×

டிஜிட்டல் யுகத்தில் தொடரும் அறிவுசார் சொத்துக்கள் திருட்டு

* சட்ட நிபுணர்கள் ஆதங்கம்
* அதிகரிக்கும் வழக்குகள்

காப்புரிமை பாதுகாப்பு
சட்ட நிபுணர்கள் மேலும் கூறுகையில்,‘அறிவுசார் சொத்துக்களை காப்பதில், காப்புரிமை முக்கிய பங்கு வகிக்கிறது. சமீபகாலமாக காப்புரிமை குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. காப்புரிமை என்பது படைப்பாளிகள் தங்கள் இலக்கியம் மற்றும் கலை படைப்புகளின் மீது வைத்திருக்கும் உரிமைகளை விவரிக்க பயன்படுத்தும் சட்டப்பூர்வமான ஒரு சொல். புத்தகங்கள், இசை, ஓவியங்கள், சிற்பம் மற்றும் திரைப்படங்கள், கணினிநிரல்கள், தரவுத்தளங்கள், விளம்பரங்கள், வரைபடங்கள் மற்றும் தொழில்நுட்ப வரைபடங்களுக்கு காப்புரிமை வழங்கப்படுகிறது. இதனை ெபற்றுவிட்டால், சம்மந்தப்பட்டவர்களின் அனுமதி இல்லாமல் பிறர், அதனை பயன்படுத்தவோ, உரிமை கொண்டாடவோ முடியாது. அப்படி பயன்படுத்தினால் வழக்கு தொடர்ந்து உரிய நிவாரணம் பெறுவதற்கு காப்புரிமை சட்டம் வழிவகுக்கிறது,’’ என்கின்றனர்.

புதிய சிந்தனைகளால் நாம் உருவாக்கும் அரிய படைப்புகளே அறிவுசார் சொத்துக்கள் எனப்படுகிறது. இந்த வகையில் அறிவுசார்ந்த மனித படைப்புகளை பாதுகாப்பது மிகவும் அவசியம். அவற்றை நாம் பேணிக்காக்கும் போது, படைப்பாற்றல் அதிகளவில் வளரும். புதிய நம்பிக்கை அதிகரிக்கும். உலகிற்கும் புதிய நன்மைகள் கிடைக்கும். இந்த வகையில் சீரிய சிந்தனையால், அறிவுசார்ந்த சொத்துக்களை நாம் உருவாக்கினால் மட்டும் போதாது. அவற்றை பிறர் திருடாமல் பாதுகாப்பதும் மிகவும் அவசியம் என்கின்றனர் ஆய்வாளர்கள். இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆண்டு தோறும் ஏப்ரல் 26ம்தேதி உலக அறிவுசார் சொத்துரிமை தினம் அனுசரிக்கப்படுகிறது.
மனிதமனம் மற்றும் மனித அறிவு ஆகியவற்றின் படைப்புகளுடன் தொடர்புடைய கண்டுபிடிப்புகள் தான், அறிவுசார் சொத்துக்கள். யோசனைகளும், அறிவும் வர்த்தகத்தின் முக்கிய பகுதியாகவும் உள்ளது.

இதனால் அறிவாற்றல் என்பது ஒரு கட்டத்தில் சொத்தாகவும் மாறிவிடுகிறது. இந்த வகையில், ஒருவர் தன்னுடைய கண்டுபிடிப்புகள், வடிவமைப்புகள், படைப்புகளை பிறர் பயன்படுத்துவதை, அறிவுசார் சொத்துரிமை தடுக்கிறது. உலகளாவிய அரசாங்கங்களும், நாடாளுமன்றங்களும் படைப்பாளிகளுக்கு அறிவுசார் சொத்துரிமையை வழங்கியுள்ளது. ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் பயன்அளிக்கும் வகையில் யோசனைகள், படைப்புகள் உருவாக வேண்டும் என்பதே, இதன் முக்கிய நோக்கமாகும். இப்படி அறிவுக்கும், சிந்தனைக்கும் முக்கியத்துவம் அளிப்பதற்கான விழிப்புணர்வு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதேநேரத்தில், அறிவால் உருவெடுத்துள்ள டிஜிட்டல் யுகத்தில், அறிவுசார் சொத்து திருட்டு என்பதும் அதிகரித்து வருகிறது என்பதும் ஆய்வாளர்களின் ஆதங்கம். இதுதொடர்பான வழக்கு ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து அறிவுசார் சொத்துரிமை குறித்த விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டுள்ள சட்ட நிபுணர்கள் கூறியதாவது: அறிவுசார் சொத்துக்களை பாதுகாப்பது என்பது, ஒவ்வொரு படைப்பாளிக்கும் மிகவும் முக்கியம். இன்றைய டிஜிட்டல் யுகத்தில், அறிவுசார் சொத்துக்கள் திருடப்படுவதை அறிந்திருப்பதும் மிகவும் முக்கியம். அறிவுசார் சொத்து (ஐபி) திருட்டு பல்வேறு வழிகளில் நிகழ்கிறது. இது ெபரும்பாலும் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தில் தகவல்களை பகிரும்போது எளிதாக நடக்கிறது. இணையத்தில் திரைப்படங்கள், இசை, மென்பொருட்கள், புத்தகங்கள் போன்ற பல்வேறு படைப்புகளை, அங்கீகாரம் இல்லாமல் பதிவிறக்கம் செய்வது இதற்கான எளிமையான எடுத்துக்காட்டு. உதாரணமாக ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டால், பதிப்பாசிரியரின் அனுமதி இல்லாமலேயே அதனை அதிகளவில் பிரிண்ட் எடுத்து, விற்பனை செய்யலாம்.

அதன் படைப்பு வடிவத்தையே முற்றிலும் மாற்றி, வேறொருவர் உருவாக்கியது போல் செய்து விடலாம்.
இதேபோல், ஒருவரது சிந்தனையில் உருவான நவீன கருவிகள், ஓவியங்கள், இசை வடிவங்கள் என்று அனைத்தையும், வேறொருவரின் படைப்புகளாக மாற்றி விடும் வசதி, டிஜிட்டல் யுகத்தில் எளிதாகி விட்டது. படைப்புகளில் மட்டுமல்ல வர்த்தகம், உணவுப்பொருட்கள், கைவினைப் பொருட்கள், நுண்ணிய கலைவடிவங்கள் என்று அனைத்தும், டிஜிட்டல் யுகத்தில் எளிதாக திருடப்பட்டு விடுகிறது. இது தொடர்பான வழக்குகளும் உலகளவிலும், இந்தியாவிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மொத்தத்தில் சொல்ல வேண்டும் என்றால், தனது படைப்பு, தனது சிந்தனையில் தான் உதித்தது என்று போராடி நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் பல படைப்பாளிகளுக்கு உருவாகியுள்ளது. இது போன்ற நிகழ்வுகள், தொடர்ந்து அவர்களின் சிந்தனைத்திறனையும் முடக்கி விடுகிறது. எனவே, அறிவுசார்ந்த படைப்புகளை உருவாக்குவதோடு மட்டுமல்ல, அதை பத்திரமாக பாதுகாத்து இந்த சமுதாயத்திற்கு கொண்டு சேர்ப்பதிலும், படைப்பாளிகள் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post டிஜிட்டல் யுகத்தில் தொடரும் அறிவுசார் சொத்துக்கள் திருட்டு appeared first on Dinakaran.

Tags :
× RELATED கூட்டுறவு வங்கிகள் மூலம் நடப்பு...