சிறுவயதில் ஆதரவற்ற நிலைமையில் சந்திக்கும் அருண் விஜய், சித்தி இத்னானி இருவரும் நண்பர்கள் ஆகின்றனர். வேலை காரணமாக வெளியூர் சென்ற அருண் விஜய், சில வருட இடை வெளிக்கு பிறகு தனது காதலி சித்தி இத்னானியை சந்திக்க பாண்டிச்சேரிக்கு வருகிறார். பணத்தின் மீது பேராசை கொண்ட சித்தி இத்னானி, அருண் விஜய்யின் காதலை நிராகரிக்கிறார்.
அப்போது தன்னை போன்ற உருவம் கொண்டவரை சந்திக்கும் அருண் விஜய், கோவாவில் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் அவரை கொன்றுவிட்டு, அவரது அடையாளத்தை வைத்து பணத்தை அனுபவிக்க திட்டமிடுகிறார். அதற்கு சித்தி இத்னானியும் சம்மதிக்கிறார். இந்நிலையில், மரணம் அடைந்த இன்னொரு அருண் விஜய்யால் இந்த அருண் விஜய், சித்தி இத்னானிக்கு என்ன பிரச்னை ஏற்படுகிறது? அதிலிருந்து தப்பித்தார்களா என்பது எதிர்பாராத கிளைமாக்ஸ்.
உபேந்திரா, காளி ஆகிய இரு வேடங்களில் அருண் விஜய் அட்டகாசமாக நடித்துள்ளார். பாடிலாங்குவேஜ், டயலாக் டெலிவரி, மேனரிசங்களில் தனி முத்திரையை பதித்துள்ளார். பணத்தின் மீது பேராசை கொண்ட சித்தி இத்னானி, திடீர் வில்லியாகிறார். ஹரீஷ் பெராடி, பாலாஜி முருகதாஸ், தான்யா ரவிச்சந்திரன், ஜான் விஜய், ‘கும்கி’ அஸ்வின், யோகி சாமி ஆகியோர் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
பாண்டிச்சேரி, கோவாவில் இரவு நேர மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் டிஜோ டாமி கடுமையாக உழைத்துள்ளார். ஆண்டனி யின் எடிட்டிங்கும், பி.சி ஸ்டண்ட்ஸின் சண்டைக் காட்சிகளும் சிறப்பு சேர்த்துள்ளன. சாம் சி.எஸ் இசையில் தனுஷ் பாடிய ‘கண்ணம்மா’ பாடல் ஒன்ஸ்மோர் ரகம். பின்னணி இசையில் கூடுதல் பலத்தை சேர்த்துள்ளார். லாஜிக்குகள் பற்றி கவலைப்படாத இயக்குனர் கிரிஷ் திருக்குமரன், ஆக்ஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, திரைக்கதையில் கவனம் செலுத்த தவறிவிட்டார்.

