×

விரைவில் வழிகாட்டுதல் அடங்கிய அரசாணை பள்ளி பஸ்களில் கேமரா, சென்சார் கட்டாயம்: போக்குவரத்து துறை ஆணையரக உயரதிகாரி தகவல்

சென்னை: பள்ளி பேருந்துகளில் கேமரா, சென்சார் பொருத்துவதற்கான  வழிகாட்டுதல்கள் அடங்கிய அரசாணை வெளியிடப்படும் என போக்குவரத்துத் துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து, தமிழக போக்குவரத்து துறை ஆணையரக உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் ஏராளமான பள்ளிகளுக்கு சொந்தமாக பேருந்துகள் உள்ளன. இதன் மூலமே பெரும்பாலான மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இப்படி இயக்கப்படும் பேருந்துகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, அனைத்து பள்ளி வாகனங்களிலும் கேமரா, சென்சார் பொருத்துவதை கட்டாயமாக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான வரைவு, கடந்த ஜூன் 29ம் தேதி உள்துறை செயலாளரால் அரசிதழில் வெளியிடப்பட்டது. அதில், ‘பள்ளி வாகனங்களின் முன்புறம் கேமரா பொருத்த வேண்டும். இதேபோல், வாகனத்தை பின்னோக்கி இயக்கும்போது முழுமையாக பின்புறம் இருப்பதை பார்க்கும் வகையில் வாகனத்தின் பின்புறமும் கேமரா பொருத்த வேண்டும். பின்புறம் இருப்பவற்றை உணர்ந்து உடனடியாக எச்சரிக்கை ஒலி எழுப்பும் வகையில் சென்சார் பொருத்த வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கான கருத்துக்கேட்பு கடந்த ஜூலை 29ம் தேதி முடிவடைந்தது. ஏராளமானோரிடம் இருந்து கருத்துகள் பெறப்பட்டுள்ளன. இதை பரிசீலித்து உத்தரவை பிறப்பிக்க தமிழக அரசும் ஒப்புதல் வழங்கியுள்ளது. ஓரிரு நாட்களில் பேருந்துகளில் கேமரா, சென்சார் பொருத்துவதற்கான வழிகாட்டுதல்கள் அடங்கிய அரசாணை வெளியிடப்படும். தற்போது அதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்….

The post விரைவில் வழிகாட்டுதல் அடங்கிய அரசாணை பள்ளி பஸ்களில் கேமரா, சென்சார் கட்டாயம்: போக்குவரத்து துறை ஆணையரக உயரதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Transportation Department ,Commissar ,Dinakaraan ,
× RELATED கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில்...