×

‘வீரா ராஜ வீர…’ பாடலின் காப்புரிமை விவகாரம் ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிரான உத்தரவுக்கு தடை: ஐகோர்ட் நடவடிக்கை

புதுடெல்லி: ‘வீரா ராஜ வீர…’ பாடலின் காப்புரிமை விவகாரத்தில் ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்-2’ திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘வீரா ராஜ வீர…’ என்கிற பாடல் தனது தந்தை நசீர் பயாசுதீன் தாகர் மற்றும் பெரியப்பா ஜாஹிருதீன் தாகர் ஆகியோர் இயற்றிய ‘சிவ ஸ்துதி’ பாடலில் இருந்து ‘காப்பி’ அடிக்கப்பட்டதாக கர்நாடக இசை பாடகர் பயாஸ் வாசிபுதீன் தாகர் குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை கடந்த 25ம் தேதி விசாரித்த ஒரு நீதிபதி அமர்வு, இந்த வழக்கு முடியும் வரையில் ரூ.2 கோடியை நீதிமன்ற பதிவாளரிடம் முன்வைப்பு தொகையாக செலுத்த வேண்டும். பாடல் இசையமைப்பிற்காக பயாசுதீன் தாகர் மற்றும் ஜாஹிருதீன் தாகர் ஆகியோருக்கு உரிய கவுரவம் அளிக்கும் வகையில் அனைத்து ஓடிடி மற்றும் ஆன்லைன் தளங்களிலும் படத்தில் அவர்களது பெயர்களை சேர்க்க வேண்டும்.

பயாசுதீன் தாகர் மற்றும் ஜாஹிருதீன் தாகரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் கொடுக்க வேண்டும் என படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் மெட்ராஸ் டாக்கிஸ் பட தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஏ.ஆர். ரகுமான் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு நேற்று 2 நீதிபதிகளை கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துக்கு எதிராக தனி நீதி அமர்வு பிறப்பித்த சில உத்தரவுக்கு தடை விதித்தனர். அதே சமயம், தனி நீதிபதியின் உத்தரவுப்படி, ஏ.ஆர்.ரகுமானும், பட தயாரிப்பு நிறுவனமும் 10 நாட்களுக்குள் நீதிமன்ற பதிவாளரிடம் ரூ.2 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags : High Court ,AR Rahman ,New Delhi ,Mani Ratnam ,
× RELATED ஜமா பாரி இளவழகன் ஜோடியாக ரம்யா ரங்கநாதன்