×

ஊட்டி என்சிஎம்எஸ் பார்க்கிங் தளத்தில் ஓராண்டாக பூட்டிக்கிடக்கும் கழிப்பிடம்-சுற்றுலா பயணிகள் கடும் அவதி

ஊட்டி :  ஊட்டி என்சிஎம்எஸ் பார்க்கிங் தளத்தில் கடந்த ஓராண்டாக பூட்டிக்கிடக்கும் கழிப்பறையால் சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம், ஊட்டி சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கி வருகிறது. இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆண்டு முழுவதும் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்த தாவரவியல் பூங்கா அருகே பிரீக்ஸ் பார்க்கிங் தளம், கேசினோ சந்திப்பு அருகேயுள்ள நகராட்சி பார்க்கிங் தளம், பூங்கா சாலையில் உள்ள கூட்டுறவுத்துறைக்கு சொந்தமான என்சிஎம்எஸ்., பார்க்கிங் தளம் உள்ளிட்ட இடங்களில் வசதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, என்சிஎம்எஸ் பார்க்கிங் தளத்தில் ஆம்னி பஸ்கள், வேன்கள், கார்கள் உள்ளிட்டவை நிறுத்தும் வசதி உள்ளது. இங்கு கார்களுக்கு ரூ.100, வேன்களுக்கு ரூ.150, ஆம்னி பஸ்களுக்கு ரூ.230 பார்க்கிங் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆம்னி பஸ்கள் மற்றும் வேன்களில் குழுவாக வரும் சுற்றுலா பயணிகள் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இருந்து என்சிஎம்எஸ் பார்க்கிங் தளத்திற்கு திருப்பி விடப்படுகின்றனர். இங்கிருந்து தாவரவியல் பூங்காவிற்கு குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர் உள்பட பயணிகள் நடந்து சென்றுதான் பார்வையிட்டு வருகின்றனர். இந்த பார்க்கிங் வளாகத்தில் உரக்கிடங்கு, மகாலிங்க கூட்டுறவு பயிற்சி நிறுவனம், நீலகிரி மாவட்டம் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையே என்சிஎம்எஸ் பார்க்கிங் தளம் மண் தளமாக இருந்த நிலையில் வாகனங்கள் நிறுத்துவதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த பார்க்கிங் தளத்தை சீரமைக்க கடந்த 2018ம் ஆண்டு என்சிஎம்எஸ் நிர்வாகம் ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்தது. இதைதொடர்ந்து சீரமைப்பு பணிகள் துவக்கப்பட்டு பார்க்கிங் தளம், சமன் செய்யப்பட்டு இன்டர்லாக் கற்கள் அமைக்கும் பணிகளும் மற்றும் 30க்கும் மேற்பட்ட கடைகள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், 4 ஆண்டுகள் கடந்தும் சீரமைப்பு பணி முழுமையாக நிறைவடையவில்லை. நுழைவுவாயில் பகுதி மற்றும் வாகனங்கள் வெளியேறும் பகுதிகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மழை காலங்களில் சேறும் சகதியுமாக மாறி விடுகின்றன. ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் அந்த நிதி எங்கு சென்றது என தெரியவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதை விட இந்த பார்க்கிங் தளத்தில் சுற்றுலா பயணிகளுக்கு போதுமான கழிப்பிட வசதி இல்லை. பார்க்கிங் தளத்தில் கட்டப்பட்டுள்ள கழிப்பிடம் பராமரிப்பின்றி கடந்த ஓராண்டிற்கும் மேலாக பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் நுகர்வோர் குறைதீர் ஆணைய கட்டிடம் உள்ளிட்டவற்றின் பின்புறமுள்ள பகுதிகள் திறந்தவெளி கழிப்பிடமாக மாறி கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. குறிப்பாக பெண் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கேரள மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் இங்கு நிறுத்தப்படும் நிலையில் பிளாஸ்டிக் பாட்டில்கள், உணவு கழிவுகள் உள்ளிட்ட அனைத்து வகை கழிவுகளும் வீசி எறியப்படுகின்றன. இவை முறையாக அகற்றப்படுவதில்லை. இதனால் அசுத்தமாக காட்சியளிக்கிறது. மேலும் நுழைவுவாயில் பகுதியில் எவ்வளவு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற விவரமும் வைக்கப்படுவது இல்லை. இந்த பார்க்கிங் தள நுழைவுவாயில் பகுதியில் ஏராளமான வியாபாரிகள் கடைகள் வைத்து பிழைப்பு நடத்தி வந்தனர். புதிதாக கட்டும் கடைகள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு, அவர்களை 2019ம் ஆண்டு அங்கிருந்து வெளியேற்றினர். அப்போது அதிமுக வில் மாவட்ட முக்கிய பொறுப்பில் இருந்த பிரமுகர், கடை ஒதுக்கீடு தொடர்பாக வேறு நபர்களிடம் பெரும் தொகை வசூல் செய்து விட்டதாக கூறப்படுகிறது. அவர் தற்போது மாவட்ட அளவில் எந்த பொறுப்பிலும் இல்லை. இந்நிலையில், கடைகள் கட்டப்பட்ட நிலையில் அந்த கடைகள் கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக திறக்கப்படாமல் உள்ளது. இதனால் என்சிஎம்எஸ் நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதுடன், சிறு வியாபாரிகளும் கடைகள் கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் 2ம் சீசன் துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகை சற்று அதிகரித்துள்ளது. எனவே பார்க்கிங் தளத்தில் நிறைவடையாமல் உள்ள பணிகளை முழுமையாக மேற்கொள்வதுடன், அடிப்படை தேவைகளில் ஒன்றான கழிப்பிட வசதியையும் ஏற்படுத்தி தர வேண்டும். கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள கடைகளை ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சீரமைப்பிற்கு என ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் ஏதேனும் முறைகேடுகள் நடந்துள்ளதா? எனவும் நீலகிரி மாவட்ட நிர்வாகம் ஆய்வு நடத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். …

The post ஊட்டி என்சிஎம்எஸ் பார்க்கிங் தளத்தில் ஓராண்டாக பூட்டிக்கிடக்கும் கழிப்பிடம்-சுற்றுலா பயணிகள் கடும் அவதி appeared first on Dinakaran.

Tags : Feeder ,NCMS ,Dinakaran ,
× RELATED டிஜிட்டல் யுகத்தில் தொடரும் அறிவுசார் சொத்துக்கள் திருட்டு