×

பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே பாரதிய ஜனதாவில் பதவி: திமுகவில் இணைந்த மைதிலி வினோ புகார்

சென்னை: பாஜவில் பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே பதவி வழங்குகிறார்கள் என்றும், அவர்கள் கூலிக்கு ஆட்களை அழைத்து வந்து கூட்டத்தை காட்டுகிறார்கள் என்றும் திமுகவில் இணைந்த மைதிலி வினோவின் குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பாஜ கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளராக பதவி வகித்து வந்தவர் மைதிலி வினோ. சமீபத்தில் இவர் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து திமுகவில் இணைவது குறித்து பேசியதாக தகவல் கசிந்தது. இதனையடுத்து கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதோடு, கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் மைதிலி வினோவை கட்சியிலிருந்து நீக்குவதாக கோவை மாவட்ட பாஜ தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில், கோவைக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மைதிலி வினோ திமுகவில் இணைந்தார்.  இந்நிலையில், மைதிலி வினோ தனது முகநூல் பக்கத்தில் திமுகவில் இணைவது குறித்து தன்னிலை விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:   கோவை மாவட்ட பாஜ தலைவர் உத்தம பாலாஜிக்கு, பாஜ கட்சியில் 22 ஆண்டுகளுக்கு முன்பு உறுப்பினராக இணைந்து கடின உழைப்பால் மாவட்ட மகளிரணி, மாநில மகளிரணி என பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றி வந்த நான் அண்மை காலமாக பாஜவின் மாவட்ட தலைமையின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் கட்சியிலிருந்து விலகும் முடிவுக்கு வந்தேன். அதைத் தொடர்ந்து தான் கடந்த இரு நாட்களுக்கு முன்பு தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து திமுகவில் இணையும் முடிவுக்கு வந்தேன். ஆனால் இன்று கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாலும் கட்சிக்கு களங்கம் விளைவித்ததாலும் என்னை கட்சியை விட்டு நீக்குவதாக தாங்கள் அறிக்கை விட்டுள்ளீர்கள். நான் என்ன களங்கம் விளைவித்தேன் என்பதை தங்களால் கூற முடியுமா?. களங்காமல் கட்சிக்காக உழைத்து வந்ததால் இதனை கூறியுள்ளீர்களா?.  பாஜ என்றால் மக்களுக்கு என்னவென்றே தெரியாத காலக் கட்டத்தில் கட்சிக்காக பல போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றை நடத்தி கட்சியில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோரை இணைத்து கோவையில் பாஜ வளர்ச்சிக்கு எப்படியெல்லாம் பாடுபட்டுள்ளேன் என்பது உணமையான பாஜகவினருக்கு நன்றாக தெரியும். பாஜகவில் உழைப்பவருக்கு பதவி என்ற நிலை மாறி இன்று பணம் படைத்தவருக்கே பதவி என்ற நிலையல்லவா நிலவுகிறது. ரியல் எஸ்டேட் மூலம் சம்பாதித்த 310 கோடி ரூபாய் சொத்து இருப்பதால் நீங்கள் இன்று மாவட்ட தலைவர் என்றால் நாளை ஒருவர் 320 கோடி ரூபாய் சொத்து வைத்திருந்தால் அவர் தான் அடுத்த மாவட்ட தலைவரா?. இப்படி இருந்தால் கட்சிக்காக அடிப்படையிலிருந்து உழைத்தவர்கள் கதி என்னாவது?.   உண்மையான பாஜகவினர் தகவல் வராமல் வீட்டிலிருக்கும் போது பாஜக நிகழ்ச்சிகளில் கூலிக்கு வருபவர்கள் நின்றிருக்கிறார்கள். இதை கேட்டால் கட்சி கட்டுப்பாட்டை மீறியவர் பட்டியலில் சேர்க்கப்படுகிறார்கள். கட்சியின் மூத்த நிர்வாகிகளை அவமதித்து புறந்தள்ளி பணம் படைத்தவர்களுக்கு பதவி வழங்கும் தங்களை போன்றவர்கள் மாவட்ட தலைமை பொறுப்பில் உள்ள வரை இங்கு தாமரை மலர வாய்ப்பில்லை.   தாமரை மலர தண்ணீர் ஊற்றியவர்கள் பலரும் இன்று தங்களின் செயல்பாட்டால், தொண்டர்களுக்கும் உண்மை விசுவாசிகளுக்கும் மதிப்பளிக்கும் திமுகவிற்கு செல்ல தயாராகி விட்டனர். எனவே மொட்டு வந்து மலர இருந்த தாமரை தங்களை போன்ற வீண் கர்வம் பிடித்தவர்களால் வாடி கருகி போகும் என்பது தான் நிதர்சனம்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

The post பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே பாரதிய ஜனதாவில் பதவி: திமுகவில் இணைந்த மைதிலி வினோ புகார் appeared first on Dinakaran.

Tags : Mythili Vino ,Chennai ,Baja ,
× RELATED உதவியாளர்களிடம் ரூ.4 கோடி பறிமுதல்...