×

சங்கீத மும்மூர்த்திகள் போற்றும் முதல் மூர்த்தி!

தியாகராஜ சுவாமிகள்

அப்பப்பா! இந்த காஞ்சி காமாட்சிக்கு அவளது மூத்த மகன் விநாயகரின் மீது எவ்வளவு பிரியம்! இந்த காஞ்சியை முதலில் அரசாண்டது ஆகாச பூபதி என்ற ராஜ ராஜன். அவன் சிறந்த தேவி உபாசகன். முப்பொழுதும், எப்போதும் தேவியின் திருப்பாதமே கதி, என்று வாழ்ந்த செம்மல். அவனது பக்தியைக் கண்டு மெச்சிய காமாட்சி தனது சீமந்த புத்திரனான விக்னேஸ்வரனையே தந்து விட்டாள். ஆம். தனது சீமந்த புத்திரனை, ஆகாச பூபதியின் மகனாக பிறக்க கட்டளையிட்டு விட்டாள் அம்பிகை. தாய் சொல்லை தட்டாத தனயனாக, விநாயகனும் ஆகாச பூபதிக்கு மகனாக உதித்தான்.

அவனது பெயர் சூட்டுவிழா நாள் வந்தது.  காஞ்சி மாநகரமே விழாக்கோலம் பூண்டது. விழாவின் முக்கிய அங்கமாக சுமங்கலி பூஜை நடந்தது! சுமங்கலிகளுக்கு படைக்கவிருக்கும் உணவு தயாராவதை, மேற்பார்வை பார்க்கும் பொறுப்பு ஆகாச பூபதியின் மனைவியினுடையது என்று சொல்லவும் வேண்டுமா! உணவு தயாராவதை மேற்பார்வை யிட, அந்த சௌபாக்யவதி சமையல் அறைக்குள் நுழைந்தாள். உணவு உண்ணும் சுவாசினிகள் (சுமங்கலிகள்)சாட்சாத் காமாட்சியின் அம்சம் என்பதால், உணவில் ஒருவித குறையும் இருக்கக்கூடாது, என்று தோன்றியது அவளுக்கு. உடன், தானிய வகைகளை தனது கைகளால் களைந்து பார்த்து, அதன் தரத்தை கண்டறிந்தாள். அப்படி அந்த மாதரசி செய்யும் போது, அவளது மோதிரத்தில் இருந்த ஒரு தங்க மணி உதிர்ந்து,  அந்த தானியக் குவியலில் கலந்து விட்டது.

இதை யாரும் கவனிக்க வில்லை.சுவாசினிகளுக்கு பூஜை செய்தபடியே, ஆகாச பூபதி அவர்களுக்கு பரிமாறிக் கொண்டு வந்தான். அந்த சுமங்கலிகளின் கூட்டத்தின் நடுவே,  ஒரே ஒரு சுமங்கலியின் முகத்தை கவனித்த ஆகாச பூபதிக்கு, அது அதிகம் பழகிய முகம்போல இருந்தது. அந்த அருள் வதனத்தை கண் கொட்டாமல் சில கணங்கள் பார்த்துக் கொண்டிருந்தான். அதை கவனித்த அந்தப் பெண், ஒரு மர்மப் புன்னகை பூத்த படியே, இலையில் பரிமாறியிருந்த மோதகத்தை வாயில் எடுத்துப் போட்டுக் கொண்டாள்.

அதை கவனித்த மன்னன், மற்ற சுமங்கலிகளுக்கு பூஜை செய்ய,  அவர்களை நோக்கி நகர்ந்தான். ஆனால் அவன் மனதை” யார் அந்த சுமங்கலிப் பெண் ?” என்ற கேள்வி மட்டும் பாடாய்ப் படுத்தியது. அதற்கு பதிலை, யோசித்துக் கொண்டே பூஜையைத் தொடர்ந்தான். சட்டென்று கருவறையில் இருக்கும் காமேஸ்வரியின் திருமுகமும்,  பந்தியில் அமர்ந்து உண்டவளின் திருமுகமும் ஒரே முகம்போல மனதில் நிழலாடியது. அதிர்ந்த மன்னன்,  சட்டென்று கையில் இருந்த பூஜை சாமானை போட்டு விட்டு,  அம்பிகை இருந்த இடத்திற்கு ஓடினான். அங்கே அம்பிகையைக் காணவில்லை. ஆனால், அரண்மனைக்கு வெளியில் கொட்டும் மழையின் ஆரவாரம் காதைப் பிளந்தது. கொட்டுவது நீர் இல்லை,  தங்க மணிகள்!

ஆம் மகாராணியின் தங்கக் கைகளில் இருந்த தங்க மோதிரத்தின் ஒரு சின்ன மணி, மோதகத்தில் கலந்திருந்தது.  அந்த மோதகம் சரியாக அம்பிகை உண்ணும் இலையில் வந்து விழுந்தது. அந்த தங்கமணி மோதகம், அம்பிகையின் தங்க வயிற்றில் புகுந்த அடுத்த நொடி, காஞ்சி முழுவதும்,  அதாவது தொண்டை மண்டலம் முழுவதும்,  தங்கமழையாக பொழிந்து தீர்த்தது.

தெளிந்த மனதோடு, சதா தன்னை தியானிக்கும் பக்தனுக்கும் ( ஆகாச பூபதி) தாய் சொல்லை தட்டாமல் பூமியில் பிள்ளையாக பிறந்த கணேசனையும், பெருமைப் படுத்த ஊரெங்கும் தங்க மழை பொழிந்து விட்டாள் காமாட்சி. இதற்கு நன்றி சொல்வதற்காக இன்றும் பூமியில் பிறந்த விநாயகன், சிலா ரூபமாக துண்டீர மகாராஜன் என்ற நாமத்தோடு, காஞ்சி காமேஸ்வரியை சேவித்தபடியே இருக்கிறார். (காஞ்சிபுரம் செல்பவர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய விஷயம் )விநாயகன், துண்டீரன் என்ற பெயரோடு ஆட்சி செய்ததால் காஞ்சிக்கு துண்டீர நாடு என்று பெயர் வந்தது. அது நாளடைவில் மருவி தொண்டைநாடு என்று ஆனது.

“அண்டரும் புகழ் துண்டீரன் ஆண்டு,  துண்டீர நாடாய், அத்
தண்டகன், பின்னராண்டு தண்டக நாடாய்...”

என்று விநாயக புராணம் அழகாக இதை எடுத்துக் கூறும்.அது மட்டுமில்லை, ஊமையாக இருந்து பின் அம்பிகையின் அருளால் அமுதமாக கவி பாடிய மூகர் “துண்டீராக்யே மஹதி விஷயே ஸ்வர்ண வ்ருஷ்டி பிரதாத்ரி” என்று அழகாக இந்த சரிதத்தை சொல்கிறார். (மூக பஞ்சதியின் ஸ்துதி சதகத்தில் “கண்டீக்ருத்ய” எனத் தொடங்கும் ஸ்லோகம்.)

இந்த விருத்தாந்தம் நடந்து பல ஆண்டுகளுக்கு பின்னர் காஞ்சிக்கு விஜயம் செய்தார் ராம பக்தர் தியாகராஜர்! அவரது காதுகளில் இந்த சரிதம் விழுந்தது. சரிதம் செவி வழியாக உள்ளத்தில் புகுந்த அடுத்த கணம், கண்கள் தாரை தாரையாக நீர் சொரிந்தது. ஓடினார் காமேஸ்வரியின் சந்நதிக்கு!  அங்கு அழகே வடிவாய், அன்பே உருவாய், கருணையின் நிறைவாய் அன்னை காமாட்சி அருள் காட்சி தந்துகொண்டிருந்தாள்.

இசையில் சிகரம் தொட்ட தியாகராஜரின் மனதில் இப்போது கோபம் குடி கொண்டது. காரணம் இல்லாமலா? கணேசனை பெற்ற வயிற்றால்தானே நம் அனைவரையும் அவள் பெற்றாள். நம் அனைவருக்கும் ஒரே தாய் அவள்தான் என்னும்போது, குழந்தைகளான நம்மிடத்தில் அவள் பார பட்சம் பார்க்கக்கூடாது இல்லையா! ஒரு புதல்வனுக்காக தங்கமழை பொழிவது மற்றொரு புதல்வனை தவிக்கவிடுவது எந்த விதத்தில் நியாயம்! அம்பிகையை தன் தாயாக நினைத்ததால், எந்த ஒரு குழந்தைக்கும் தாயிடம் வரும் ஒரு பொய்க் கோபம் தியாகராஜருக்கும் வந்தது. உடன் தனது கோபத்தை பாட்டாகவே பாடிவிட்டார்! “ ஆனைமுகனை காப்பது போல என்னை காக்க வேண்டும் அம்மா,பாரில் உன்னை அல்லால் எனக்கு வேறு தெய்வம் கதி ஏது?”(“விநாயகுனி” என்ற தியாகராஜர் கீர்த்தனையின் தமிழாக்கம் - மேலே நாம் சுருங்க அனுபவித்த மூக கவியின் விருத்தாந்தத்தை இந்த கீர்த்தனையில் தியாகராஜர் குறிப்பிடுகிறார்.)

இதை படித்த பின் இதே கேள்வியை நாமும் அந்த காமாட்சியை கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது இல்லையா! ? “கிரி ராஜ சுதா தனையா” என்ற மற்றொரு விநாயகர் கீர்த்தனையிலும், “அம்பிகையின் குமாரனே”  என்று அம்பிகையை முன்னிறுத்தித்தான், அவர் கணேசனை அழைக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.முத்துசுவாமி தீக்ஷிதர்தற்போதைய வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரத்தில் வாழ்ந்தவர்கள் இவரது மூதாதையர்கள். முத்துசுவாமி தீக்ஷிதரின் தகப்பனார், ராமஸ்வாமி தீக்ஷிதர்.

பெரிய சங்கீத வித்வான். ஹம்சத்வனி என்ற ராகத்தை முதலில் கண்டுபிடித்தவர் இந்த மகான்தான். பிறகு சில காரணங்களுக்காக திருவாரூருக்கு புலம்பெயர்ந்தார் இந்த மகான். அங்கே அந்த ஆரூரான் தியாகராஜர் கூட ராமசுவாமி தீக்ஷிதரின் இசைக்கு அடிமை ஆகிவிட்டான் என்றால் அது மிகை அல்ல. ஆம் அவனது உற்சவத்தின் போது நாதஸ்வர வித்வான்கள் செய்ய வேண்டிய ஆலாபனைகளை எல்லாம் இவர் தான் எழுதித் தர வேண்டும் என்று கட்டளையேயிட்டு விட்டானாம் திருவாரூர் தியாகராஜனாக விளங்கும் ஈசன்.

இவரது அரும் தவப் புதல்வனாக பிறந்தவர் தான் முத்துசுவாமி தீக்ஷிதர்! பின்னாளில் திருத்தணி முருகன் அருளால் கவி பாட ஆரம்பித்தவர். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர். அவர் திருச்செங்காட்டாங்குடியில் கோயில்கொண்ட வாதாபி கணபதியை போற்றி “வாதாபி கணபதிம் பஜே ” என்ற பாடலை இயற்றினார். (அந்தப் பாடலின் முதல் இரண்டு சொற்களை படித்தவுடன் கர்நாடக இசைப் பிரியர்களின் இதழ்கள் அந்தப் பாடலை முணுமுணுக்காமல் மேலே கட்டுரையை படிக்காது என்பது உறுதி!) இதில் என்ன ஆச்சரியம் என்றால் அந்த கீர்த்தனை அமைந்த ராகம் ஹம்சத்வனி எனும் ராகம்.

இந்த ராகத்தை உலகிற்கு தந்தவர் ராம சுவாமி தீக்ஷிதர். அதாவது முத்து சுவாமி தீக்ஷிதரின் தந்தை. ஆனால் அந்த மகான், இந்த ராகத்தில் விநாயகரைப் பற்றி ஒரு பாடல்கூட இயற்றாதது விந்தைதான்!  ஆனால் அந்தக் குறையை வாதாபி கணபதிம் என்ற கீர்த்தனையை ஹம்சத்வனியில் அமைத்து முத்துசுவாமி தீக்ஷிதர் தீர்த்து விட்டார். முத்துசுவாமி தீக்ஷிதர் மட்டும் அந்தக் காலத்தில் இந்தக் கீர்த்தனைக்கு உரிமம் வாங்கியிருந்தால் இந்நாளுக்கு அது பல கோடிகளுக்கு போகும் என்பது கர்நாடக இசை உலகில் பரவலாக இருந்து வரும் ஒரு கருத்து.ஹம்சத்வனி ராகத்தால் விநாயகனை பூஜிக்கும் மரபை முதலில் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்தவர் முத்துசுவாமி தீக்ஷிதர். இதன் பிறகு பல கீர்த்தனைகள் ஹம்சத்வனியில் அமைக்கப் பட்டு விநாயகனுக்கு சமர்ப்பிக்கப் பட்டது.

ஹம்சத்வனி ராகத்துக்கும் விநாயகருக்கும் இருக்கும்  தொடர்புக்கான காரணம் இன்று வரையில் பலருக்கு விளங்காத புதிர் தான்! “துக்கம் சர்வம் ஹந்தீத ஹம்ச:” என்று வடமொழியில் சொல்லுவார்கள். அதாவது ஹம்சம் என்ற சொல்லுக்கு அனைத்து துன்பத்தையும் நாசப் படுத்துபவன் என்று பொருள். இது விக்னங்களை களையும் வித்தகனான விநாயகனை (யும்)  குறிக்கும் என்று சொல்லவும் வேண்டுமா? “த்வனி” என்ற சொல் ஓசை அல்லது இசை  என்ற பொருளை உடையது.

இப்போது பொருளை சேர்த்து படித்துப் பாருங்கள். “துன்பங்களை போக்குபவனின் இசை” என்றல்லவா வருகிறது. ஆக பெயரிலேயே விநாயகனுக்கு உரிய ராகம் என்று இருக்க வேறு சாட்சிகள் வேண்டுமா? ( இது எனது சிற்றறிவுக்கு எட்டிய ஒரு விளக்கம்)இப்படி விநாயகனுக்கு உரிய ராகத்தை நமக்குக் கண்டு பிடித்துத் தந்த, முத்து சுவாமி தீக்ஷிதருக்கும், அவர் தந்தைக்கும் நாம் காலமெல்லாம் கடமைப்பட்டிருக்கிறோம் அல்லவா?

சியாமா சாஸ்திரிகள்

ஆச்சரியம் போல சாஸ்திரிகளின் விநாயக கீர்த்தனை எதுவும் கிடைக்கவில்லை. பொறுங்கள்! மனம் நோக வேண்டாம். நம்மை காமாட்சி கைவிடவில்லை. பெரிய காமாட்சி பக்தரான ஷ்யாமா சாஸ்திரி, அம்பிகையை பல இடங்களில் “குஞ்சர கமனே” என்று அழைக்கிறார். (எடுத்துக் காட்டாக “காமாட்சி லோக சாட்சிணி” என்ற கீர்த்தனையை எடுத்துக் கொள்ளலாம்.) யானையை வட மொழியில் குஞ்சரம் என்று சொல்லுவார்கள். “கமனே” என்றால் நடையை உடையவள் என்று பொருள்.

அதாவது அம்பிகையின் நடை அழகை வர்ணிக்க வந்த சாஸ்திரிகள் யானையை நினைவு கொள்கிறார். யானை முகனின் அன்னையிடம் அவனது ஜாடை இல்லாமல் போகுமா? “குமார கண நாதாம்பா” என்று அம்பிகை குஞ்சரனுக்கும் குமரனுக்கும் தாயாக விளங்குவதை, லலிதா ஸஹஸ்ரநாமமும் சொல்லும். மாபெரும் சக்தி உபாசகரான சியாமா சாஸ்திரிகள், லலிதா ஸஹஸ்ர நாமத்தின் வழி நின்று அம்பிகையை சேவித்தார் என்று சொல்லலாம். அதாவது  அவர் விநாயகனையும் அம்பிகையின் உள்ளே தரிசித்தார் என்று கொள்ளலாம்.

Tags : idol ,
× RELATED தமிழகத்தில் இரண்டு நாளில் சிலை கடத்திய 11 பேர் கைது