கட்டுப்படுத்தினர். தலைவர்கள் வந்தபோது அங்கிருந்த பாது காப்பு, மாலையில் இல்லாததே இந்த குளறுபடிக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

