×

‘தீரன் அதிகாரம் ஒன்று’ சினிமா பாணியில் மூதாட்டியை கொன்று கொள்ளை மாணவர் உள்பட 3 பேர் கைது

சூலூர்: கோவை சூலூர் அருகே மூதாட்டி கொலையில் சினிமா பாணியில் கொள்ளையடித்த கல்லூரி மாணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பள்ளபாளையம் காந்திநகரில் தனியே வசித்த சரோஜினி (82) என்ற மூதாட்டி கடந்த 5ம் தேதி  கை, கால்கள் கட்டப்பட்டு, வாயில் டேப் ஒட்டிய நிலையில் பிணமாக கிடந்தார். இது 38 மணி நேரத்துக்கு பின்னர்தான் வெளியே தெரியவந்தது. கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் 3 வாலிபர்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஓடுவது பதிவாகி இருந்தது. இதையடுத்து 200க்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது ரயில் மூலம் கோவை வந்த வாலிபர்கள் மூதாட்டியை கொன்று, கொள்ளையடித்துவிட்டு 2 கிலோ மீட்டர் தூரம் ஓட்டமும், நடையுமாக சென்று, மினி பஸ்சில் ஏறியுள்ளனர். அதிலிருந்த சிசிடிவி கேமராவில் 3 பேரின் முகம் தெளிவாக பதிவாகி இருந்தது. இவர்களின் செல்போன் எண்ணை கண்டறிந்து தேடியபோது 2 பேர் பெங்களூருவிலும், ஒருவர் கன்னியாகுமரியிலும் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சூலூர் போலீசார் பெங்களூரு சென்றனர். அங்கு பதுங்கியிருந்த கன்னியாகுமரி மாவட்டம் இரணியலைச் சேர்ந்த அபினேஷ் பாலகிருஷ்ணன் (24), வசந்த் மணிகண்டன் (19) ஆகியோரை பிடித்து விசாரித்தபோது, மூதாட்டியை கொன்று நகை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர். இதில் அதே ஊரை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. கன்னியாகுமரியில் பதுங்கியிருந்த அவரை போலீசார் பிடித்தனர். 3 பேரும் கைது செய்யப்பட்டனர். கைதான அபினேஷ் பாலகிருஷ்ணன் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கோவைக்கு வந்து, மூதாட்டி சரோஜினியின் வீட்டருகே தங்கி ராவத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்துள்ளார். சரோஜினி நகை, பணத்துடன்  தனியாக இருப்பதை அறிந்த அவர் கொள்ளையடிக்க திட்டமிட்டார். இதையடுத்து ஊருக்கு சென்ற அவர் நண்பர்  மணிகண்டன் மற்றும் கல்லூரி மாணவரை உடன் சேர்த்துக்கொண்டார். அதன்படி 3 பேரும் பெங்களூருவில் இருந்து ரயிலில் வந்து மூதாட்டியை கொன்று நகையை கொள்ளையடித்துள்ளனர். போலீசாரிடம் அவர்கள் கூறும்போது, ‘‘இதேபோன்று கன்னியாகுமரியை சேர்ந்த 5க்கும் மேற்பட்ட முதியவர்களை வாயில் டேப் போட்டு ஒட்டி கொள்ளையடித்துள்ளோம். பெங்களூருவிலும் 2 பேரிடம் கைவரிசை காட்டியுள்ளோம். அவர்களில் எத்தனை பேர் இறந்தார்கள். என்று எங்களுக்கு தெரியாது’’ என்று கூறியுள்ளனர். கார்த்தி நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ சினிமாவில் வெளிமாநிலத்தில் இருந்து பயணம் செய்து வந்து வீட்டில் தனியாக இருப்பவர்களை குறி வைத்து கொள்ளையடிப்பார்கள். அதுபோன்றுதான் கைதான இந்த 3 பேரும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், பெங்களூரு சென்று அங்கிருந்து கோவைக்கு வந்து கைவரிசை காட்டியிருக்கிறார்கள்.  இது குறித்து விசாரணை நடக்கிறது. …

The post ‘தீரன் அதிகாரம் ஒன்று’ சினிமா பாணியில் மூதாட்டியை கொன்று கொள்ளை மாணவர் உள்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Soulur ,Gov ,
× RELATED ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்