×

புதுக்கோட்டையில் இந்த ஆண்டு 50 இடங்களுடன் பல் மருத்துவ கல்லூரி தொடங்க நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: இந்த ஆண்டு புதுக்கோட்டை மருத்துவ கல்லூரியில் 50 இடங்களுடன் பல் மருத்துவ கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருத்துவமனை தினத்தை தொடங்கி வைத்தார். அதில் பல் மருத்துவக் கண்காட்சி, ரத்ததான முகாம் மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத்துறை  செயலாளர் செந்தில்குமார், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, ராஜிவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின்  முதல்வர் தேரணிராஜன் மற்றும் அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் விமலா ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: ஆசியாவிலேயே மிக அதிக அளவிலாக வருடத்திற்கு சுமார் 3.20 லட்சம் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பல் மருத்துவமனையாக இது விளங்குகிறது. 2020ம் ஆண்டு “தி-வீக்” எனும் நாளிதழால் இந்தியாவிலேயே ஆறாவது சிறந்த பல் மருத்துவமனையாக இந்த அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில், 120 மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் நேற்று ரத்த தானம் செய்தனர். இந்த பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் மொத்தம் 200 பல் மருத்துவப் படிப்பு இடங்களுடன் 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளும், 1760 பல் மருத்துவப் படிப்பு இடங்களுடன் 18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. ஆக மொத்தம் 1960 பல் மருத்துவ இடங்களுடன் 20 பல் மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாடு முழுவதும் செயல்படுகிறது. இந்த ஆண்டு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் 50 இடங்களுடன் பல் மருத்துவக் கல்லூரி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ராஜன், தென்னிந்தியாவில் பிரபலமான பல் அறுவை சிகிச்சை நிபுணரான கண்ணப்பன், பல் சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்த முதல் மருத்துவரான தனசேகரன், வாய்வழி நோயியல் நிபுணரான விஸ்வநாத், புகழ்பெற்ற பல் சீரமைப்பு நிபுணரான ரங்காச்சாரி, கர்நாடகா மாநிலத்தில் உள்ள பாலாஜி பல் மருத்துவமனையின் முதல்வர் சதாசிவரெட்டி, பல் சீரமைப்பு பற்றி புத்தகம் எழுதிய முதல் இந்திய மருத்துவரான பிரேம்குமார் ஆகியோர் சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் பயின்ற புகழ்பெற்ற மருத்துவர்கள் ஆவார்கள். இவ்வாறு பேசினார்….

The post புதுக்கோட்டையில் இந்த ஆண்டு 50 இடங்களுடன் பல் மருத்துவ கல்லூரி தொடங்க நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Minister ,M. Subramanian ,Chennai ,Pudukottai Medical College ,M.Subramanian ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்தில்...