×

கிறிஸ்துவில் நிலைத்திருந்து கடவுளை மாட்சிப்படுத்துங்கள்

(யோவான் 15: 1-8)

கடவுளை மாட்சிப்படுத்த வேண்டிய கடமை மனிதருக்கு உள்ளது. அப்படியானால் கடவுள் என்ன புகழ் விரும்பியா? மனிதர்கள் அதற்காகத்தான் படைக்கப்பட்டார்களா? கடவுளைச் சரியாகப் புரிந்து கொண்டால் இந்தக் கேள்வி எழுவதற்கு வாய்ப்பு இல்லை. கடவுள் மனிதரை முழு சுதந்திரத்துடன் செயல்படவே படைத்துள்ளார். இந்த சுதந்திரம் சக மனிதரோடும் இயற்கையோடும் இசைந்து வாழும் பொறுப்புணர்வை உள்ளடக்கியது ஆகும். கடவுளை சரியாகப் புரிந்துகொள்ள இயேசு கிறிஸ்து உதவுகிறார்.

இயேசு கிறிஸ்து கடவுளை மாட்சிப்படுத்தினார். அவர் தம் வாழ்நாளின் அதிக நேரத்தை ஜெப ஆலயத்திலோ அல்லது புகழ்மிக்க எருசலேம் தேவாலயத்திலோ செலவிடவில்லை. நீண்ட நேரம் மன்றாட்டில் ஈடுபட்டதில்லை. நீண்ட நெடிய மன்றாட்டுகளையும் அவர் ஊக்குவித்ததுமில்லை. அவர், ‘‘நான் செய்யுமாறு நீர் என்னிடம் ஒப்படைத்திருந்த வேலையைச் செய்து முடித்து நான் உம்மை உலகில் மாட்சிப்படுத்தினேன்’’ (யோவான் 17:4) என்று தம் தந்தையாகிய கடவுளிடம் கூறினார். நற்செய்தி நூல்களில் உள்ள பதிவின்படி அவர் பெரும்பாலான நேரத்தை மக்களிடையே களப்பணியாற்றுவதில் தான் செலவிட்டுள்ளார்.

அவ்வாறே மக்கள் நலனில் அக்கறை காட்டாமல் காணிக்கைகளை அள்ளிக் கொடுப்பதையும் அவர் பாராட்டவில்லை. அவர், ‘‘நீங்கள் புதினா, சோம்பு, சீரகம் ஆகியவற்றில் பத்தில் ஒரு பங்கைப் படைக்கிறீர்கள். ஆனால், திருச்சட்டத்தின் முக்கிய போதனைகளாகிய நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றைக் கடைப் பிடிக்காமல் விட்டு விடுகிறீர்கள்’’ (மத்தேயு 23:23) என்று கூறியுள்ளார். இயேசுவுக்கு முன் வாழ்ந்த மீக்கா தீர்க்கரும், ‘‘ஓ மானிடா, நல்லது எது என அவர் உனக்குக் காட்டியிருக்கின்றாரே! நேர்மையைக் கடைப் பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும், உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கிறார்’’. (மீக்கா 6:8) என கடவுளின் விருப்பத்தை விளக்கியுள்ளார்.

எனவே ஒரு கிறிஸ்தவர் நீதிச் செயல்களிலும், இரக்கச் செயல்களிலும் ஈடுபடுவதின் மூலம்தான் கடவுளின் பெயருக்கு மாட்சி ஏற்படுத்த முடியும். கடவுளுக்கு மாட்சியுண்டாக்கும் வாழ்க்கை வாழ ஒரு கிறிஸ்தவருக்கு இயேசு கிறிஸ்துவின் துணை தேவைப்படுகிறது. கிறிஸ்துவோடு நிலைத்திருத்தல் அவசியமாகிறது. இயேசு கிறிஸ்து இதை ஒரு அழகான உருவகத்தின் மூலம் விளக்கியுள்ளார். அவர் கடவுளை திராட்சைச் செடியைப் பராமரிப்பவராகவும், தம்மைத் திராட்சைச் செடியாகவும், தமது சீடர்களைத் திராட்சைச் செடியுடன் இணைந்திருக்கும் கொடிகளாகவும் வருணித்துப் பேசினார்.

திராட்சைச் செடியுடன் இணைந்து படரும் கொடிதான் திராட்சைப் பழங்களைத் தாங்கி நிற்கும். செடியோடு இணைந்திராத கொடி கனி தராது, காய்ந்துபோகும். அதுமட்டுமல்ல அந்தக் கொடி வெட்டி எறியப்பட்டு தீவைத்து எரிக்கப்படும். எனவே கிறிஸ்தவர் என தம்மைக் கூறிக்கொள்பவர் கிறிஸ்துவில் நிலைத்திருந்து கனி தரும் வாழ்க்கை வாழ அழைக்கப்படுகிறார். இவ்வாறு கிறிஸ்துவோடு நிலைத்திருந்து பிறர்க்கும், இவ்வுலகிற்கும் நன்மை தரும் செயல்களில் ஈடுபடுவதின் மூலம்தான் கடவுளின் பெயருக்குப் புகழ் சேர்க்கமுடியும்.

பேராயர் J. ஜார்ஜ் ஸ்டீபன். (Bishop, Madras).

Tags : Christ ,God ,
× RELATED பக்தர்களை காண தெய்வம் நேரில் வரும் அதிசயம்!