×

மது பழக்கம்: பாலிவுட் இயக்குனர்கள் கடும் மோதல்

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பாலிவுட் முன்னணி இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான அனுராக் காஷ்யப் குறித்து ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’, ‘தி வேக்சின் வார்’ உள்பட பல இந்தி படங்களை இயக்கியுள்ள விவேக் அக்னிஹோத்ரி பேசிய விஷயம் சர்ச்சைக்குரியதாக மாறி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது ‘தி டெல்லி ஃபைல்ஸ்’ என்ற படத்தை இயக்கி வரும் விவேக் அக்னிஹோத்ரி பேசுகையில், ‘அனுராக் காஷ்யப்புடன் இணைந்து ‘கோல்’ என்ற இந்தி படத்தில் பணியாற்றியுள்ளேன். இப்படத்துக்கு அவர் வசனம் எழுதினார். சைஃப் அலிகான், பிரியங்கா சோப்ரா நடிக்க முடிவானது. ஆனால், சைஃப் அலிகானுக்கு சில தனிப்பட்ட பிரச்னைகள் இருந்ததால் விலகிவிட்டார். பிறகு ஜான் ஆபிரஹாமையும், பிபாஷா பாசுவையும் நடிக்க வைத்தோம்.

அனுராக் காஷ்யப் அந்த நேரத்தில் அளவுக்கதிகமாக மது அருந்துவார். இதனால் அவருக்கு நேரத்தின் மதிப்பு தெரியாது. பிறகு அவர் விக்ரமாதித்யா மோட்வானேவை எழுத்துப் பணிக்கு அழைத்து வந்தார். ‘இவர் உதவியாக இருப்பார்’ என்று சொல்லி, விக்ரமாதித்யா மோட்வானேவை அறிமுகம் செய்தார். பிறகு அனைத்து பணிகளும் விக்ரமாதித்யா மோட்வானேவிடம் ஒப்படைக்கப்பட்டது. நான் உருவாக்க விரும்பியது வேறு. அவரது பார்வை வேறு. இறுதியில், நாங்கள் அனைவரும் கடுமையான கருத்து மோதலில் ஈடுபட்டோம். இந்த பிரச்னைக்கு பிறகு தயாரிப்பு நிறுவனம் அனுராக் காஷ்யப்புடன் பேசியது. அவரை கையாள்வது என்பது மிகவும் கடினமாகி விட்டது’ என்றார். விவேக் அக்னிஹோத்ரியின் கருத்துக்கு பதிலளித்த அனுராக் காஷ்யப், ‘விவேக் அக்னிஹோத்ரி ஒரு மிகப்பெரிய பொய்யர்.

அவர்கள் லண்டனில் படப்பிடிப்பு நடத்தியபோது நான் இந்தியாவில் இருந்தேன். அவர் விக்ரமாதித்யா மோட்வானேவின் கதையையோ அல்லது எனது கதையையோ விரும்பவில்லை. ‘லஹான்’ படம் போன்ற கால்பந்து விளையாட்டு கதை கொண்ட படத்தை உருவாக்க விரும்பினார். அதற்காக தனது சொந்த எழுத்தாளரிடம் சொல்லி, அந்த மோசமான கதையை எழுத வைத்திருந்தார். நானோ அல்லது விக்ரமாதித்யா மோட்வானேவோ ஒருநாள் கூட அந்த படப்பிடிப்பு தளத்துக்கு சென்றது இல்லை’ என்று தெரிவித்துள்ளார். பாலிவுட்டின் பிரபலமான இயக்குனர்கள் மோதிக்கொள்வதை நெட்டிசன்களும், ரசிகர்களும் கமென்ட் மூலம் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Tags : Bollywood ,Vivek Agnihotri ,Anurag Kashyap ,
× RELATED சண்டை போட தயாராகும் சமந்தா