×

சமூக நீதியை காக்கவே இலவசம் தரப்படுகிறது: உச்ச நீதிமன்றத்தில் திமுக இடையீட்டு மனு

புதுடெல்லி: ‘அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு, சமூக நீதியை காக்கும் விதமாகதான் இலவசங்கள் வழங்கப்படுகிறது,’ என உச்ச நீதிமன்றத்தில் திமுக தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல்களில் அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகளை வெளியிடுவதற்கு தடை விதிக்கும்படி கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா பொதுநலன் வழக்கை தொடர்ந்துள்ளார், இதை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ‘இது முக்கியமான பிரச்னை என்பதால் அனைத்து தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும்.இந்த விவகாரத்தை வரைமுறைப்படுத்த வேண்டும்,’ என கடந்த 11ம் தேதி தெரிவித்து, வழக்கை நேற்றைக்கு ஒத்தி வைத்தார். இந்நிலையில், இந்த வழக்கில் திமுக சார்பாக ஆர்.எஸ்.பாரதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், வழக்கறிஞர் நெடுமாறன் ஆகியோர் நேற்று இடையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளனர். அதில், ‘அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் அடிப்படையில்தான் தேர்தல் இலவசங்கள் அறிவிக்கப்படுகின்றன. சமூக நீதி பற்றி அரசியலமைப்பு சட்டத்திலேயே கூறப்பட்டுள்ளது. இலவச மின்சாரத்தால் ஏழை மாணவர்களின் கல்வி மேம்படுத்தப்படுகிறது. இலவசங்களை வழங்குவது அரசின் கொள்கை சார்ந்தது. அதில், நீதிமன்றம் தலையிட முடியாது. பெரிய தொழிலதிபர்களின் வங்கிக் கடன்கள் மொத்தமாக ரத்து செய்யப்படுகின்றன. அதையும் ஒருவகையில் இலவசமாக தானே கருத முடியும். வசதியாக இருப்பவர்களுக்கு சலுகை அறிவித்து, அவர்களை மேலும் வசதி படைத்தவர்களாக உயர்த்துவதில் என்ன சமூக நீதி இருக்கிறது?  ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு விதமான பொருளாதார நிலை இருக்கும். அதை கருத்தில் கொண்டுதான் மக்களுக்கு உதவும் வகையில், இலவசங்கள் அறிவிக்கப்படுகின்றன. இந்த வழக்கில் எங்களையும் ஒரு மனுதாரராக இணைத்து, எங்கள் தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும்,’ என கூறியுள்ளனர்….

The post சமூக நீதியை காக்கவே இலவசம் தரப்படுகிறது: உச்ச நீதிமன்றத்தில் திமுக இடையீட்டு மனு appeared first on Dinakaran.

Tags : Dizagam ,Supreme Court ,New Delhi ,Dinakaran ,
× RELATED நீட் வினாத்தாள் கசிவு: தேர்வை மீண்டும் நடத்தக்கோரி மனு