×

இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் இருக்கிறது: மாநில திட்டக்குழு துணை தலைவர் ஜெயரஞ்சன் தகவல்

சென்னை: இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் இருக்கிறது என மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் தெரிவித்தார். இதுகுறித்து சென்னை, தலைமை செயலகத்தில், மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய அளவில் 9%  உணவு பொருள் விலை ஏற்றம் உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்துடன்  ஒப்பிட்டு பார்த்தால் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் 5% கீழ் விலை ஏற்றம் உள்ளது. குறிப்பாக 13 வகையான உணவு பொருட்களில் அரிசி, கோதுமைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அடுத்தது எண்ணெய் வகைகளுக்கு  கொடுக்கப்படுகிறது. இதைவைத்து பார்க்கும்போது தென் மாநிலங்களில்  இந்த  விலை ஏற்றம் மிகவும் குறைவு. அதற்கு காரணம் தென் மாநிலங்களில் பொது விநியோகம் பரவலாகவும், வலுவாகவும் செயல்படுவதுதான். அதிலும் கூட தமிழ்நாட்டில் 3.1% தான் விலை ஏற்றம் உள்ளது. அதில், தானியங்களில் 2.7 விழுக்காடு மட்டுமே உள்ளது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி, நகர்புறங்களில் உள்ள 50% குடும்பங்களுக்கும், கிராமப்புறங்களில் உள்ள 25% குடும்பங்களுக்கும் மட்டும் தான் உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்படும். தமிழ்நாட்டில் மட்டும் தான்  அனைவருக்கும் கொடுக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 2 கோடியே 22 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோக முறை எல்லோருக்கும் சென்றடைகிறது. மற்ற மாநிலங்களுக்கும் நமக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு இது. அதேபோல், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் செயல்படாத சிறப்பு பொது விநியோகம் ஒன்றை நாம் செயல்படுத்துகிறோம். அதில் பாமாயில், துவரம் பருப்பை கொடுக்கிறோம்.  இப்படி கொடுக்கும்போது உணவுக்கான செலவை கணிசமான அளவில் குறைக்கிறது. கடந்த 10 ஆண்டுகளை எடுத்துக்கொண்டால், சந்தை மதிப்பை விட துவரம் பருப்பு 5 மடங்கு குறைவான விலையிலும், எண்ணெய் 6 மடங்கு குறைவான விலையிலும்  கொடுக்கிறோம். எல்லோருக்குமான பொது விநியோகத்திற்கு நாம்  கொடுக்கப்படும் மானியம் என்பது, ஆண்டுக்கு சராசரியாக அரிசிக்கு மட்டும்  ரூ2,205 கோடி.  துவரம் பருப்புக்கு கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு ரூ150 கோடியும், சராசரியாக ஆண்டுக்கு ரூ1,500 கோடியும்  செலவாகிறது. பாமாயிலுக்கு  சராசரியாக மாத செலவு ரூ195  கோடியில் இருந்து ரூ226 கோடி வரை செலவாகிறது.  இது ஆண்டுக்கு கிட்டத்தட்ட  ரூ2,500 கோடி ஆகும். கிட்டத்தட்ட ஆண்டுக்கு ரூ5,000 கோடி பொது விநியோக  திட்டத்தில் வழங்கப்படும் பொருட்களுக்கு தமிழக அரசு செலவு செய்கிறது. வறுமை  கோட்டிற்கு கீழ் உள்ளவர்களில் 63% பேர் பொது விநியோக முறையில் வரக்கூடிய  உணவு பொருட்களை பயன்படுத்துகிறார்கள். அடுத்த நிலையில் உள்ளவர்கள் 50 முதல்  60% வரை பொது விநியோகத்தில் இருந்து வாங்கும் அரிசியை தான்  பயன்படுத்துகிறார்கள். நாம் கொடுக்கும் எண்ணெய், பருப்பால் சராசரியாக அவர்கள் குடும்ப செலவில் 35% சேமிப்பு ஆகிறது. எல்லோருக்குமான பொது விநியோகத்தால் விலைவாசி உயர்வில் இருந்து சாமனியர்களை ஓரளவுக்கு காப்பாற்ற  முடிகிறது. விலைவாசி என்பது பொதுவாக ஏழைகளை தான் பாதிக்கிறது. இந்த நிலைமை வராமல் பார்த்து கொள்வது நமது அரசின் கடமையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்….

The post இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் இருக்கிறது: மாநில திட்டக்குழு துணை தலைவர் ஜெயரஞ்சன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,India ,State Planning Commission ,Vice Chairman ,Jayaranjan ,CHENNAI ,Deputy Chairman ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...