சென்னை, மே 12: சூரி, ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா நடித்துள்ள ‘மாமன்’ என்ற படம், வரும் 16ம் தேதியன்று திரைக்கு வருகிறது.
இதுகுறித்து சூரி பேசியதாவது:
தாய்மாமன் பாசத்துக்கு நிகரானது எதுவும் கிடையாது. கதையை நான் எழுதியுள்ளேன். பாடல்கள் எழுத சம்பளம் வேண்டாம் என்று சொன்ன விவேக்கிற்கு நன்றி. காமெடி மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்து வந்த நான், இயக்குனர் வெற்றிமாறன் மூலம் ‘விடுதலை 1’, ‘விடுதலை 2’ படங்களில் கதையின் நாயகனாக மாறினேன். பிறகு ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’ ஆகிய படங்கள் எனக்கு வெற்றிப் பாதையை அமைத்தது. ெதாடர்ந்து கதையின் நாயகனாக நடிப்பேன். மீண்டும் காமெடி செய்வேனா என்பதை அந்தப் படத்தின் கதையும், எனது கேரக்டரும்தான் தீர்மானிக்கும். சூரி என்பதே நிரந்தரம். என் பெயருக்கு முன்னால் பட்டம் வேண்டாம். நடிகர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். வந்தவர்களுக்கும், இனிமேல் வருபவர்களுக்கும் என் வாழ்த்துகள். ஆனால், நான் அரசியலுக்கு வருவேனா என்பது பற்றி உறுதியாக தெரியாது. சினிமாவில் இன்னும் சாதிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
எனக்கு ஜோடியாக நடிக்க ஹீரோயின்கள் மறுப்பது பற்றி எனக்கு தெரியாது. ‘மாமன்’ படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, ‘மண்டாடி’ படத்தில் மகிமா நம்பியார் நடிக்கின்றனர். மறைந்த எனது தந்தையின் பயோபிக்கை நான் தயாரித்து நடிப்பதாக வரும் தகவல் தவறு. பயோபிக்கிற்கான கதையை நான் எழுதி வருகிறேன். என் வாழ்க்கையை நடத்துவதற்கு தேவையான பணம் சம்பாதித்து விட்டதால், இனிமேல் மனதுக்கு மிகவும் நெருக்கமான படங்களில் நடிப்பேன். வரும் 16ம் தேதி சந்தானத்தின் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’, யோகி பாபுவின் ‘ஜோரா கைய தட்டுங்க’ படங்கள் ரிலீஸ் ஆனாலும், எனது ‘மாமன்’ படம் யாருக்கும் போட்டி கிடையாது. அது ஒரு தனி டிராக்.
