நம்ம ஊரு சாமிகள்
நாகர்கோவில், கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கோயில் கொண்டு அருள் புரிகிறாள் நடுக்காட்டு இசக்கியம்மன். சுமார் நாநூறு ஆண்டுகளுக்கு முன்னால் நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் புன்னை மரங்கள் நிறைந்த அடர்ந்த காடு இருந்தது. அக்காட்டைப் ‘பஞ்சவன்பாடு’ என அழைத்தனர். இக்காட்டின் நடுப்பகுதியில் இசக்கியம்மன் கோயில் இருந்தது. காட்டின் நடுப்பகுதியில் கோயில் இருந்ததால், இதை ‘நடுக்காட்டு இசக்கியம்மன் கோயில்’ என அழைத்தனர்.
கி.பி, 1956-ம் ஆண்டு வரை இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இணைந்திருந்தது திருவிதாங்கூர் சமஸ்தானத்தை மார்த்தாண்டவர்மா (1729 - 1758) வுக்குப் பின்னர் ஆண்ட மூலந்திருநாள் ராமவர்மா (1885-1924) தன்னுடைய ஆட்சிக்காலத்தில் கொடிய குற்றங்களைச் செய்தவருக்குத் தூக்குத்தண்டனை கொடுத்தார். இத்தண்டனையை பஞ்சவன் காட்டுப்பகுதியிலுள்ள ‘கழுவன்திட்டு’’ என்னும் இடத்தில் தான் நிறைவேற்றி வந்தனர்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில், குற்றவாளிகளுக்குத் தூக்குத்தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்னால் அந்த நபரை கோயிலுக்கு அழைத்துச் சென்று வழிபாடு நடத்தும் மரபு இருந்தது. எனவே தூக்குத்தண்டனைக் குற்றவாளிகள் கோயிலுக்குச் சென்று வழிபடச் செய்யும் பொருட்டு பஞ்சவன் காட்டுப்பகுதியில் மார்த்தாண்டவர்மாவினால் இசக்கியம்மன் கோயில் நிறுவப்பட்டது. தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு சுமார் 1 மணி நேரத்திற்கு முன்னர் கைதியைக் கோயிலுக்கு அழைத்துச் சென்று இசக்கியம்மனை வழிபடச் செய்த பின்னர் கழுவன்திட்டுப் பகுதியில் தூக்குத்தண்டனையை நிறைவேற்றுவர். கோயில் அமைந்திருந்த இடம் அடர்ந்த காடாக இருந்ததினாலும் அங்கு தூக்குத்தண்டனைக் கைதிகள் இசக்கியம்மனை வழிபட்டதாலும் இசக்கியம்மன் கொடூரத்தன்மை உடையவளாகச் சித்தரிக்கப்பட்டதாலும், மக்கள் கோயில் பக்கம் நண்பகல், மாலை, இரவு வேளைகளில் செல்லாமல் இருந்தார்கள். தூக்குத்தண்டனைக் கைதியைக் கோயிலுக்கு அழைத்துச் சென்ற நேரத்தில் மட்டும் வழிபாடு மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன. பிற சமயங்களில் வழிபாடு
நடத்தப்படவில்லை.
சில கைதிகளின் தூக்குத்தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்னால் ஒரு மண்டலம் அதாவது 41 நாட்கள் அவர்களைச் சிறையில் அடைத்து வைத்திருந்தனர். அந்நாட்களில் அக்கைதிகளை 41 நாட்களும் வடசேரி பகுதியிலுள்ள பத்திரகாளி அம்மன் கோயிலுக்கு அழைத்துச் சென்று வழிபடச் செய்தனர். இப்பணியினை செய்யும் நபர்களுக்கு ‘ஆரச்சர்’ என்று பெயர். அதுவே மருவி ஆர்ச்சார் என சொல்லப்படலாயிற்று. நாளடைவில் ‘ஓட்டு உருவம்’ இருந்த இடத்தில் கல்நடப்பட்டு அதில் ‘மஞ்சனை’ தேய்த்து வழிபடத் தொடங்கினர். இசக்கியம்மனைச் சாந்தப்படுத்துவதற்காக ஆடு, கோழி நேர்த்திக்கடனாகப் பலியிடப்பட்டன. காலப்போக்கில் நடுக்காட்டு இசக்கியம்மன் இருந்த காட்டுப்பகுதி நகரமாக மாறியது. எனவே இசக்கியம்மனைப் பொதுமக்கள் பயம் இல்லாமல் தரிசிக்க வரத் தொடங்கினர். 1977-ம் வருடம் ஒரு நாள் இரவில் திருவனந்தபுரம் வஞ்சியூரைச் சார்ந்த ஒரு பக்தரின் கனவில் இசக்கியம்மன் தோன்றி, தனக்கு நடுக்காட்டு கோயிலில் ஒரு கற்சிலை நிறுவ வேண்டும் என்று கூறியது.
இதனை, அவர் நடுக்காட்டுக் கோயிலுக்கு வந்த பக்தர்களிடம் தெரிவித்தார். கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிலை நிறுவ முற்பட்டனர். அவர்களின் முயற்சியால் எந்தவித் தடங்கலும் இன்றி 1977ம் ஆண்டு ஜூன் 10 ஆம் நாள் அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கல்மண்டபத்தின் மேல் சிறிய கோபுரம் அமைக்கப்பட்டு, மண்டபத்தைச் சுற்றிச் சுவரும் எழுப்பப்பட்டது. 1981- ம் ஆண்டு விநாயகர் சிலையும், முருகன் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
இசக்கியம்மன் சிலையின் வலதுபுறம் விநாயகர் சந்நதியும், இடதுபுறம் முருகன் சந்நதியும் அமைக்கப்பட்டன. விநாயகர் சந்நதியின் மேல் சிறிய கோபுரம் அமைக்கப்பட்டது. அக்கோபுரத்தில் ராமகிருஷ்ண பரமஹம்சர் காளிதேவிக்குச் சோறு ஊட்டுகின்ற சிற்பம் உள்ளது. கொடூரமானத் தெய்வமாக வணங்கப்பட்ட இசக்கியம்மன், சாந்த சொரூபமாகக் காட்சியளிக்கப்பட்டாள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
முருகன் சந்நதியின் வடக்குப் பகுதியில் ஒரு பக்தரின் அரளித்தோட்டம் இருந்தது. அத்தோட்டத்தில் பராமரிப்புப் பணி நடந்தபோது மண்ணிற்குள் புதைந்திருந்த ஒரு நாகர் சிலை கண்டெடுக்கப்பட்டது. அச்சிலை பிற நாகர் சிலைகளிலிருந்து வேறுபட்டிருந்தது. ஏனெனில், நாகர் சிலையின் மார்புப் பகுதியில் ஒரு சிவலிங்க உருவம் காணப்பட்டது. எனவே அந்தகரை ‘நாகர் சாஸ்தா’ என்றழைத்தனர். பக்தர் தன்தோட்டத்தில் நாகர் சிலையைக் கண்டெடுத்ததால், நாகர் சிலையுடன் தன் அரளித் தோட்டத்தையும் இசக்கியம்மன் கோயிலுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். இத்தோட்டம் இசக்கியம்மன் கோயிலோடு இணைக்கப்பட்டு ‘நாகர் சாஸ்தாவும்’ முருகன் சந்நதிக்கு வடப்பக்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நாகர் சாஸ்தாவின் சிலையின் மீது பெரிய நாகர்சிற்பம் ஒரு பக்தரால் நிறுவப்பட்டது.
இசக்கியம்மனின் தீவிர பக்தரான கிருஷ்ணன் கோவில் பகுதியைச் சேர்ந்த காசி என்பவரது 10 வயது மகள் ராணி, ஒரு நாள் திடீரென காணாமல் போய்விட்டாள். அவர் இசக்கியம்மனிடம் வந்து வருத்தத்துடன் முறையிட்டார்.
சுமார் ஒரு வாரத்திற்குப் பிறகு ராணி எவரின் துணையுமின்றி வீடு வந்து சேர்ந்தாள். காசி மிக்க மகிழ்ச்சி அடைந்து இசக்கியம்மன் கோயிலுக்குச் சென்று நேர்த்திக்கடனாக எப்பொருளையும் கொடுப்பதற்குத் தயாரானார். ஆனால் எந்தப் பொருளினைக் கொடுப்பது எனத் தெரியாமல் தவித்தார். அன்றிரவு அம்மன் அவர் கனவில் தோன்றி தான் வீற்றிருக்கும் இடத்தின் எதிரே மேற்குத்திசை நோக்கி தன் பாதுகாப்பிற்காகச் சுடலைமாடனின் சிலையை நிறுவ வேண்டும் என்று கூறினார். அதன்படி காசியின் மாமனார் சுவாமி அடிமை என்பவர் அம்மன் கனவில் கூறியதை நிறைவேற்றும் பொருட்டு சுடலைமாடன் சிலையை அமைத்தார். சுடலைமாடன் சிலையின் அருகே பேச்சியம்மன் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இக்கோயிலில் சுடலைமாடனுக்கு மக்கள் சைவ படைப்பைப் படைத்து வழிபடுகின்றனர். ஆடு, கோழிகள் பலியிடப்படுவது இல்லை.
சுடலைமாட சுவாமியின் வலப்புறம் ஒரு வேப்பமரம் உள்ளது. இம்மரத்தின் பக்கத்தில் ஒரு சூலாயுதம் வைக்கப்பட்டுள்ளது. இம்மரத்தையும் பக்தர்கள் இசக்கியம்மனாக வழிபடுகின்றனர். திருமணமாகி குழந்தை இல்லாதவர்கள் இந்த வேப்பமரத்தைச் சுற்றி வந்து குழந்தைவரம் வேண்டி வணங்கியதன் பலனாக குழந்தைப்பேறு பெற்றுள்ளனர். அவர்கள் நேர்த்திக்கடனாக மரத்தொட்டிலும், குழந்தை பொம்மையும் செய்து வேப்பமரத்தில் தொங்க விட்டுள்ளனர். நம்பியவர்க்கு நல்வாழ்வு அளிக்கிறாள் நடுக்காட்டு இசக்கி.
படங்கள்: ஆர்.மணிகண்டன்.
தொகுப்பு: சு.இளம் கலைமாறன்