×
Saravana Stores

பெண்களுக்கான தோஷம் நீக்கும் திருப்பனந்தாள் அருணஜடேசுவரர் சுவாமி

தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாளில் உள்ளது அருணஜடேசுவரர் கோயில். மூலவர்-அருணஜடேசுவரர், செஞ்சடையப்பர், தாலவனேஸ்வரர். தாயார்-பெரிய நாயகி.கோயில் வரலாறு:தாடகை என்ற பெண் இத்தல இறைவனை தினமும் பூஜித்து வந்தாள். ஒரு நாள் சிவனுக்கு மாலை சாத்தும் போது அவளது மேலாடை நழுவியது. ஆடையை ஒரு கையால் பற்றிக்கொண்டு மாலை சாத்தமுடியாமல் அப்பெண் வருந்தினாள். அப்போது இறைவன் அந்த பெண்ணுக்காக இரங்கி தன் தலையை சற்று சாய்த்து கொடுத்தார். மங்கையும் மாலையை அணிவித்துவிட்டு மகிழ்ச்சியுடன் வணங்கி சென்றாள். அன்று முதல் சிவலிங்க திருமேனி சாய்ந்தே இருந்தது. அப்போது இந்தக்கோயிலில் சோழ மன்னனின் திருப்பணி நடந்து கொண்டிருந்தது. சிவன் தலை சாய்ந்திருக்கும் செய்தியை மன்னன் கேள்விப்பட்டான். உடனே தனது படையை அனுப்பி சிவனது தலையை நிமிர்த்த ஏற்பாடு செய்தான். யானைகளை சிவலிங்கத்தோடு சேர்த்து கயிற்றால் கட்டி இழுத்தனர். ஆனால் முடியவில்லை. மனம் வருந்தினான் மன்னன்.

63 நாயன்மார்களில் ஒருவரான குங்குலியக்கலய நாயனார் இத்தல சிவனை வழிபட வந்திருந்தார். அவருக்கும் இந்த செய்தி எட்டியது. நமசிவாய எனும் மந்திரத்தை ஓதியபடி சிவனுக்கு குங்குலியப்புகையினால் தூபமிட்டார். பின் பூவினால் சுற்றப்பட்ட ஓர் கயிறை எடுத்து ஒரு முனையை சிவலிங்கத்தில் இணைத்து, மற்றொரு முனையை தன் கழுத்தில் கட்டி பலமாக இழுத்தார். கயிறு இறுகியதால் இவரது உயிர் போகும் நிலை ஏற்பட்டது. ஆனால் நாயனார் கவலைப்படவில்லை. தன் முழு பலத்தையும் கொண்டு இழுத்தார். இவரது அன்புக்கு கட்டுப்பட்டார் சிவன். இதற்கு மேலும் நாயனாரை இறைவன் சோதிக்க விரும்பவில்லை. சிவலிங்கம் நேரானது. குங்குலியக்கலயனாரின் பக்தியையும், இறைவனிடம் கொண்ட அன்பையும் கண்ட மன்னன் மகிழ்ந்தான். நாயனாருக்கு பல பரிசுகள் கொடுத்து கவுரவப்படுத்தியதாக வரலாறு கூறுகிறது.
கீழப்பெரும்பள்ளம், காளகஸ்தி, திருநாகேஸ்வரம் ஆகியவை ஆண் நாகம் வழிபாடு செய்த தலமாகும். இந்த கோயில் பெண் நாகம் (நாககன்னி) வழிபாடுசெய்த தலமாகும். மிகவும் சக்தி வாய்ந்த துர்க்கை இங்கு அருள்பாலிக்கிறாள்.

இத்தல இறைவனை பார்வதி, ஐராவதம், சங்கு கன்னன், நாகு கன்னன், நாக கன்னியர், பிரம்மா, விஷ்ணு ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர். ஆவணி அமாவாசையன்று இங்குள்ள பிரம தீர்த்தத்தில் இறைவன் எழுந்தருள்வார்.சித்திரை மாதம் சில நாட்களில் மூலவர் மீது சூரிய ஒளிக்கதிர்கள் விழுகின்றன. ஆஸ்தான மண்டபத்தில் ஊர்த்துவ தாண்டவர் உள்ளார். திருநாவுக்கரசர், ஐயடிகள் காடவர்கோன், நம்பியாண்டார் நம்பி, அருணகிரிநாதர், சிதம்பர முனிவர், காளமேகப்புலவர், செஞ்சடை வேதிய தேசிகர், தருமை சண்முகத்தம்பிரான் ஆகியோர் இத்தலத்தை போற்றி பாடியுள்ளனர்.இக்கோயிலில் சித்திரையில் பிரமோற்சவம் நடைபெறுகிறது. கோயில் காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும். சர்ப்பதோஷம், நாக தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வழிபாடு செய்வது சிறப்பு. இக்கோயில் இறைவனை தரிசித்தால் பெண்களுக்கான தோஷ நிவர்த்தி தலம்.

Tags : Thiruppanandal ,Arunajadesuvar Swami ,
× RELATED குடந்தை, தி.மருதூர், திருப்பனந்தாள் 3...