×

தமிழ் நடிகருக்கு நார்வே நாட்டின் விருது

சென்னை: தமிழ் நடிகரான சௌந்தரராஜாவுக்கு நார்வே நாட்டின் கலைமகன் விருது வழங்கப்பட்டுள்ளது. வேட்டை, ஜிகர்தண்டா, சவுந்தரபாண்டியன் உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் சௌந்தரராஜா. நார்வே நாட்டில் நடைபெற்ற தமிழ் திரைப்பட விருது விழாவில் கலைமகன் என்ற விருது, சமூக சேவைகளில் ஈடுபட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த விருது இந்த ஆண்டு சௌந்தரராஜாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் போராட்டம், நெடுவாசல், நீட் பிரச்னை, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், காவிரி பிரச்னை, ஜல்லிக்கட்டு போராட்டம் உள்ளிட்டவற்றில் தொடர்ந்து சௌந்தரராஜா பங்கேற்று வருகிறார்.

சமூகப் பணிகளுக்காக நடிகர் விஜய்யும் இவரை பாராட்டி இருந்தார். இது குறித்து சௌந்தரராஜா கூறும்போது, ‘‘மண்ணுக்கும் மக்களுக்கும் என்ற பெயரில் சமூக அறக்கட்டளை மூலம் பல்வேறு சமூகப் பணிகளை செய்து வருகிறேன். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகிறேன். இந்த ஆண்டு முதல் விவசாயிகளுக்கு ரொக்கத்துடன் நம்மாழ்வார் விருதும் வழங்கி வருகிறேன். நார்வே நாட்டின் ஒஸ்லோ மேயர் அமீனா மெபல் ஆண்டர்சன், இலங்கை தமிழர் வசீகரன் இந்த விருதை வழங்கினர். இதை இயற்கை விவசாயிகளுக்கு சமர்ப்பிக்கிறேன்’’ என்றார்.

Tags : Chennai ,Soundararaja ,Norway ,Tamil Film Awards ,
× RELATED தியேட்டரில் திடீரென்று உயிரிழந்த ரசிகர்