×

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் நீர்நிலையை ஆக்கிரமித்துள்ளதா?: அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் நீர்நிலையை ஆக்கிரமித்துள்ளதா என்று அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தஞ்சாவூர் மாவட்டம் திருமலைசமுத்திரம் கிராமத்தில் செயல்படும் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் கடந்த 35 ஆண்டுகளாக அனுபவித்து வரும் 31.37 ஏக்கர் பரப்பளவிலான அரசு புறம்போக்கு நிலத்தை தங்களுக்கு ஒதுக்கும்படியும், வித்தியாச தொகையும் செலுத்த தயாராக இருப்பதாகவும் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் அரசிடம் கோரிக்கை வைத்தது. இந்த கோரிக்கையை நிராகரித்து தமிழக அரசு  உத்தரவு பிறப்பித்தது. மேலும், இடத்தை காலி செய்யும்படி தஞ்சாவூர் வட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சாஸ்த்ரா பல்கலைக்கழகம் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது,  சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள நிலத்தில் ஒரு பகுதி நீர்நிலை என்பதால், அதை அகற்ற வேண்டும். பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதி நீர்நிலை என்பதற்கு வருவாய் துறை ஆவணங்கள் உள்ளன என்று அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் தெரிவித்தார்.அதற்கு, பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதியில் எந்த நீர்நிலையும் இல்லை என்று சாஸ்த்ரா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள நிலம் நீர்நிலையா, எந்த பகுதி நீர்நிலையில் உள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 26ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.  அரசின் அறிக்கைக்கு சாஸ்த்ரா பதிலளிக்க அனுமதித்த நீதிபதிகள், அதன்பின் நீர்நிலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா என்று சுதந்திரமான முறையில் மதிப்பீடு செய்யப்படும் எனவும் உத்தரவிட்டனர்….

The post தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் நீர்நிலையை ஆக்கிரமித்துள்ளதா?: அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Thanjavur Shastra University ,Govt ,Chennai ,Chennai High Court ,Tamil Nadu government ,
× RELATED எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும்...