×

பீகார் சட்டசபை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார் விஜய் குமார் சின்ஹா

பாட்னா: பீகார் சட்டசபை சபாநாயகர் பதவியை விஜய் குமார் சின்ஹா ராஜினாமா செய்தார். பீகாரில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகளுடன் இணைந்து புதிய ஆட்சி அமைத்துள்ளது. பீகார் முதல்வராக மீண்டும் நிதிஷ்குமார் பதவியேற்றார். துணை முதலமைச்சராக தேஜஸ்வி யாதவ் பதவியேற்றார். இந்நிலையில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு மீது சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. 243 எம்.எல்.ஏக்களை கொண்ட பீகார் சட்டப்பேரவையில் நிதிஷ்-க்கு 164 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளது. இதனால் நிதிஷ் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவார் என்பதில் சந்தேகம் இல்லை. இந்நிலையில் சபாநாயகரான பாஜகவின் விஜயகுமார் சின்ஹாவால் மாநில அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. விஜய்குமார் சின்ஹா மீது நம்பிக்கை இல்லை என ஜேடியூ-ஆர்ஜேடி எம்.எல்.ஏக்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொடுத்தனர். பொதுவாக இத்தகைய நம்பிக்கை இல்லா தீர்மானங்கள், ஆட்சி மாறுதல்களின் போது சபாநாயகர் ராஜினாமா செய்வது வழக்கம். ஆனால் பாஜகவின் விஜய்குமார் சின்ஹா பதவியை ராஜினாமா செய்ய மறுத்து, நம்பிக்கை இல்லா தீர்மானத்தையும் நிராகரித்தார். மேலும், இதுகுறித்து அவர் கூறியபோது, ஆகஸ்ட் 9-ம் தேதியன்று கொடுக்கப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் முறையாக இல்லை; ஆகஸ்ட் 10-ந் தேதிதான் முறையான நம்பிக்கை இல்லா தீர்மானம் கொடுத்தனர்; ஒரு நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எடுத்துக் கொள்ள 14 நாட்கள் அவகாசம் தேவை. ஆகையால் தான் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றார். இச்சூழலில் இன்று காலை மீண்டும் பீகார் சட்டசபை கூடியது. அப்போது பேசிய சபாநாயகர் விஜய்குமார் சின்ஹா, எனக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தெளிவானதாக இல்லை எனவும்,  தமது பதவியை ராஜினாமா செய்வதாகவும்  கூறினார். இதனால் பீகார் அரசியலில் நிலவிய குழப்பம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது….

The post பீகார் சட்டசபை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார் விஜய் குமார் சின்ஹா appeared first on Dinakaran.

Tags : Vijay Kumar Sinha ,Bihar Assembly ,Speaker ,Patna ,Bhajagar ,Bihar ,Dinakaran ,
× RELATED ராகுல், ஓம்பிர்லா தொகுதிகளில் இன்று...