×

ரூ25.6 கோடியில் தமிழகம் முழுவதும் 131 கோயில் குளங்கள் சீரமைக்கும் பணி: அறநிலையத்துறை தகவல்

சென்னை: ரூ.25.6 கோடியில் தமிழகம் முழுவதும் 131 கோயில் குளங்கள் சீரமைக்கும் பணி நடைபெறுவதாக அறநிலையத்துறை தெரிவித்தது. சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் கோயில்களின் திருக்குளம் மற்றும் திருத்தேர் பணிகள் தொடர்பாக  சீராய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், கூடுதல் ஆணையர்கள் கண்ணன், திருமகள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் மற்றும் அலுவலர்கள்  கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களின் குளங்களை சீரமைக்கும் வகையில் சென்னை 1 மண்டலத்தில் ரூ.5.9 கோடியில் 12 பணிகள், மதுரை மண்டலத்தில் ரூ. 4.96 கோடியில் 10 பணிகள், வேலூர் மண்டலத்தில் ரூ.4.21 கோடியில் 13 பணிகள், தஞ்சாவூர் மண்டலத்தில் ரூ. 2.62 கோடியில் 10 பணிகள், மயிலாடுதுறை மண்டலத்தில் ரூ.1.99 கோடியில் 25 பணிகள், விழுப்புரம் மண்டலத்தில் ரூ.1.47 கோடியில் 13 பணிகள் உள்ளிட்ட 20 மண்டலங்களில் ரூ.25.6 கோடியில் நடைபெற்று வரும் 131 கோயில் குளங்களின் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.அதேபோல், கோயில்களுக்கு புதிய தேர் உருவாக்கம் மற்றும் புனரமைக்கும் வகையில் விழுப்புரம் மண்டலத்தில் ரூ.2.56 கோடியில் 7 பணிகள், மயிலாடுதுறை மண்டலத்தில் ரூ.2.27 கோடியில் 5 பணிகள், மதுரை மண்டலத்தில் ரூ.2.07 கோடியில் ஒரு பணி, காஞ்சிபுரம் மண்டலத்தில் ரூ.1.51 கோடியில் 3 பணிகள், திருவண்ணாமலை மண்டலத்தில் ரூ.1.24 கோடியில் 3 பணிகள் உள்ளிட்ட 20 மண்டலங்களில் ரூ.16 கோடியில் நடைபெற்று வரும் 65 தேர் பணிகள் குறித்தும் விரிவான ஆய்வு  மேற்கொள்ளப்பட்டது. மேலும், குளங்கள் மற்றும் தேர் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், திருத்தேர் வீதி உலாவின்போது, எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறா வண்ணம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மிகுந்த கவனத்துடன் பணியாற்றிட வேண்டும் என்று அலுவலர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு அறிவுரைகளை  வழங்கினார். …

The post ரூ25.6 கோடியில் தமிழகம் முழுவதும் 131 கோயில் குளங்கள் சீரமைக்கும் பணி: அறநிலையத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Department of Public Affairs ,Chennai ,Charity Department ,Chennai, ,Nungambakkam ,State Department ,
× RELATED அனைத்து நியாயவிலைக் கடைகளிலும்...