×

ஆண்டு முழுதும் ரசிக்க வைக்கும் ஹைவேவிஸ் மலைப்பகுதியை மேம்படுத்த வேண்டும்: சுற்றுலா பயணிகள் கோரிக்கை

சின்னமனூர்: சின்னமனூர் அருகே ஹைவேவிஸ் மலை கிராமங்களில் தொடர் மழையின் காரணமாக அப்பகுதி சொர்க்க பூமியாக ஜொலிப்பதால், சுற்றுலா பயணிகள் தொடர்ந்து படையெடுத்து வருகின்றனர். இந்த சுற்றுலா தலத்தை மேலும் பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.சின்னமனூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையின் வரிசையில் இயற்கை அழகோடு சொர்க்க பூமியாய் ஏழுமலை கிராமங்களை கொண்டு ஹைவேஸ் பேரூராட்சி உள்ளது. இங்கு பிரதானமாக சுமார் 20,000 ஏக்கரில் ஏழுமலை கிராமங்களில் தேயிலை சாகுபடியும், பிற பகுதிகளில் ஏலம், காபி, மிளகு, ஆரஞ்சு உள்ளிட்ட பல்வேறு பணப்பயிர்களும் வாசனை திரவியங்களாய் தொடர்ந்து சாகுபடி செய்யப்பட்டு வரு கிறது.இந்த ஹைவேவிஸ் பேராட்சியின் மலை வரிசையில் மேகமலை, மணலார், மேல் மணலார், வெண்ணியார், மகராஜன் மெட்டு, இரவங்கலார், மற்றும் ராஜா அந்துவான், கடனா, ஆனந்தா, அடுக்கம்பாறை, சில்வர் குடுசு, கலெக்டர் காடு உள்பட காப்பி தோட்டங்களாக இருப்பதால் எங்கு பார்த்தாலும் வானுயர்ந்த மரங்கள், அடர்த்தியான இயற்கை எழில் கொஞ்சம் பச்சை பசேல் என தோட்டங்களும் நெருக்கமாக இருப்பதால் வருடம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருக்கும்.கேரள மாநிலம் தேக்கடி பகுதியை சார்ந்து உள்ளதால், வருடத்தில் எட்டு மாதங்கள் வரை தொடர்ந்து மழை பெய்து எப்போதும் பசுமையாகவே இருக்கும். தென் பழனி மலை அடிவாரத்தில் இருந்து 18 கொண்டை ஊசி வளைவுகளுடன் இந்த மலைச்சாலை சரியாக சின்னமனூரில் இருந்து 53வது கிமீ தொலைவில் அமைந்துள்ளது. ஏழுமலை கிராமங்களில் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட சுமார் 8,500 க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.இங்குள்ள இயற்கை அழகுகளின் பரிணாமத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு கடந்த 2008ம் ஆண்டு திமுக அரசு ஹைவேஸ் மலைப்பகுதியை சுற்றுலாத்தலமாக அறிவித்தது அதன்படி தொடர்ந்து 3 ஆண்டுகள் கோடை விழா நடத்தப்பட்டது. இதற்கிடையில் யானை கூட்டங்களும், சிறுத்தை மற்றும் வரிப்புலிகள், காட்டு மாடுகள், வரிக்குதிரை கள், அரிய வகை பாம்பு இனங்கள், சிங்கவால் குரங்குகள், கருஞ்சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்ட பல உயிரினங்கள் 1.50 ஏக்கர் அளவில் சின்னமனூர் வனத்துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் வனத்திற்குள் வாழ்கின்றன.ஒ்ன்றிய மற்றும் மாநில அரசுகள் மேகமலையை வன உயிரினச் சரணாலயமாக அறிவித்துள்ளதால் அதற்கான கட்டுப்பாடுகளுடன் மலை கிராமங்கள், வனங்கள், வன விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.இதற்கிடையில் சுற்றுலா வளர்ச்சிப் பணிகளுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பதற்காக 2009ம் ஆண்டில் அப்போதைய தேனி மாவட்ட கலெக்டர் முத்துவீரன் பெரும் முயற்சி எடுத்தார். இதற்கிடையே 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் ஒரு ஆண்டு மட்டுமே கோடை விழா நடத்தப்பட்டது. பின் இந்த சுற்றுலா தலத்தை மேம்படுத்தாமல் விட்டதால் எந்தவகையான பணிகளும் நடக்கவில்லை.இதற்கிடையே இப்பகுதியில் இருக்கும் சாலைகள் குறுகியவை என்பதால் அடிக்கடி விபத்துகள் நடப்பது வாடிக்கையானது. தொடர் மழையின் போது ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்படுவது வழக்கமானது. ஏற்கனவே இரண்டு முறை பஸ்கள் உருண்டு சுமார் 35 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலியாகி இருக்கின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும், தொடர்ந்து ஒரு வாரம் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தியும் மேம்பாட்டு பணிகள் நடைபெறவில்லை. இதுதொடர்பா தினகரன் நாளிதழில் செய்திக்கட்டுரை வெளியானது. இதையடுத்து ஏழுமலை கிராம மக்களுக்கு 86.87 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 2015ம் ஆண்டு சாலையோரங்களில் நீண்ட மற்றும் உயர்ந்த தடுப்புச் சுவர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட பாலங்கள், தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.இப்பகுதியில் 1978ம் ஆண்டு இயற்கை ஏரி பகுதிகளில் ஹைவேஸ், தூவானம், மணலார், வெ ண்ணியர், இரவங்கலார் என ஐந்து அணைகள் கட்டப்பட்டு ஒட்டு மொத்த மழை நீரையும் சேகரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.தூவனத்தில் கசியும் தண்ணீர் கம்பம் அருகில் உள்ள சுருளியில் அருவியாக கொட்டுவதால் சுற்றுலா தலமாகவும், முன்னோர்களை நினைவில் கொள்ளும் விதமாக அமாவாசை, பவுர்ணமி தினங்களில் தர்ப்பணம் செய்யும் இடமாகவும் மாறியுள்ளது.இந்த ஹைவேவிஸ் ஏழுமலை கிராம பகுதிகளில் சுத்தமான காற்றும், நீரும் உள்ளது. இதனால் தமிழகம் தவிர்த்து வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கமாக உள்ளது.தற்போது இரண்டு மாதங்களாக பெய்து வரும் பலத்த மற்றும் சாரல் மழையை ரசிப்பதற்கும், இப்பகுதியில் தங்கியிருந்து தங்களின் உடல் சுகாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளவும், சுற்றுலா பயணிகள் தொடர்ந்து படையெடுத்து வருகின்றனர்.ஆனால் சுற்றுலா பயணிகள் ஹைவேஸ் பேரூராட்சியில் குறைந்த எண்ணிக்கையில் உள்ள சாதாரண அறைகளில் மட்டுமே தங்கிச்செல்கின்றனர். அவர்களுக்கான சிறப்பான உணவகங்கள் நவீன வசதிகளுடன் கூடிய தங்குமிடங்கள் என்று எதுவும் இங்கு இல்லை. இதனால் சுற்றுலா பயணிகள் பலரும் கம்பம் போடி சின்னமனூர் உள்ளிட்ட இடங்களில் தங்கியிருந்து தினந்ே்தாறும் நீண்ட நேரம் பயணித்து இப்பகுதிக்கு வருகைதர வேண்டியதாக உள்ளது. இந்த அலைச்சல் காரணமாக பலரும் தங்கள் வருகையை தவிர்க்கின்றனர். எனவே இப்பகுதியை நிரந்தர சுற்றுலா தலமாக அறிவித்து அனைத்து வசதிகளையும் அரசு தரப்பில் செய்து கொடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது,‘‘வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகளுக்கான சீசன் இருக்கும் மலைப்பகுதியாக ஹைவேவிஸ் அமைந்துள்ளது. இங்கிருக்கும் மேகமலையில் திரளும் மேககூட்டங்கள் சொர்க்க பூமியாய் இருப்பதால், இயற்கை அளிக்கும் இன்பத்தை முழுமையாக ரசிக்க முடிகிறது. வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வருவதால் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் வனமும், தோட்டங்களும் பாதிக்கப்படாத வகையில் சுற்றுலா வருவோருக்கான வசதிகளை மேம்படுத்தினால் அரசுக்கும் அதிக வருமானம் கிடைக்கும்’’ என்றனர்….

The post ஆண்டு முழுதும் ரசிக்க வைக்கும் ஹைவேவிஸ் மலைப்பகுதியை மேம்படுத்த வேண்டும்: சுற்றுலா பயணிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chinnamanore ,Highways Mountain ,Chinnamanur ,Dinakaran ,
× RELATED கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்