×

நீர்வரத்து 57 அயிரம் கன அடியானதால் ஒகேனக்கல்லில் பரிசல் சவாரிக்கு கொடுத்த அனுமதி மீண்டும் ரத்து-மேட்டூர் அணைக்கும் வரத்து 50 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது

பென்னாகரம் : நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று மாலை அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல்லில் நேற்று காலை பரிசல் சவாரிக்கு கொடுத்த அனுமதி மாலையில் மீண்டும் ரத்து செய்யப்பட்டது.கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரளா மாநிலம் வயநாட்டிலும் மீண்டும் மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கனவே இவ்விரு அணைகளும் நிரம்பிய நிலையில் இருப்பதால் ஆணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 28,944 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 26,349 கனஅடி வீதம் உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. இதேபோல், கபினி அணைக்கு வரும் நீரின் அளவு 16,657 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 19,667 கனஅடி வீதம் உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று நேற்று காலை 31 ஆயிரம் கன  அடியாக இருந்தது. இதையடுத்து, ஒகேனக்கல் காவிரியில் நேற்று காலை முதல்  பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. கடந்த ஒரு  மாதத்திற்கு பிறகு மீண்டும் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டதால்  சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். இருப்பினும்  சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மெயின் அருவியில்  குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து நீடித்தது. இந்நிலையில்,  நேற்று மாலை ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரித்தது. விநாடிக்கு 57 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து  அதிகரித்ததால் நேற்று மாலையே பரிசல் இயக்குவதற்கான அனுமதி மீண்டும் ரத்து  செய்யப்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர். அதே போல மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் நேற்று மாலை விநாடிக்கு 40,000 கனஅடியிலிருந்து 50,000 கன அடியாக அதிகரித்துள்ளது. ஏற்கனவே, அணை நிரம்பிய நிலையில் உள்ளதால், உபரிநீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 23,000 கனஅடி வீதமும், உபரிநீர் போக்கியான 16 கண் மதகு வழியாக 27,000 கனஅடி வீதமும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 400கன அடியிலிருந்து 600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 120அடியாகவும் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் உள்ளது….

The post நீர்வரத்து 57 அயிரம் கன அடியானதால் ஒகேனக்கல்லில் பரிசல் சவாரிக்கு கொடுத்த அனுமதி மீண்டும் ரத்து-மேட்டூர் அணைக்கும் வரத்து 50 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது appeared first on Dinakaran.

Tags : Ogenagle ,Bennagaram ,Ogenakal ,Mattur Dam ,Ogenacle ,Dinakaran ,
× RELATED கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது