×

கேப்டன் அமெரிக்கா பிரேக் நியூ வேர்ல்ட் – திரை விமர்சனம்

மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில்  ஜூலியஸ் ஓனாஸ் இயக்கத்தில்   ஆந்தனி மெக்கி, ஹாரிசன் போர்ட், டேனி ராமிரெஸ், ஷிரா ஹாஸ், சோஷா ரோக்குமோர், கார்ல் லம்ப்லி, லிவ் டைலர், டிம் பிளேக் நெல்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் கேப்டன் அமெரிக்கா : பிரேவ் நியூ வேர்ல்ட்.

எண்ட் கேம் படத்துடன்  ஸ்டீவ் ரோஜர்ஸ் கதாபாத்திரம் முடிவுக்கு வந்துவிட்டது. அதன் பிறகு ‘ஃபால்கன்’ என்ற சூப்பர் ஹீரோவாக இருந்த சாம் வில்சனை புதிய கேப்டன் அமெரிக்காவாக வெப் தொடர் மூலம் அறிமுகப்படுத்தியது மார்வெல். இந்தக் கதையில் ஃபால்கனுக்கு அமெரிக்கா அதிபருடன் இணைந்து பணியாற்றும் வேலை. ஹாரிஸன் போர்ட் அமெரிக்கா பிரசிடண்ட் ஆக பதவி ஏற்கிறார். இந்த அமெரிக்கா பிரசிடண்டுக்கு ஒரு தரப்பு ஆதரவும் மறு பக்கம் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இச்சூழ்நிலையில் தற்பொழுது கேப்டன் அமெரிக்காவான சாமிற்கு வெள்ளை மாளிகையில் இருந்து அழைப்பு வருகிறது. இதனை தொடர்ந்து சாம் அவரது நண்பரான பிராட்லியை அழைத்துக் கொண்டு ஒயிட் ஹவுஸிற்கு செல்கிறார்.

அங்கே வெள்ளை மாளிகையில் பல நாட்டு அதிபர்கள், தலைவர்கள் இருக்கின்றனர். அங்கே இந்திய பெருங்கடலில் திடீரென ஒரு மர்ம அடையாளம் உருவாகி அதன் மூலம் அடமாண்டியா கனிமத்தை வெளியிட காத்திருக்கிறது. இதனை ஜப்பான் உட்பட பல நாடுகள் ஆக்கிரமிக்க முயல, இதற்கான சந்திப்பு நடக்கிறது. இதற்கிடையில் கேப்டனின் நண்பர் பிராட்லி அதிபரை கொலை செய்ய முயற்சிக்கிறார். அங்கு இருந்த பாதுகப்பு வீரர்கள் அவரை கைது செய்கின்றனர். ஏன் அவர் அப்படி செய்தார். பின்னணி காரணம் என்ன என்பது மீதிக் கதை.

எண்ட் கேம்’ படம் வரை எந்தவித சறுக்கலும் இன்றி தொடர்ந்து மேலே மேலே சென்று கொண்டிருந்த மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸ், அயர்ன் மேன், ஸ்டீவ் ரோஜர்ஸ் போன்ற பெரும் தலைகள் இல்லாததால் கடும் தடுமாற்றத்துக்கு உள்ளானது. இதில் இடையிடையே ‘லோகி’, ‘வாண்டாவிஷன்’ போன்ற வெப் தொடர்களும், ‘கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி 3’, ‘டெட்பூல் & வோல்வரின்’ போன்ற படங்களும் அவ்வப்போது கம்பேக் கொடுத்து வந்தன. இப்படியான சூழலில் வெளியாகியிருக்கும் இந்தப் படம், மீண்டும் மார்வெலுக்கு ஒரு சரிவு என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. முதல் விஷயம், ‘ஃபால்கன் அண்ட் தி வின்டர் சோல்ஜர்’ வெப் தொடரில் புதிய கேப்டன் அமெரிக்காவுக்கான பில்டப் மிக சரியான விகிதத்தில் கொடுக்கப்பட்டு அந்த கதாபாத்திர வடிவமைப்பு ரசிகர்களின் மனதில் நன்கு பதிந்திருந்தது. ஆனால், இப்படத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே சாம் வில்சனுக்கான ‘ஹீரோயிக்’ தருணங்கள் கைகொடுத்துள்ளதே தவிர ஒட்டுமொத்தமாக ஒரு அவெஞ்சருக்கான ஆளுமை எங்குமே வெளிப்பட்டதாக தெரியவில்லை.

குறிப்பாக மார்வெல் ரசிகர்களின் கீதமான மார்வெல் ஸ்டுடியோஸ் லோகோ மற்றும் இசை இல்லாமல் கருப்பு வெள்ளையாக கடந்து செல்லும் ஓபனிங் மிகப்பெரும் ஏமாற்றமாக படத்தின் துவக்கத்திலேயே ரசிகர்களை கடும் அதிருப்திக்கு ஆளாக்கியிருக்கிறது. என்னதான் அரசியல் படமானாலும் இயக்குனர் ஜூலியஸ் ஒனாஸ் இது மார்வல் ரசிகர்களுக்கான படம் என்பதை கவனத்தில் கொண்டு அதற்குரிய முக்கியத்துவத்தை இணைத்திருக்கலாம். லாரா கார்ப்மானின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். கிராமர் மொர்கெந்தா ஒளிப்பதிவு மிரள வைத்துள்ளது என்றே சொல்லலாம். படத்தின் சண்டை காட்சியில் மிரட்டியுள்ளார்.

இதுவரை வந்த மார்வெல் கதைகளில் அரசியலும் மற்றும் திரில்லரும் இணைந்து வேறு ஒரு களத்தில் பயணத்திருக்கிறது இந்த கேப்டன் அமெரிக்கா பிரேவ் நியூ வேர்ல்ட். படம் முழுக்கவே வசனங்கள் மற்றும் அரசியல் காரசார விவாதங்கள் என கதை நகர்கிறது. படத்தின் மிகப்பெரிய விளம்பரமாக பயன்படுத்தப்பட்ட சிவப்பு ஹல்க் காட்சிகளும் சொற்ப நேரத்தில் கடந்து சென்று விடுகின்றன. எனினும் அவெஞ்சர்ஸ் டும்ஸ்டே படத்திற்கான முன்னணி மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் கதை என்பதால் இப்படத்தை தவிர்க்க முடியாது.

மொத்தத்தில் கேப்டன் அமெரிக்கா பிரேவ் நியூ வேர்ல்ட் மார்வெல் ரசிகர்களுக்கே இந்த படம் ஏமாற்றம் என்கிற பட்சத்தில் பொதுவான ரசிகர்கள் இதையும் ஒரு படமாக கடந்து சென்று விடுவார்கள்.

Tags : Julius Onas ,Marvel Studios ,Anthony Mackie ,Harrison Ford ,Danny Ramirez ,Shira Haas ,Zosha Rockmore ,Carl Lumbly ,Liv Tyler ,Tim Blake Nelson ,
× RELATED ரெட்ட தல விமர்சனம்…