×

இன படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிக்க ஐ.நா.வில் புதிய தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான நடவடிக்கைகளை சிங்கள ஆட்சியாளர்கள் மேற்கொள்ளவில்லை. இனியும் தாமதிக்காமல் அதற்கான நடவடிக்கைகளை இலங்கை  அரசு மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை பேரவையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.  ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்குவதில் இந்தியாவின் நிலை வரவேற்கத்தக்கது. ஆனால், போதுமானதல்ல. பன்னாட்டு அவைகளிலும், இரு தரப்பு பேச்சுகளின் போதும், 13 வது அரசியலமைப்புச் சட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று இந்தியா இதுவரை நூறு முறை வலியுறுத்தியிருக்கும். இப்போது 101வது முறையாக வலியுறுத்துவதால் மட்டும் எந்த பயனும் ஏற்பட்டுவிடாது. மாறாக, இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து ஈழத்தமிழர்களுக்கு குறைந்தபட்ச அதிகாரத்தையாவது பெற்றுத்தர வேண்டும். கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை, அதன் அடிப்படைத் தேவைகளுக்குக் கூட இந்தியாவைத் தான் நம்பியிருக்கிறது. இத்தகைய சூழலில், 13வது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் அம்சங்களை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடங்க வேண்டும். அவற்றில் ஏற்படும் முன்னேற்றங்களின் அடிப்படையில் தான் உதவிகளை வழங்க முடியும் என்று நிபந்தனை விதிப்பதன் மூலம் ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் பெற்றுத் தர இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐ.நா. மனித உரிமை பேரவையில் ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்திய இந்தியா, அங்கு நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளுக்கு காரணமானவர்களை தண்டிப்பது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காதது ஏமாற்றமளிக்கிறது. இலங்கை இனப்படுகொலைகள் நிகழ்ந்து 13 ஆண்டுகள் ஆகியும் அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படாததை ஏற்க முடியாது. இலங்கை போர்க்குற்ற விசாரணையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்த புதிய தீர்மானம் வரும் 23ம் தேதி ஐ.நா. மனித உரிமை பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, அக்.6ம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிக்கும் வகையில், புதிய தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்….

The post இன படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிக்க ஐ.நா.வில் புதிய தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : UN ,Ramadoss ,CHENNAI ,BAMA ,Elamites ,Sri Lanka ,
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்...