×

செல்லப் பொண்ணு பூமாரி!

தமிழ் என்றாலே அழகு. அதிலும் நம் நெல்லை, கன்னியாகுமரி தமிழின் வார்த்தைகளும், உச்சரிப்புகளும் கூடுதல் அழகு. இதனாலேயே “@Sonia Mahi” யூ டியூப் சேனலுக்கு ரசிகர் பட்டாளம் குவிகிறது. சிம்பிள் அனிமேஷன் கேரக்டர்கள். தினம் தினம் வீட்டில் நடக்கும் மிடில் கிளாஸ் சம்பவங்கள், ஸ்கூல் நிகழ்வுகள், ஹாஸ்டல் கதைகள் என இந்தச் சேனல் செம மாஸ் காட்டுகிறது.‘ஏட்டி…’, ‘ரொம்பச் சௌரியம்…’, ‘என்ன மக்களே…’, ‘எழும்புட்டி…’ இப்படி மற்ற ஊர்க்காரர்களும் கூட சமூக வலைத் தளங்களில் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி வருகிறார்கள். யார் இந்த சோனியா மஹி, எப்படி இந்த ஐடியா உருவானது என்னும் கேள்வியுடன் சோனியாவை தொடர்பு கொண்டோம். ‘‘நான் சோனியா மகேஷ். என் கணவர் பெயர்தான் மகேஷ். அதைத்தான் சேனலுக்கு பெயரா வெச்சிருக்கோம். எனக்கு சொந்த ஊர் திருநெல்வேலி அருகே ஆவரைக் குளம். கல்யாணம் முடிச்சு கன்னியாகுமரி வந்திட்டேன்.  நான் எம்.ஏ., எம்.பில்., பி.எட் முடிச்சிருக்கேன். ரெண்டு வருஷம் எங்கூர் மெட்ரிகுலேஷன் பள்ளியிலே டீச்சரா வேலை பார்த்திருக்கேன். எனக்கு லக்‌ஷித் மஹி, தினோஷித் மஹினு ரெண்டு பசங்க. போன லாக்டவுன் நேரத்துல என் குழந்தைகள் அதிகமா கார்ட்டூன் பார்க்கறதைப் பார்த்தேன். ரிமோட் கூட கொடுக்க மாட்டாங்க. அதனால நானும் அவங்க பார்க்கற கார்ட்டூன்களைப் பார்க்க ஆரம்பிச்சேன்.நம்ம காலத்து கார்ட்டூன் எல்லாம் கீரை சாப்பிட்டா சக்தி கிடைக்கும்னு சொல்லிக்கொடுத்துச்சு. ஆனா, இப்போதைய கார்ட்டூன்கள் எல்லாம் சமோசா, லட்டு, கேண்டி, சாக்லேட்… இப்படி சாப்பிட்டா சக்தி வர மாதிரி காட்றாங்க. தவிர பெரியவங்க பேசும் வார்த்தைகள்ல பேசுறது ஆரோக்கியமா தோணலை. அப்பதான் நம்ம குழந்தைங்க பார்க்கற மாதிரி  ஏன் அனிமேஷன் வீடியோக்கள் செய்யக் கூடாதுன்னு தோணுச்சு. அதன் விளைவுதான் இந்த யூ டியூப் சேனல்…’’ என்று சொல்லும் சோனியாவின் கணவர் எம்பிஏ, எல்.எல்.பி முடித்தவராம்.

‘‘ஒரு தனியார் நிறுவனத்துல அவர் ஹெச்.ஆரா இருக்கார். அவருக்கு போட்டோஷாப் தெரியும். பேனர்கள், எடிட்டிங்குக்கு அவர் உதவறார்.ஸ்கூல் டீச்சரா இருந்ததால குழந்தைகளுக்கு நிகரா மொபைல், டெக்னாலஜி, கம்ப்யூட்டர்ல எல்லாம் அப்டேட்டா இருக்கணும்னு ரொம்ப ஆசைப்படுவேன். அப்படியான தேடலப்பதான் எனக்கு ‘Tween Craft App’ கண்ணுல பட்டுச்சு.

அந்த ஆப்லயே தேவையான கேரக்டர்ஸ் இருக்கும். அதை செலக்ட் செய்து ஃபிரேம் ஃபிரேமா சேர்த்து வாய்ஸ் கொடுத்து மூவி பண்ணலாம். இத வெச்சு ஆரம்பத்திலே என் குழந்தைகளுக்கான ரைம்ஸ்தான் செய்து காண்பிச்சுட்டு இருந்தேன். இதையேதான் இப்ப சேனலாவும் மாத்தியிருக்கேன். ஆரம்பத்திலே இந்த ட்வீன் ஆப் பயன்படுத்த கொஞ்சம் நேரம் ஆச்சு, கேரக்டர் தேர்வு, வாய்ஸ் இப்படி எல்லாமே நான் ஒருத்தியாதான் செய்யணும்’ ஆம் அந்த அத்தனைக் கேரக்டர்களின் வாய்ஸ் சோனியா மஹி மற்றும் அவர் குழந்தைகளின் வாய்ஸ்தான். இந்த ட்வீன் appஐ அடிப்படையா வெச்சு இப்போ நிறைய யூடியூப் சேனல்ஸ் இருக்கு. ஆனா, எங்க ஸ்பெஷல் நெல்லை, கன்னியாகுமரி வட்டார மொழி உச்சரிப்பு தான். நானும் என் குழந்தைகளுமா சேர்ந்துதான் சேனல்ல வாய்ஸ் கொடுக்கறோம். அந்தக் கார்ட்டூன்ஸ்ல வர எல்லா கதைகளும் என் சொந்த வாழ்க்கைல நடந்ததுதான். ஹாஸ்டல் வாழ்க்கை, அங்கே இருந்த ஃப்ரெண்ட்ஸ், ஏன் அந்த பூமாரி என்கிற கேரக்டர்… இதெல்லாமே நிஜம். அந்த பூமாரி என் நெருங்கின தோழிதான். எங்க சேனலுக்கு இப்போ சில்வர் பட்டன் கூட கிடைச்சிருக்கு …’’ என நெகிழும் சோனியா ‘சோனியா மகேஷ்’ என்னும் இன்னொரு சேனலில் விழிப்புணர்வு வீடியோக்கள் பதிவிடுகிறார்.  பல கார்ப்பரேட் ஆஃபீஸ் மக்களும் கூட பூமாரிக்கு ஹார்டின் போட்டு அம்பு விடுகிறார்கள்.  தொகுப்பு : ஷாலினி நியூட்டன்

The post செல்லப் பொண்ணு பூமாரி! appeared first on Dinakaran.

Tags : @Sonia Mahi ,
× RELATED என் உடல்நிலை பற்றி பொய் பரப்பும் பாஜ: ஒடிசா முதல்வர் பட்நாயக் வேதனை