×

அருளாளர் குறிப்பும் ஆனைமுகன் சிறப்பும்

இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்-51

கணபதி குணநிதி
 கலைநிறை கணபதி சரணம்! சரணம்!
 கஜமுக குணநிதி சரணம்! சரணம்!
- என விநாயகரைப் போற்றி மகிழ்கிறார் ராமலிங்க அடிகள்!

சகல கலைகளும் ஒருவரிடம் சங்கமமாகி இருந்தாலும் குணம் இல்லையேல் அவரால் சமுதாயத்திற்கு என்ன பயன்?
கணபதி குணநிதியாக விளங்குகிறார். மகாதேவனும், மகாசக்தியும் பெற்றெடுத்த மகாகணபதி எவ்வளவு எளிமையாக இறங்கி வருகிறார், பாருங்கள்!
தங்கத்திலேயா தன் வடிவம் வேண்டும் என்கிறார்?
களிமண் போதும் என்கிறார்!
வெண்கொற்றக் குடையா வேண்டும்
என்கிறார்?
காகிதக் குடை போதும் என்கிறார்!
ரோஜாப் பூமாலை எல்லாம் வேண்டாம்!
எருக்கம் பூமாலையேபோதும் என ஏற்றுக் கொள்கிறார்!

பூஜை செய்யவாவது மலர் வேண்டுமா - என்றால், புல்லே போதும் என அறுகம் புல்லில் அர்ச்சனை ஏற்கிறார்.கல்விக்கு அதிபதி கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவர் - என ஆனைமுகனை அருணகிரிநாதர் புகழ்கிறார்.நம்பியாண்டர் நம்பிக்கு திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையார் எல்லா கலைகளையும் அருளியதை நாம் அறிவோம்!

அழகான தன் தந்தம் பாதி ஒடிந்தாலும் பரவாயில்லை மகா பாரத கிரந்தம் கற்றிடும் அடியவர்க்குக் கட்டாயம் வேண்டும் என எண்ணி அழகைப் பின் தள்ளி அறிவுக்கு முக்கியத்துவம் தந்து பிள்ளையார் சுழி போட்டு பிள்ளையாரே எழுதியது தானே வியாச மகாபாரதம்! கற்பவர்கள் பலர் கையில் தற்போது கம்ப்யூட்டர்தானே இருக்கிறது. கணினியில் கூட கணபதி தான் ஆட்சி செய்கிறார்! அவர் கூட வேண்டாம்! அவர் வாகனமே போதும்! என்பதை அறிவிப்பது தானே அதை இயங்கவைக்கும் ‘‘மௌஸ்’’ (எலி).
உணவே உயர்வு!

முப்பழம் நுகரும் மூஷிகவாகன! என ஔவையின் விநாயகர் அகவல் பிள்ளையாரைப் போற்றுகிறது.சாப்பிடுவதில் பெரிய சமர்த்தராக விளங்குவது என்ன ஒரு பெருமையா எனக்கேட்கலாம். அருணகிரியார் கூட ‘‘கைத்தல நிறைகனி, அப்பமொடு அவல்பொரி கப்பிய கரிமுகன்’’ என்றே போற்றுகிறார். ஏனெனில் பிள்ளையார் நிவேதனங்கள் அனைத்துமே சத்வகுண ஆகாரங்கள்.

உணவே நல்லுணர்வைத் தருகிறது என்கிறது பகவத்கீதை. தமோகுணம் ரஜோ குணம் தருகின்ற உணவு வகைகளைத் தவிர்த்து சத்வகுண உணவாலேயே பிள்ளையார் பெருமை பெறுகிறார். மிகப் பெரிய விலங்காகவும், அமைதியாகவும், சொன்னதைக் கேட்பதாகவும் ‘‘யானை’’ விளங்குவது தாவர உணவு உட்கொள்வதால் தான்!

மனம் - வாக்கு - காயம்

வாக்குண்டாம்! நல்ல மனமுண்டாம்! மேனி நுடங்காது! என்னும் பாடலில் மனம், வாக்கு, காயம் மூன்றையும் புனிதப்படுத்துகிறது பிள்ளையார் வழிபாடு என ஔவை புகல்கிறாள்! எல்லா தெய்வ சந்நிதானங்கட்கு முன்பும் நாம் கும்பிடு மட்டுமே போடுகிறோம். முதல் தெய்வமான கணேசருக்குத் தான் இரண்டு கூடுதல் வழிபாடு.

குட்டிக் கொள்வது, தோப்புக்கரணம் போடுவது கண்புருவ முடிவும், நெற்றியும் சேரும் இடத்தில் ‘‘டெம்பரல் லோப்ஸ்’’ சுரப்பிகள் உள்ளது. இடம் உள்ள சுரப்பி தெளிவான பேச்சுக்கும், வலச்சுரப்பி குழப்பமற்ற மனதிற்கும் காரணமாக அமைகின்றன. காதுகளை பிடித்தபடி உட்கார்ந்து எழுந்திருப்பது வாழ்நாளை நீட்டிக்கிறது. அவரை தரிசிப்பதே மனதைப் பரவசப்படுத்துகிறது. மனம், வாக்கு, காயம் மூன்றையும் மேன்மையுறச் செய்யும் முதல்வனுக்கு கும்பிடு, குட்டு, தோப்புக்கரணம் என மூன்றையும் சமர்ப்பித்து முதல் நிலை பெறுவோம்.

எளிமையானவர் எலி வாகனர்

‘‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’’ என்று பெருமையுடன் பேசுகின்றன, புராணங்கள். முருகனின் திருவுருவம், அம்பிகையின் திருவுருவம், ராமர், கிருஷ்ணர் முதலிய திருவடிவங்களில் கைகள், முகம், மார்பு, கால்கள் என அனைத்து அங்கங்களும் சாஸ்திர முறைப்படி அமைய வேண்டும். பூஜை செய்யும் விக்கிரகங்கள் சற்று உடைந்தோ, பங்கப்பட்டோ போயிருந்தால் செய்யும் பூஜை பலன் அளிக்காது.

ஆனால், ‘‘விநாயகர்’’ என மனதார எண்ணி களிமண்ணில், மஞ்சள் தூளில், சந்தனத்தில் விரல்களால் அழுத்தி வைத்தால் போதும் விநாயகர் வந்து விடுவார். சாணத்தில் கூட சாந்நித்யம் அருளும் சாமான்யராக விளங்குகிறார் முதல் மூர்த்தி, ‘‘வா’’ என்றால் வருவதற்கும், ‘‘போ’’ என்றால் போவதற்கும் நான் என்ன உங்கள் வேலைக்காரனா?- என பலர் கோபிக்கிறார்கள். ஆனால், பிள்ளையாரை பிடித்து வைத்து ‘‘ஆவாஹயாமி’’ என்றால் வந்து விடுகிறார், ‘‘யதாஸ்தானம் பிரதிஷ்டாபயாமி’’ என்றால் போய் விடுகிறார்.

அனைத்தும் ஒன்றானவர்

தேசியகவி பாரதியார் பாடிய தெய்வீகப் பதிகம் ‘‘விநாயகர் நான்மணிமாலை!’’ புதுவை மணக்குள விநாயகரைப் போற்றும் அப்பதிகத்தில் ‘‘மண்மீதுள்ள மக்கள், விலங்குகள், பூச்சிகள் யாவும் இடும்பை தீர்ந்து இன்பமாய் வாழ’’ என்று பாடுகிறார். அனைத்துவகை ஜீவராசிகளும் நலமுற விநாயகரே அருள் புரிவார். எப்படி என்கிறீர்களா? அவர் வடிவத்தை ஊன்றி கவனித்தால் வண்மை புரியும்.

விநாயகர் தலை யானைத் தலை, அது மிருகக்கூறு. ஏகதந்தம் உடையபக்கம் ஆண், தந்தம் இல்லாதபக்கம் பெண் (பெண் யானைக்கு தந்தம் கிடையாது), ஐந்து கரங்கள் தெய்வ லட்சணம், குறுகிய கால்களும், பெருத்த வயிறும் பூத அம்சம். எனவே எல்லாமாகிக் கலந்து நிறைந்தவர் பிள்ளையார். பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர் திணைபாய், அஃறிணையாய் தோற்றம் அருள்பவர் விநாயகர்.

 நூதன நிவேதனம்

ஆதி சங்கரர் அருளியது ‘‘ஸ்ரீகணேச பஞ்சரத்னம்! ‘‘முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்’’ என ஆரம்பம் செய்கிறார் ஆதிசங்கரர். மோதகம் படைத்தால் முக்தி அருள்வார் விநாயகர். ‘‘போதகம்’’ என்றால் தமிழில் யானை என்று பொருள். போதகம் முன்பு மோதகம் என்னும் கொழுக்கட்டையை நிவேதித்தால் பாதகம் அனைத்தும் நீங்கி சாதகம் ஆகும் என்கிறது சாஸ்திரம்.

கொழுகட்டையிலேயே அந்தக் குறிப்பு இருக்கிறது. அரிசி மாவில் சொப்பு போல செய்கிறோமே அது உடம்பைக் குறிக்கிறது. உள்ளே வெல்லத்தில் பூரணம் வைத்திருக்கிறோமே அது ஆத்மாவைக் குறிக்கிறது. இப்படிச் செய்த மோதகத்தைப் படைத்து அவரைச் சரண் அடைவது பரிபூரணமாக நம்மை அவரிடம் ஒப்படைக்கிறோம் என்பதைக் காட்டுகிறது. பரிபூர்ண சரணாகதியே மோட்சம் அடையும் வழி.

வெற்றி விநாயகர்

‘‘வேழ முகத்து விநாயகரைத் தொழ வாழ்வு மிகுத்து வரும்’’ என்பது புலவர்களின் பொன்னுரை. அவரைத் தொழாமல் தேவர்கள் செய்த தேரினில் சிவபெருமான் ஏற அதன் அச்சே முறிந்தது என நாம் அறிவோம். ‘‘முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறை ரதம் அச்சது பொடி செய்த அதிதீரா’’ என்றுதானே முதல் திருப்புகழே முழங்குகிறது. எனவே விநாயகரைத் துதித்துச் செய்யும் பணிகள் விக்னங்கள் இல்லாமல் நிறைவேறும். வாழ்வு சிறக்கும். ஔவைப்பாட்டி விநாயகரை பூஜை செய்ய தொடங்கும் நேரத்தில் சுந்தரர், சேரமான் பெருமான் நாயனார் இருவரும் வந்தனர்.

‘‘மூதாட்டியே நாங்கள் கயிலாயம் செல்கிறோம். தாங்களும் வாருங்கள்’’ என அழைத்தனர். ஔவையோ எனக்கு கணபதி பூஜையே முதல். தாங்கள் செல்லுங்கள் என்றாள். ‘‘அவ்வைக்கு அதிர்ஷ்டமில்லை என்றபடி இருவரும் திரும்பினர். ஆனால் ஒருமைப்பட்ட மனதுடன் விநாயகருக்கு பூஜை செய்து முடித்ததால் கணபதியே பிரசன்னமாகி கணநேரத்தில் கயிலாயத்தில் ஔவையைச் சேர்த்தார். வாழ்விக்கும் முகமே வேழமுகம் என தெளிவோம்.

(தொடரும்)

திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்

Tags : Anaimugan ,
× RELATED பாதுகையின் பெருமை