எத்திக்கும் கொண்டாடும் தித்திக்கும் தீபாவளி

நன்றி குங்குமம் ஆன்மிகம்

முத்துக்கள் முப்பது

24-10-2022 தீபாவளி பண்டிகை

எஸ்.கோகுலாச்சாரி

வண்ணமயமான ஒளியோடு மகிழ்ச்சி மத்தாப்புகள் பூத்து வெடிக்க, மங்கலங்கள் பொங்கிடும் ஒரு மகத்தான பண்டிகை தீபாவளி. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிப் பண்டிகை பல புதுமையான அனுபவத்தை நமக்குத் தருகிறது. அந்தப் பண்டிகை பற்றிய சில செய்திகளை முப்பது முத்துக்களாகக் காண்போம்.

1. மங்களகரமான நாளாக தீபாவளிப் பண்டிகை

இவ்வாண்டு தீபாவளிப் பண்டிகை ஐப்பசி மாதம் 7-ஆம் தேதி அக்டோபர் மாதம் 24-ஆம் தேதி திங்கட்கிழமை வருகிறது. அன்று சந்திரனுக்குரிய அஸ்தம் நட்சத்திரம். ஜோதிட ரீதியாக இது ஒரு சுபத்துவமான விஷயம். காரணம், சந்திரன் சுயசாரம் பெற்றிருக்கிறார். தன்னுடைய நட்சத்திர காலிலேயே நிற்கிறார் என்பது ஒரு பலம். அதே கன்னி ராசியில் சுக்கிரன் நீசபங்கம் பெற்று இருப்பது மற்றொரு பலம். ராசி அதிபதி புதன், ஆட்சி பெற்று இருப்பது மற்றும் ஒரு பலம். இதனை முதன்மைச் சுபகிரகமான குரு, தனது சொந்த ராசியான மீன ராசியில் இருந்து பார்ப்பது ஒரு பலம். குருவும், சந்திரனும் கேந்திர பார்வை இணைவு பெற்ற மகத்தான, மங்களகரமான நாளாக இந்தத்  தீபாவளிப் பண்டிகை அமைந்திருக்கிறது.

2. மகிழ்ச்சியின் தொகுப்பே தீபாவளிப் பண்டிகை

தீபாவளி பண்டிகை அற்புதமானது. காலம் காலமாகக் கொண்டாடப்படுவது. மகிழ்ச்சியின் ஒட்டுமொத்தமான ஒரு தொகுப்பே தீபாவளிப் பண்டிகை. அதனை சகல மக்களும் கொண்டாடுகின்றனர். சைவர்கள், வைணவர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள் என பல சமயத்தவரும் இந்தத் தீபாவளி பண்டிகையை வெவ்வேறு பெயர்களில் தங்களுக்கு உரிய பண்டிகையாகக் கொண்டாடுகின்றனர். இந்தியாவின் பல பகுதியில் வாழும் மக்களும் தங்கள் பகுதிக்குரிய பாரம்பரியத்தோடு கொண்டாடுகின்ற பண்டிகை தீபாவளிப் பண்டிகை.

3. பன்முகத் தோற்றம்

இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் தீபாவளி கொண்டாடும் முறை, விதம்விதமாக இருக்கிறது. சிலர் மூன்று நாட்கள் கொண்டாடுகின்றனர். சிலர் 5 நாட்கள் கொண்டாடுகின்றனர். இப்படி வெவ்வேறு மரபுகள் இந்த தீபாவளிப் பண்டிகையில் இருப்பது ஒரு சுவாரஸ்யம். அதைப்போலவே செய்யும் இனிப்புகள், வழிபாட்டு முறைகள் என பன்முக தோற்றத்தோடு, இந்த ஒற்றை பண்டிகை உல்லாசம் தரும் உயர்ந்த பண்டிகையாக விளங்குகிறது. எப்படிப்பட்ட முறையில், எந்தக் கதைப் பின்னணியில், எந்த சம்பிரதாயத்தின் படி கொண்டாடினாலும், தீபாவளியின் அடிப்படை சந்தோஷம் அகலாமல் அப்படியே இருக்கிறது.

4. விழா நாள் என்றால் என்ன?

நம்முடைய சமய மரபில் எந்தத் தீமையும் “விழும்” நாள்தான் “விழா” நாள். சூரபத்மன் விழுந்த நாள், கந்தசஷ்டி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. ராவணன் விழுந்த நாள், நவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது. ராவணனை வெற்றி கண்டு, ராமன் தன்னுடைய நாட்டுக்குத் திரும்பிய நாள், தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. மகிஷாசுரனை பராசக்தி வீழ்த்திய நாள், விஜயதசமி நாளாகக் கொண்டாடப்படுகிறது. அதைப்போலவே, தீமையைச் செய்த நரகன் விழுந்த நாள்தான், ஆனந்தம் தரும் தீபாவளி விழா நாளாக கொண்டாடப்படுகிறது.

5. யுகங்களை இணைக்கும் நரகன் கதை

நரகாசுரன் கதையின் இன்னொருசிறப்புண்டு. வெவ்வேறு அவதாரங்களை நரகாசுரன் கதை இணைக்கிறது. வராக அவதாரத்தில் தோன்றிய கதை, கண்ணன் அவதாரத்தில் முடிகிறது. வாமன திருவிக்ரம அவதாரமும்கூட, அடுத்தடுத்து நடந்த அவதாரங்கள். ஆனால், நரகாசுரனின் தோற்றமும் அழிவும் வெவ்வேறு யுகங்களை இணைக்கிறது. வெவ்வேறு அவதாரங்களை இணைக்கிறது என்பது புராண இதிகாசங்களை ஆராய்பவர்களுக்கு வியப்பான செய்தி. முதல் யுகத்தில் தோன்றிய நரகாசுரன், மூன்றாம் யுகமான துவாபரயுகத்தில், பகவான் கண்ணனால் வெல்லப்படுகின்றான். அந்த நரகாசுரன் கதையை நினைத்து கொண்டாடும் தீபாவளி பண்டிகை, நாம் வாழும் கலியுகத்திலும் உலகெங்கிலும் கொண்டாடப்படுகிறது. இது வேறு புராணக் கதைகளுக்கு இல்லாத சிறப்பு.

6. தீபாவளிக்கு நரகாசுரன் கதை மட்டும் தானா?

மற்றுமொரு ஆய்வுக்குரிய செய்தி. நரகன் கதைக்கு முன், அதே தினம் தீபாவளியாக வெகு காலமாகக் கொண்டாடப்பட்டது.

1. அன்னபூரணியாக அம்பாள் சிவனுக்கு பிச்சை அளித்து சாபத்தை போக்கிய நாள்.

2. கங்கை பூமிக்கு வந்து மண்ணை புனிதப் படுத்திய நாள்.

3. மருத்துவக் கடவுளான தன்வந்திரி பகவானின் அவதார நாள்.

4. பாற்கடலில் மகாலட்சுமி தோன்றிய நாள்.

5. மகாலட்சுமி மாலவன் மார்பில் அமர்ந்து அவனை திருவாழ்மார்பனாக ஆக்கிய நாள். (மஹாலஷ்மி திருமண நாள்)

6. சிவனை அடைவதற்காக பார்வதிதேவி நோன்பு நோற்று சிவனை அடைந்த நாள். பத்ம புராணத்தில் மகாலட்சுமியின் அவதாரம் தீபாவளி அன்று நடந்ததாகவும், விஷ்ணுபுராணத்தில் நரக சதுர்த்தி தினமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

7. தீபாவளி என்பது காரணப்பெயர்

ஆவளி என்பது வரிசை. வரிசையாக பெயர்களைச் சொல்லி அர்ச்சனை செய்வதை நாமாவளி என்று சொல்கிறோம் அல்லவா. அதைப்போல தீபங்களை வரிசையாக ஏற்றி வைப்பதையே தீபாவளி என்கிறோம். நரகாசுரன் விழுந்த தினமும் ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசி ஆக இருந்ததால், ஏற்கனவே கொண்டாடப்பட்ட தீபாவளியை, நரகன் கதையோடு இணைத்துக்கொண்டாட ஆரம்பித்தார்கள் என்று கொள்ள வேண்டும்.
 

8. ஏன் அயோத்தி மக்கள் கொண்டாட வேண்டும்?

அயோத்தியில் ராமன் அவதரித்த போது, எல்லாம் ஒளிமயமாக இருந்தன. அயோத்தி மக்கள் மகிழ்ச்சியோடு இருந்தார்கள். ஆனால், ராமன் அயோத்தியை விட்டு காட்டுக்குச் சென்றவுடன், காடு ஒளிமயமானது. அயோத்தி இருண்டது. எந்த இடத்தில் தெய்வீக சான்னித்தியம் இருக்கிறதோ, அந்த இடம் ஒளிரும். எந்த இடம் தெய்வீக சான்னித்தியம் இழக்கிறதோ அந்த இடம் இருளடையும். ராமன் பிரிந்த பிறகு, அயோத்தி மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். அவர்கள் மனம் முழுக்க துக்கம். இதை கம்பர் பதிவு செய்கின்றார்; கிள்ளையொடு பூவை அழுத; கிளர் மாடத்துஉள் உறையும் பூசை அழுத; உரு அறியாப்பிள்ளை அழுத; பெரியோரை என் சொல்ல?

வள்ளல் வனம் புகுவான் என்று உரைத்த மாற்றத்தால். பதினான்கு ஆண்டுகள் கழித்து ராமன் வனவாசம் முடிந்து திரும்பியவுடன் அயோத்தியின் அக இருள், புற இருள் அகன்றது. அவர்கள் ஆனந்தம் அடைந்தனர். தங்கள் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக எல்லா இடங்களிலும் வரிசையாக தீபங்களை ஏற்றி கொண்டாடினர். எனவே, மகிழ்ச்சியை ஆனந்தத்தை அடைவதற்கு தீபங்களை ஏற்ற வேண்டும். அது தொன்மையான மரபு.

9. இலக்கியங்களில் தீபாவளி

பழந்தமிழ் இலக்கியங்கள் தொடங்கி, நவீன இலக்கியங்கள் வரை தீபாவளிப் பண்டிகை, ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பிடித்த பண்டிகையாக இருக்கிறது. பழந்தமிழ் இலக்கியங்களில், ஐப்பசி மாதத்தில் தீபங்கள் ஏற்றி விழாக்கள் கொண்டாடப்பட்டதாக பல சான்றுகள் உண்டு. தீபங்களை ஏற்றி வழிபடுவது என்பது தமிழ் மரபுக்குப்  புதிதல்ல. திருமாலை தீபத்தின் ஒளியாக ஆழ்வார்கள் பாசுரம் பாடுகின்றார்கள். “அண்டமாம் எண் திசைக்கும் ஆதியாய் நீதியான பண்டமாம் பரம ஜோதி” என்றும், “விளக்கொளியாய் முளைத்தெழுந்த” என்றும் திருமங்கையாழ்வார் பாசுரம் பாடுகின்றார். “என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர் ஜோதி” என்று நம்மாழ்வார் பாசுரம் பாடுகின்றார்.

10. சிவனின் ஜோதி வடிவம்

திருவெம்பாவையின் முதல் பாசுரம் சிவனின் ஜோதி வடிவைக்குறிக்கிறது. ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் ஜோதியை என்றே ஆரம்பிக்கிறார் மாணிக்க வாசகர். தீப மங்கள ஜோதி நமோ நமஹ என்று அருணகிரியாரும் பாடுகின்றார். “அறுமீன் சேரும் அகவிருள் நடுநாள் மறுகுவிளக்குறுத்து” என்ற அகநானூற்றுப் பாடல் அமாவாசை நாளில் விளக்கு ஏற்றுவதைக் குறிக்கிறது. ஒரு தீபம் பல பாவங்களைப் போக்கும். திருமறைக்காடு (வேதாரண்யம்) என்று ஒரு சிவத்தலம் உண்டு. இந்த கோயிலில் எரியும் விளக்கில் இருந்த நெய்யை உண்ணுவதற்கு வந்த எலி, அணையும் நிலையில் இருந்த திரியைத் தூண்டியதால், மறு பிறப்பில் மாவலிச் சக்கரவர்த்தியாகப் பிறந்தார். இந்த செய்தியை, அப்பரடிகள் திருக்குறுக்கைத் தல தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார். ஒரு தீபத்திற்கே இத்தனை வல்லமை என்று சொன்னால், வரிசையாக தீபம் ஏற்றுவது (தீப ஆவளி) எத்தனை பெரியபுண்ணியம்!

11. சரித்திரத்தில் தீபாவளி

தீபாவளி திருநாள் இந்திய சரித்திர குறிப்புகளிலும் பதியப்பட்டிருக்கிறது. 2000 ஆண்டுகளுக்கு மேலாக தீபாவளி பற்றிய அகச்சான்றுகள் உள்ளன. இந்தியாவில் கி.பி. ஆயிரத்து நூறாம் ஆண்டிலேயே தீபாவளி கொண்டாடும் பழக்கம் இருந்திருப்பதாக சில வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. கி.பி.1117-ல் வாழ்ந்த சாளுக்கிய மன்னன், ஆண்டு தோறும் சாத்யாயர் எனும் அறிஞருக்கு தீபாவளிப் பரிசு வழங்கியதாக கன்னட கல்வெட்டு ஒன்றும் கிடைத்துள்ளது.

கி.பி.1250-ல் எழுதப்பட்ட லீலாவதி எனும் மராட்டிய புத்தகத்தில் எண்ணெய் தேய்த்து நீராடுவதைப் பற்றிய குறிப்புக்களும் உள்ளன. சந்திரகுப்த விக்ரமாதித்தன் தீபாவளி திருநாள் அன்று, அரியணை அமர்ந்ததாக சரித்திரம் கூறுகிறது. சக்ரவர்த்தி ஹர்ஷர், 7-ஆம் நூற்றாண்டில் எழுதிய “நாகானந்தம்” என்கிற நூலில் “தீபப்ரதிபனு ஸ்தீவம்” என்ற பண்டிகை தீபாவளி என்கிறார். 7-ஆம் நூற்றாண்டு, காஷ்மீரத்து நூல் “நீலமேக புராணம்”, தீபோத்ஸவம் என்கிறது. புத்தாடை அணிந்து ஒளி விளக்கு ஏற்றி கொண்டாடுவது என்கிறது. குடந்தை சாரங்கபாணி பெருமாள் கோயில் கல்வெட்டு, தீபாவளி அன்று நடக்கும் சிறப்பு வழிபாடு பற்றிக் கூறுகிறது. காளஹஸ்தி கோயில் கல்வெட்டு, தீபாவளி அன்று நடைபெற வேண்டிய விசேஷ பூஜை பற்றிக் கூறுகிறது.

12. வித்தியாசமான பண்டிகை

சாஸ்திர ரீதியாகவும், தீபாவளிப் பண்டிகை ஒரு வித்தியாசமான பண்டிகை. தேய்பிறை சதுர்த்தசியில் கொண்டாடப்படுகிறது. அதோடு இணைந்து அமாவாசை நாளும் வந்துவிடுகிறது. அமாவாசை நாள் என்பது முன்னோர்கள் வழிபாட்டுக்குரிய நாள். முன்னோர்களை நினைத்து எள்ளும் நீரும் இறைத்து தர்ப்பணம் செய்ய வேண்டிய நாள். தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளில் எண்ணெய் முழுக்கு போடுவதை சாஸ்திரம் அனுமதிப்பதில்லை.

அதைப்போலவே, சூரிய உதயத்திற்கு முன்னால் தைல ஸ்தானம் எனப்படும் எண்ணெய்க் குளியலை சாத்திரங்கள் அனுமதிப்பதில்லை. ஆனால், தீபாவளியில் இந்த விதிகள், விதி விலக்குகள் ஆகின்றன. தைலத்தில் சகல ஐஸ்வரியங்களையும் தருகின்ற மகாலட்சுமியும், வெந்நீரில் சகல பாவங்களையும் போக்கும் கங்கையும் அன்றைய தினம் பிரசன்னமாகி இருக்கிறார்கள். இன்னும் விரிவாகச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், எண்ணெயில் மகாலட்சுமியும், அரப்புத் தூளில் சரஸ்வதி தேவியும், சந்தனத்தில் பூமாதேவியும், குங்குமத்தில் கௌரியும், புஷ்பத்தில் மோகினியும், தண்ணீரில் கங்கையும், புத்தாடையில் மகாவிஷ்ணுவும், இனிப்பு பட்சணங்களில் அமிர்தமும், இனிப்பு மருந்தில் தன்வந்திரி பகவானும் இருப்பதாக ஐதீகம்.

13. ஏன் தீபம் ஏற்ற வேண்டும்?

தீபாவளிப் பண்டிகை ஐப்பசியில் வருகிறது. சில ஆண்டுகளில் புரட்டாசி கடைசியிலும் இடம்பெறுவதுண்டு. ஐப்பசி மாதம் என்பது தட்சிணாயனத்தின் நடுப்பகுதி. உதாரணமாக, ஆடிமாதம் இரவில் முதல் பகுதியையும். மார்கழி மாதம் இரவின் கடைசி பகுதியையும் தட்சிணாயண நேரமாகக் கணக்கிட்டால் ஐப்பசி மாதம் நடுப்பகுதியை குறிக்கும். சித்திரையில் உச்ச மடையும் ஒளிக் கோளான சூரியன், நேரெதிர் ராசியான துலா ராசியில் நீசம் அடைகிறார். சூரியன்தான், மற்ற கிரகங்களுக்கு ஒளி தருபவர்.

ஆத்மகாரகன். பிதுர்காரகன் என்றெல்லாம் இவரை அழைப்பார்கள். இவர் ஒளி குன்றி பலவீனம் அடையும் இந்த மாதத்தில், அவருடைய பலவீனத்தை போக்கவும் ஆத்ம பலத்தை அதிகரிக்கவும் செய்யும் பிரார்த்தனையாகவே தீபங்களை ஏற்றி கொண்டாடுகின்றோம். ஒரு தீபம் ஏற்றும் போது, அதனுடைய வெளிச்சம் எல்லா திசையிலும் பரவி எல்லா ஜீவராசிகளுக்கும், ஈ, எறும்புக்கும்கூட நன்மையைச் செய்கிறது.

14. மகாலட்சுமியை வரவேற்கவே தீபங்கள்

 தீபங்கள் ஏற்றுவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. துலா ராசி, துலா ராசியின் கிரகம் சுக்கிரன். சுக்கிரனின் அதிதேவதை மகாலட்சுமி. சுக்கிரமதத்தை வைதீக மதம் என்பார்கள். சுக்கிரனின் எழுச்சியை மங்கள எழுச்சியாகச் (மஹாலஷ்மி அவதாரமாக) சொல்வார்கள். அஷ்ட ஐஸ்வரியங்களும் சுக்கிரனால் கிடைக்கும். சகல வித்தைகளும் சுக்கிரனால் சாத்தியமாகும். சகல ஆனந்தத்திற்கும் சுக்கிரன்தான் காரகர். அதனால்தான் ஆண்டாள், திருப்பாவையில் சுக்கிர எழுச்சியை “வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று” என்று சுக்கிர உதயத்தைப் பாடினாள். சுக்கிரனுக் குரிய மாதமான ஐப்பசியில், மகாலட்சுமியை வரவேற்கவே தீபங்களை வரிசையாக ஏற்றுகின்றோம். மிக முக்கியமாக லட்சுமி குபேர பூஜையைச் செய்கின்றோம்.

15. தீபாவளியோடு இணையும் பண்டிகைகள்

ஐப்பசி மாதம் என்பது தீபாவளிப் பண்டிகை மட்டுமல்ல, மற்ற பல பண்டிகைகளின் மிகச்சிறந்த தொகுப்பு மாதம் என்று சொல்லலாம். பெரும்பாலான புண்ணிய விரதங்கள் தீபாவளிக்கு முன்னும் பின்னும், தீபாவளிப் பண்டிகையோடு இணைந்தும் அமைந்திருக்கும் அழகுஐப்பசி மாதத்திற்கு உரியது. இவ்வாண்டின் ஐப்பசி மாதப் பிறப்பே வலிமைமிக்க பூச நட்சத்திரத்தில் உதயமாகிறது. அன்றைய தினம், ராதா ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. ஐப்பசி மாதம் முழுமைக்கும் உரிய புண்ணிய நீராட்டமான துலா ஸ்நானம் அன்றுதான் தொடங்குகிறது. ஐப்பசியில் தீபாவளிக்கு மறுநாள் காவிரியில் துலா ஸ்நானம் செய்யவேண்டும் என்கிறார்கள். கன்னியின் புனிதமான காவேரி அல்லவா?

16. ஆயுள் அதிகரிக்கச் செய்யும் பிரதோஷ விரதம்

தீபாவளிக்கு முன் ஏகாதசி, துவாதசி முதலிய விரதங்கள் அமைந்திருக்கின்றன. தீபாவளிக்கு முதல் நாள், ஆயுள் அதிகரிக்கச் செய்யும் பிரதோஷ விரதம் இருக்க வேண்டும். அன்றைக்கு யம தீபம் ஏற்ற வேண்டும். அன்று சூரியன் சந்திரனுடைய ஹஸ்த நட்சத்திரத்தில் பிரவேசிப்பதால், ஆதித்ய ஹஸ்த தின வழிபாடு நடத்த வேண்டும். தன திரயோதசி என்பார்கள். செல்வத்தை அள்ளித்தரும் திரயோதசி நாள் என்று இந்த நாளைச் சொல்வதுண்டு.

17. தன்வந்திரி பகவான்

தேவர்கள் அசுரர்களால் ஏற்பட்ட வருத்தத்தை நீக்கி கொள்ளவும், புதிய எழுச்சியை பெறவும், இழந்த செல்வங்களை பெறவும் பாற்கடலை கடைந்தார்கள். அப்பொழுது, அந்த பாற்கடலில் பலவிதமான மங்கலப் பொருட்கள் தொடர்ந்து கிடைத்தன. நிறைவாக மகாவிஷ்ணுவின் அவதாரமான மருத்துவக் கடவுளான தன்வந்திரி பகவான் அவதரித்தார். எனவே இந்த நாளை தன்வந்திரி ஜெயந்தி தினமாகக் கொண்டாடுவார்கள். ஆயுர் வேதத்தில் தன்வந்திரி பகவானை நினைத்துதான் மருத்துவம் செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். பெரியாழ்வார் மறுபிறவி நீக்கும் மருந்தை மகாவிஷ்ணு வைத்திருக்கிறார். அதனால் அவன் மருத்துவனாய் நின்ற மாமணி வண்ணன் என்று குறிப்பிடுகின்றார். வேதமும், வைத்யோ நாராயண ஹரி: என்று சொல்லுகின்றது.

18. கங்கா ஸ்நானம்

 கங்கைக்கு மூன்று பெயர் உண்டு. அது ஆகாயத்தில் இருக்கும் போது மந்தாகினி. பாதாளத்தில் அதற்குப் பெயர் பாகீரதி. பூமியில் அதற்கு கங்கை. கங்கையை நினைத்து வணக்கம் தெரிவித்தாலும், கண்ணாரக்கண்டு தரிசனம் செய்தாலும், கங்கை நீரை ஸ்பரிசித்தாலும், கங்கையில் மூழ்கினாலும், கங்கையில் நின்று கொண்டு பூஜித்தாலும், பித்ருக்களுக்கு அர்க்யம் விட்டாலும், கங்கையில் மூழ்கி அதனுடைய மண்ணெடுத்து வணங்கினாலும் சகல பாவங்களை நசுக்கும். ஆதிசங்கரர் அருளிய `கங்காஷ்டகம்’ எனும்  ஸ்லோகத்தை தீபாவளியன்று அவசியம் பாராயணம் செய்ய வேண்டும்.

19. அனைவரோடும் பகிர்ந்து கொள்ள வேண்டும்

நரகன் ஜீவாத்மா. அவனிடத்திலே மண்டியிருந்த மாயை என்னும் இருள் நீங்கியது. ஜீவாத்மாவின் அகங்காரமாகிய இருட்டு ஒழிந்தால், அப்பொழுது பிறப்பது மகிழ்ச்சி ஆனந்தம். இந்த ஆனந்தத்தை நாம் அனைவரோடும் பகிர்ந்து கொள்ள வேண்டும். தீபாவளியில் மூன்று பொருள்களை பிறருக்கு அளிக்க வேண்டும். ஒன்று, நாம் புத்தாடைகள் வாங்கும் பொழுது யாராவது புத்தாடை வாங்க முடியாத ஒரு ஏழைக்கு நம்மால் இயன்ற புத்தாடையை வாங்கித் தரவேண்டும்.

தண்ணீர் தானம் செய்ய வேண்டும். யாராவது ஒரு அதிதிக்கு, நாம் உணவளிக்க வேண்டும். குறைந்தபட்சம் நம்முடைய வீட்டில் உள்ள பட்சணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதை ஆண்டாள், “அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்” என்ற பாசுரத்தில் தெரிவிக்கிறாள். அம்பரம் என்பது ஆடைகள். ``ஏக ஸ்வாது ந புஞ்சித:’’ என்று  ஒரு ஸ்லோகம் இருக்கிறது. சோறு, தண்ணீர் போன்றவற்றை பிறருக்கு தராமல், தனித்து அனுபவிக்கக்கூடாது என்பது பொருள்.

20. மத்தாப்பு தத்துவம்

தீபாவளியன்று பட்டாசு வெடிக்கிறோம். தரைச்சக்கரம் போன்ற மத்தாப்புக்களை விடுகிறோம். பட்டாசு மற்றும் மத்தாப்புகள் வெடிக்கும் மரபும், அக்காலத்திலேயே இருந்திருக்கின்றன. மத்தாப்பு வெடியில் உள்ள மருந்து வேலை செய்ய, அதில் தீப்பொறி இணைக்க வேண்டும். மத்தாப்புக்கள் வண்ணமயமாக ஜொலித்து, மகிழ்ச்சி அளித்துவிட்டு கீழே விழும். மத்தாப்பு சொல்லும் நீதி இதுதான்.

பிறருக்கு ஒளி கொடுத்துச் சுழல வேண்டும். சில மத்தாப்பு வெடிக்காமல் இருக்கும். சிலது வெடித்து இருக்கும். இரண்டும் தரையில் கிடக்கும். ஆனால், வேறுபாடு உண்டு. முடிவு எல்லோருக்கும் ஒன்றுதான். எப்படி முடிவோம் என்பது மனித வாழ்வில்லை. எப்படி வாழ்ந்தோம்? யாருக்கு மகிழ்ச்சி தந்தோம்? என்பதுதான் வாழ்வு. வெடித்த வெடி போல் மற்றவர்களுக்கு, மகிழ்ச்சியைத் தந்து விட்டு கீழே விழ வேண்டுமே தவிர, யாருக்கும் ஆனந்தம் இல்லாமல், யாருக்கும் பிரயோஜனம் இல்லாமல், வெட்டியாக ஒருவருடைய வாழ்க்கை அமைந்து விடக்கூடாது என்பதுதான், வெடிக்காத மத்தாப்பும் வெடித்த மத்தாப்பும் காட்டும் தத்துவம்.

21. விரதம் என்பதற்கு என்ன பொருள்?

தீபாவளிப் பண்டிகையும் ஒரு தெய்வீகப் பண்டிகைதான். மற்ற பண்டிகைகளில், நாள் முழுக்க ஒவ்வொரு உபவாசம் இருந்துவிட்டு பிறகு உண்போம். ஆனால், தீபாவளி பண்டிகையில் எண்ணெய் குளித்து, புத்தாடை அணிந்து, பலவிதமான இனிப்பு பலகாரங்களை மகிழ்ச்சியோடு உண்கிறோம். விரதம் என்பதற்கு என்ன பொருள் என்று பார்க்கவேண்டும். பாவச் செயல்களை விட்டுவிட்டு, நல்ல குணங்களோடு இருப்பதும், ஆசைகளை ஒழிப்பதும்தான் விரதம். விழா என்றால் ஆனந்தம். நிறைய பொருள்களை, உடைகளை வாங்குகின்றோம். செல்வம் சுழல்கிறது. அப்படி சுழலும் நாள்தான் தீபாவளி. அதனால்தான் பொருளாதாரத்திற்கு அதிபதியான குபேரனை எண்ணி, லட்சுமி குபேர பூஜையை நாம் செய்கின்றோம்.

 22. குபேரன் செல்வம் பெற்ற தீபாவளி

குபேரன், தீபாவளியில் செல்வங்களைப்பெற்றான் என்பார்கள். எனவே, வீடுகளிலும் குபேரன் தொடர்புடைய சில கோயில்களிலும், விசேஷ பூஜைகளும் ஹோமங்களும் செய்வார்கள். இது தவிர, குபேரனுக்கு என்று சில தலங்கள் உண்டு. குபேரன் நவநிதியம் பெற்ற தலம் திருக்கோளூர். நவ திருப்பதிகளில் எட்டாவது திருப்பதியாகவும், நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஐம்பத்தியேழாவது திவ்ய தேசமாகவும், நவகிரகங்களில் செவ்வாய்த் தலமாகவும் இத்திருத்தலம் அமைந்துள்ளது.

இன்னும் சில முக்கியமான குபேர தலங்களும் உண்டு. சிவபுரம், திருவானைக்கா, திருவண்ணாமலை, விருதாச்சலம், (குபேர தீர்த்தம்) திருத்தேவூர், கல்லிடைக் குறிச்சி, கீவளூர், செட்டிகுளம், தஞ்சாவூர், செல்லூர் என பல ஊர்களில் குபேர சந்நதிகள் உண்டு. தீபாவளி அன்று இப்படிப்பட்ட ஏதேனும் குபேரன் தொடர்புடைய சந்நதிகளுக்கோ, அல்லது மகாலட்சுமி கோயில் கொண்டிருக்கும் பெருமாள் சந்நதிகளுக்கோ சென்று, குறைந்தபட்சம் ஒரு தீபம் ஏற்றி வழிபடுவது, தீபாவளிப் பிரார்த்தனையை முழுமையாக்கும்.

23. ஆலயங்களிலும் கொண்டாடப்படும் தீபாவளி

திருமலையிலும், ஸ்ரீரங்கம் போன்ற சில தலங்களிலும் தீபாவளிக்கு முதல் நாள் இரவு, இரண்டு மூன்று பெரிய பாத்திரங்களில், எண்ணெயை பெருமாளுக்கு படைத்து எல்லோருக்கும் கொடுப்பார்கள். மறுநாள் காலை உபய நாச்சிமார்களோடு பெருமாள் திருமஞ்சனம் கண்டருளுவார். இதை போலவே, சிவன் கோயில்களிலும் சிறப்பு அலங்காரங்களும் பூஜைகளும் உண்டு. சில கோயில்களில் வீதி உலா இருக்கும். சித்தாய்மூர் பொன் வைத்தநாதர் கோயில் சிவன், வறுமையில் இருந்தவளுக்குப் பொன் வைத்துக் காத்ததால், இந்தத் தலத்து இறைவன் `பொன்வைத்தநாதர்’ எனப்பட்டார். பொன்வைத்தநாதரை வழிபட செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது ஐதீகம்.

திருக்கொள்ளம்புதூர் வில்வாரண்யேஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்று. இத்தலத்தில் ஐப்பசி அமாவாசையில் (தீபாவளி) சம்பந்தர் அடியவரோடு ஓடம் ஏறி அதனைப் பதிகம் பாடிச் செலுத்தி, மறுகரை அடைந்தார். ஆற்றின் எதிர்க்கரையில் திருஞானசம்பந்தருக்கு திருக்கோயில் அமைந்துள்ளது. ஓட விழா, ஐப்பசி அமாவாசையில் நடத்தப்படுகிறது.

24. பிற மாநிலங்களில் தீபாவளி

ஒடிசாவில் வங்கத்திலும் அமாவாசை, அதாவது தீபாவளி அன்று இரவு காளி பூஜை விசேஷமாக நடக்கிறது. சமணர்கள் விழாவாகவும் தீபாவளி இருக்கிறது. குறிப்பாக, தமிழகத்திலும் நிறைய சமணருடைய கோயில்கள் இருக்கின்றன. நயினார் கோயில் (திண்டிவனம்) வந்தவாசி, மதுரை முதலிய இடங்களில் சமண கோயில்கள் இருக்கின்றன. அங்கே, மகாவீரர் முக்தி அடைந்த நாள் என்பதால், தீபாவளி தினத்தில் எண்ணெய் குளித்து வழிபடுகிறார்கள். தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே கோவா  மாநகரத்தில் பல்வேறு இடங்களில் நரகாசுரனின் கட்அவுட்கள் வைக்கிறார்கள். தீபாவளிக்கு முதல் நாள், ஒரு குழுவினர் எல்லா கட்அவுட்களையும் பார்வையிடுகின்றனர். சிறந்த கட்அவுட் வைத்தவர்களுக்கு பரிசு வழங்குகின்றனர். தீபாவளியன்று அதிகாலை எல்லாவற்றையும், தீயிட்டுக் கொளுத்தி விடுகிறார்கள்.

25. தீபாவளியில் சொக்கட்டான் ஆட்டம்

வங்காளத்தில் தீபாவளியை ``மகா நிசா’’ என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். காளிதேவி தனது உக்கிரத்தை தணித்த நாளாக தீபாவளி அமைகிறது. தீபாவளியன்று கயிலாயத்தில் ஈஸ்வரனும் தேவியும் சொக்கட்டான் ஆடியதாகவும், அதில் தேவிதான் வெற்றிமேல் வெற்றி பெற்றதாகவும் சொல்கிறார்கள். அதனால் வட இந்தியாவில், முக்கியமாக குஜராத்தில், தீபாவளி அன்று, இரவு சொக்கட்டான் ஆடும் பழக்கம் கடைபிடிக்கிறார்கள். அந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு, பார்வதியின் அருள் கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.

26. வெளிநாடுகளில் தீபாவளி

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று குடியேறிய இந்திய வம்சா வழியினர், உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில்வசித்துவருகின்றனர். குறிப்பாக, அமெரிக்காவில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களும்,இந்திய வம்சாவளியினரும் வசித்து வருகின்றனர். தீபாவளி பண்டிகையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் குத்துவிளக்கேற்றி தீபாவளி கொண்டாடி, உலக மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவிக்கும் வழக்கம் உள்ளது. கிழக்காசிய நாடுகளிலும் தீபாவளி விமர்சையாக கொண்டாடப் படுகின்றது. இங்கிலாந்தில் பர்மிங்ஹாம் மற்றும் லிசெஸ்வர் பகுதியில் இந்தியர்கள் அதிகம் வசிப்பதால், பிரம்மாண்டமாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.

டிரினிடாட் மற்றும் டொபாகோ தீவுகளில் தீபாவளியை மக்கள், இந்தியாவை போன்று கொண்டாடுகிறார்கள். தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகனஸ்பெர்க்கில் தீபாவளி கொண்டாடத்திற்காக, பாரம்பரிய நாட்டியம், பாட்டு, உடை அலங்காரம் என கலகலப்பான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை, இந்தோனேசியா, நேபாளம் போன்ற நாடுகள் மற்றும் இந்தியாவின் சிக்கிம், டார்ஜிலிங், அசாம் ஆகிய பகுதியில், பொதுவாக ஒரே மாதிரியானதீபாவளி கொண்டாடப்படுகிறது. சிங்கப்பூர் (லிட்டில் சிங்கப்பூர்), மலேசியா, ஆஸ்திரேலியா மற்றும் அரபு நாடுகள் என்று அனேகமாக, உலகின் 90 சதவீத நாடுகளில் தீபாவளி சிறப்பாகவே கொண்டாடப்படுகிறது.

27. காசியில் தீபாவளி

தீபாவளி என்றால் கங்கா ஸ்நானம் நினைவுக்கு வரும். கங்கை நதி நினைவுக்கு வந்து விட்டால், அடுத்து காசி க்ஷேத்திரம்தான் நினைவுக்கு வரும். கங்கையில் நீராடி, காசி  விஸ்வநாதரையும், அன்னபூரணியையும், காசி விசாலாட்சியையும், கால பைரவரையும் தரிசிப்பது என்பது நமது தொன்மையான நம்பிக்கை அல்லவா. தீபாவளியன்று ஒவ்வொரு வீட்டில், நீராடும் நீரிலும் கங்கை பிரசன்னமாகி விடுகிறாள் என்பது ஐதீகம். ஆயினும், தீபாவளியன்று கங்கையில் நேரடியாக நீராடி, அன்ன பூரணியை தரிசிப்பது மிகமிக சிறப்பு. அதற்காகத்தான் லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், ஏன் வெளிநாட்டிலிருந்தும்கூட தீபாவளியன்று காசிக்கு வந்து சேருகிறார்கள். காசியில் நீராடி, கயாவில்  விஷ்ணு பாதத்தில் பிண்டம் வைத்து சாஸ்திரத்தில் சொல்லியவாறு தீபாவளி பண்டிகையை நிறைவு செய்கிறார்கள்.

28. அனுமார் காட்

காசியில், காசி அனுமார் காட் என்று ஒரு இடம் இருக்கிறது. அங்கு ஒரு அனுமார் கோயில் இருக்கிறது. அங்கே தீபாவளியன்று எண்ணெய் கொடுக்கிறார்கள். அந்த எண்ணெயை தலையில் பூசிக் கொண்டு, கங்கா ஸ்நானம் செய்வது மிகப் பெரிய பாக்கியமாக கருதுகிறார்கள். அனுமான் காட்டில் காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி, மதுரை மீனாட்சி என முப்பெருந்தேவியர் கோயில் கொண்டிருக்கிறார்கள். கங்கா ஸ்நானம் செய்து விட்டு, இங்கே திரிதேவி தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு. அன்று வரிசையாக கங்கைக்கரையில் விளக்கு பூஜை நடப்பதும். விளக்கை கங்கை நீரில் விடுவதும், அதிஅற்புதமாக இருக்கும். காசியில் உள்ள காலபைரவர் சந்நதியில் உள்ள தங்க உற்சவர், தீபாவளி அன்று மட்டுமே உலா வருகின்றார்.

29. அன்னபூரணியும் லட்டுத்தேரும்

துவக்க நிலையில் அன்னத்தை பிரம்மம் என்கிறது உபநிடதம். அந்த அன்னத்தை உயிர்களுக்கு தரும் தாய் அன்னபூரணி. அன்னபூரணியை வணங்குபவர்களுக்கு அன்னதோஷம் என்னும் வறுமை வராது. தீபாவளி நாளில், தங்க அன்னபூரணியை தரிசிக்க அன்னதோஷம் நீங்கும். ஒவ்வொரு ஆண்டும் காசியில் இருக்கும் தங்க அன்னபூரணி விக்ரகத்தை தீபாவளியை ஒட்டி வெளியில் எடுத்து விமரிசையாக பூஜை செய்வார்கள். அப்போது, பலப்பல தின்பண்டங்களாலேயே கோயில் முழுதும் அலங்கரிப்பார்கள். நவரத்ன சிம்மாசனத்தில், சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் அன்னையின், ஒரு கரத்தில் அட்சய பாத்திரமும், மறு கரத்தில் தங்க கரண்டியும் இருக்கும்.

தங்க அன்னபூரணியை மூன்று நாட்களுக்கு மட்டுமே தரிசிக்க முடியும். அன்னையிடம் பிச்சை கேட்கும் பிட்சாடனார் உருவம், வெள்ளியால் செய்யப்பட்டது. காசியில் இருக்கும் அன்னபூரணியைப் போலவே, கோவையிலும் ஆர்.எஸ்.புரம் மேற்கு திருவேங்கடசாமி தெருவில், அன்னபூரணி கோயில் உண்டு. அங்கேயும் தீபாவளியில் அதிகாலை அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறும். காசியில் எப்படி நடக்கிறதோ, அதைப்போலவே லட்டுத்தேர் நடைபெறும்.

30. அன்ன தோஷம் தரும் செயலைச் செய்யாதீர்கள்

1. தன் தேவைக்கும் அதிகமாக உணவைத் தயார் செய்து வீணடித்தல்.

2. தான் உண்டது போக ஏராளமான அன்னம் கைவசம் இருந்தும், அதை யாருக்கும் பகிர்ந்து அளிக்காமல் குப்பையில் வீசுதல் .

3. பித்ருக்களுக்கு ஒழுங்காகப் பிண்டம் அளிக்காமல் இருத்தல்.

4. சாப்பாட்டுத் தட்டை தூக்கி எறிதல்.

5. அன்னத்தை அடுத்தவர்கள் மீது வீசிஎறிதல் .

6. சாப்பாட்டுத் தட்டை காலால் உதைத்தல்.

7. பிறர் உணவு சாப்பிடும் பொழுது, அவர்களைச் சாப்பிடவிடாமல் செய்தல்.

8. பந்தியில் நமக்கு வேண்டியவர்களுக்குத் தேவையான உணவை அளித்து, மற்றவர்களைக் கவனிக்காமல் இருத்தல்.

9. கறவை நின்ற பசு மாட்டிற்குத் தேவையான உணவு தராதிருத்தல்.  

10. சுவாமியின் பிரசாதத்தை அவமதித்தல்.

11. தாய், தந்தையர்களுக்கு உணவுவழங்காமல் தவிக்கவிடுதல் இவையெல்லாம் அன்ன தோஷத்தைவரவழைக்கும். தீபாவளியைப் பற்றி சிந்திக்க இன்னும் இனிமையான செய்திகள் ஏராளம் உண்டு. அவற்றை மற்றுமொரு சந்தர்ப்பத்தில் நாம் பார்ப்போம்.

தொகுப்பு : எஸ்.கோகுலாச்சாரி

Related Stories: