×

மகாளய அமாவாசை அம்மாமண்டபம் காவிரி படித்துறையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு-அதிகாலை முதலே பொதுமக்கள் குவிந்தனர்

திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறையில் நேற்று மகாளய அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் காவிரி ஆற்றில் புனிதநீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.அமாவாசை நாட்களில் பக்தர்கள் விரதமிருந்து நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் அவர்களின் ஆசி பரிபூரணமாக கிடைக்கும் என்பது ஐதீகம். மாதம் ஒரு அமாவாசை வந்தாலும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை தினங்கள் மிகவும் விசேஷமானது. இதில் முக்கியமானது புரட்டாசி மகாளய அமாவாசையாகும்.முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த காலமாக, மகாளய பட்சம் கருதப்படுகிறது. இக்காலத்தில் தர்ப்பணம் செய்தால் ஆண்டு முழுவதும் தர்ப்பணம் செய்ததற்கான பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. புரட்டாசி மாத அமாவாசை அன்று முன்னோர்கள் பூமிக்கு வரும் நாளாக கருதப்படுகிறது. புரட்டாசி அமாவாசைக்கு முந்தைய 15 நாட்களும் மகாளய பட்ச காலம். இதில், பட்சம் என்பது 15 நாட்களை குறிக்கும்.புரட்டாசி பவுர்ணமியில் துவங்கி அமாவாசை வரை உள்ள 15 நாட்களே மகாளய பட்ச காலம். கருட புராணம், விஷ்ணு புராணம், வராக புராணம் போன்ற ஆன்மிக நூல்களில் மகாளய பட்சத்தின் சிறப்புகள் விளக்கப்பட்டுள்ளன. மகாளய கால நாட்களில் நம் முன்னோர், நமக்கு ஆசி வழங்குவதற்காகவே பிதுர் லோகத்தில் இருந்து நம்மை பார்க்க பூலோகத்திற்கு வருவர் என்று கூறப்படுகிறது. மகாளய அமாவாசை அன்று தான், நம் முன்னோர்கள் வீடு தேடி வந்து ஆசிர்வதிப்பர் என்ற நம்பிக்கை உள்ளது. அன்று பித்ருக்களுக்கு திதி கொடுப்பதை, மக்கள் கடைபிடித்து வருகின்றனர்.அத்தகைய சிறப்பு மிக்க மகாளய அமாவாசையில், தமிழகம் முழுவதும் புண்ணிய நதிகள், சமுத்திரம் போன்ற இடங்களில் புனித நீராடி, முன்னோருக்கு திதி கொடுத்து, தானம் செய்வது வழக்கம். அதன்படி மகாளய அமாவாசை தினமான நேற்று அதிகாலை முதலே தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் பக்தர்கள் விரதமிருந்து தங்களது முன்னோர்களுக்கு மஞ்சள், குங்குமம், அரிசி, வெற்றிலை, பழங்கள், அருகம்புல், நவதானியம் உள்ளிட்ட பொருட்களை படைத்து, திதி கொடுத்து வழிபாடு நடத்தினர்.திருச்சி ரங்கம் அம்மா மண்டப படித்துறையில் நேற்று அதிகாலை 4 மணி முதலே ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் எள் உள்ளிட்ட பூஜை பொருட்களை வழிபட்டு காவிரியில் கரைத்து வழிபாடு செலுத்தினர். இதில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டதால் அம்மா மண்டப சாலை, மக்கள் கூட்டமாக காணப்பட்டது. அதிகளவு பொதுமக்கள் வந்ததை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது….

The post மகாளய அமாவாசை அம்மாமண்டபம் காவிரி படித்துறையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு-அதிகாலை முதலே பொதுமக்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Tags : Mahalaya Amavasai ,Amma Mandapam Kaveri Padithura ,Tiruchi ,Srirangam ,Amma Mandapam Padithura ,Cauvery ,
× RELATED கொலை வழக்கில் கைதான ரவுடி மீது குண்டாஸ்