×

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் 3,131 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: ரூ.8,15,900 அபராதம் வசூல்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 2,196 வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளிடமிருந்து 3,131 கிலோகிராம் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.8,15,900 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசால் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும், ஒன்றிய சுற்றுச்சூழல் பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறையால் கூடுதலாக 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களும் தடைசெய்யப்பட்டுள்ளன. அதன்படி, 28 வகையான தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், விற்பனை செய்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் மெரீனா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரைகளில் பொதுமக்கள் வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் அதிகளவு வந்து செல்கின்றனர்.  சென்னை மெரீனா கடற்கரை உலகிலேயே மிக நீளமான இரண்டாவது கடற்கரை.  சென்னைக்கு வருகை தரும் பன்னாட்டு சுற்றுலா பயணிகளும் மெரீனா கடற்கரைக்கு வந்து செல்கின்றனர்.  அந்தவகையில் முக்கிய சுற்றுலாத் தளமாக விளங்கும் மெரீனா கடற்கரையில் பொதுமக்களுக்கான வியாபாரக் கடைகளும் உள்ளன. இந்தக் கடைகளில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிக்கப்படுவதாலும், அதை பயன்படுத்தும் பொதுமக்கள் கடற்கரையில் தூக்கி எறிவதாலும் அல்லது விட்டுச் செல்வதாலும், கடலில் கலந்து கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இத்தகைய மிகப்பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சியின் சார்பில் ஏற்கனவே அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இந்தக் கடற்கரை பகுதிகளை பிளாஸ்டிக் இல்லா கடற்கரை பகுதிகளாக பராமரிக்கும் வகையில் 05.08.2022 முதல் மாநகராட்சியின் சார்பில் மெரீனா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிகளில் சம்பந்தப்பட்ட சுகாதார அலுவலர்கள் தலைமையில் காலை, மாலை என இருவேளைகளில் ஆய்வு செய்யப்பட்டு, பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும், அதிகப்பட்ச அபராதமும் விதிக்கப்படும். எனவே, பொதுமக்கள் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கடற்கரை பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வரும் அல்லது பயன்படுத்தும் பொதுமக்களுக்கும் அபராதம் விதிக்கப்படும். மெரீனா கடற்கரையில் 01.09.2022 முதல் 14.09.2022 வரை மேற்கொள்ளப்பட்ட களஆய்வுகளில் 352 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய 12 கடை உரிமையாளர்களிடமிருந்து 11.5 கிலோகிராம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.1,900 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மெரீனா கடற்கரைப் பகுதியில் குப்பைத் தொட்டி வைக்காத கடை உரிமையாளர்கள் மற்றும் குப்பைகளை கொட்டிய பொதுமக்களுக்கு ரூ.5,600/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் 01.09.2022 முதல் 14.09.2022 வரை மேற்கொள்ளப்பட்ட களஆய்வுகளில் 347 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய 49 கடை உரிமையாளர்களிடமிருந்து 4.9 கிலோகிராம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.4,900  அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும், குப்பைத் தொட்டி வைக்காத கடை உரிமையாளர்கள் மற்றும் குப்பைகளை கொட்டிய பொதுமக்களுக்கு ரூ.9,500/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் 07.09.2022 முதல் 13.09.2022 வரை ஒருவாரக் காலத்தில் மாநகராட்சி சுகாதார அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்ட களஆய்வில் 6,787 வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 2,196 உரிமையாளர்களிடமிருந்து 3,131 கிலோகிராம் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.8,15,900 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே, வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் பொதுமக்கள் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.  மேலும், கடற்கரை பகுதிகளில் உள்ள கடை உரிமையாளர்கள் தங்கள் கடைக்கு முன்னால் குப்பைத்தொட்டிகள் வைத்து கொள்ள வேண்டும். கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வருவதையும், பொதுவெளியில் குப்பைக் கொட்டுவதையும் தவிர்த்து பிளாஸ்டிக் மற்றும் குப்பை இல்லா கடற்கரை பகுதிகளாக பராமரிக்க மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. …

The post சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் 3,131 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: ரூ.8,15,900 அபராதம் வசூல் appeared first on Dinakaran.

Tags : Chennai Municipal Corporation ,Chennai ,Metropolitan Chennai Corporation ,Dinakaran ,
× RELATED சென்னையில் போலீசார் தபால் வாக்கு...