- திருப்பூகா
- பஞ்சபுதத் தலங்
- காஞ்சிபுரம்
- காமதாசி அம்மன் கோயில்
- கமதாசி அண்ணா
- பிருத்வி தலமகா
- கஞ்சி காமட்சி கோயில்
- கமத்சி
பகுதி 14
காஞ்சிபுரம்
(காமாட்சி அம்மன் கோயில்)
பிருத்வி தலமாகிய காஞ்சிபுரத்தில் முடிசூடா அரசியாக விளங்குபவள் காமாட்சி அன்னை. நாடெங்கும் காமாட்சி கோயில்கள் இருப்பினும், காமாட்சி என்ற பெயரைக் கேட்டதுமே காஞ்சி காமாட்சி கோயிலே நம் மனக்கண் முன் முதலில் தோன்றுகிறது. பராசக்தி தன் வலக்கண்ணால் பிரம்மாவையும், இடக்கண்ணால் திருமாலையும் கடாட்சித்தருளி, பிரம்மாவிற்கு சரஸ்வதியையும், திருமாலுக்கு லட்சுமியையும் தன் கண்களிலிருந்து தோற்றுவித்ததால் காமாட்சி எனப்பட்டாள்.காமம் = விருப்பு; பக்தர்களது விருப்பங்களை நிறைவேற்றி வைக்கும் கண்களை உடையவள் என்றும் பொருள்படுகிறது.
கோபுர வாயிலின் இடப்புறம் ஹயக்ரீவரும், வலப்புறம் அவரது சிஷ்யரான அகத்தியரும் வீற்றிருப்பதைக் காணலாம். ராஜகோபுரத்தின் உட்புறம் பத்தடி உயரத்தில் பைரவரையும், மஹிஷாசுரமர்த்தினியையும் தரிசிக்கலாம். உள்ளே செல்லுமுன் கொடிமரம், பலிபீடம், சிம்மம் மற்றும் சிந்தூர விநாயகரைத் தரிசிக்கலாம். கருவறையை நோக்கிச் செல்லும் போது, தேவி வெள்ளிக்கிழமைகளில் எழுந்தருளும் ‘சுக்ரவார’ மண்டபத்தைக் காணலாம். உள்ளே வரும் அனைவரும் ஜயஸ்தம்பத்தை வணங்குகின்றனர்.
பந்தகாசுரனை உள்ளே தள்ளி வதைத்த அம்பிகை, அங்கு அவனைப் புதைத்து வெற்றி மண்டபம் [ஜயஸ்தம்பம்] கட்டி வைத்தாள். அப்படியே மற்றொரு பிலம் வழியாக (குகை) இன்று கருவறை உள்ள இடத்தினில் நுழைந்துவிட்டாள். ஒரு பெண் கையில் அசுரன் தலை இருப்பது கண்டு பயந்த தேவர்களின் பயத்தை நீக்கும் பொருட்டு, பிலாகாசத்தை விட்டு நீங்கி, ராஜராஜேஸ்வரியாக இன்று கருவறையில் அமர்ந்திருக்கிறாள். ஐப்பசி பூர நாளில் பிலத்திற்குப் பாலாபிஷேகம் நடத்தப்படுகிறது.
ஜயஸ்தம்பத்தை வணங்கி, எதிரே உள்ள வாயில் வழியே கருவறையை நோக்கிச் செல்லும் பொழுது, வரசித்தி விநாயகர், பிரசன்ன கணபதி, விக்ன நிவாரண கணபதி ஆகிய ரூபங்களைத் தரிசிக்கலாம். தேவி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருக்கும் போது, அருணகிரியார் அம்பிகையைப் போற்றும் கச்சித் திருப்புகழ் செவிகளில் ஒலிக்கிறது.
“குலசயிலத்துப் பிறந்த பெண்கொடி
உலகடையப் பெற்ற உந்தி அந்தணி
குறைவற முப்பத்திரண்டறம் புரிகின்ற பேதை
குணதரி சக்ர ப்ரசண்ட சங்கரி
கணபண ரத்நப் புயங்க கங்கணி
குவடு குனித்துப் புரம் சுடும் சின வஞ்சி நீலி”
சிறந்த இமயமலையில் அவதரித்த பெண்கொடி; அகில உலகையும் ஈன்ற திருவயிறுடைய தண்மை நிறைந்தவள்; எந்தத் தட்டுப்பாடும் இல்லாமல் முப்பத்திரண்டு அறங்களையும் செய்யும் பெண்மணி; மங்கல குணங்கள் உடையவள்; ஸ்ரீசக்ரத்தில் வீரத்துடன் காட்சி அளிக்கும் சங்கரி; படக் கூட்டங்கள் உடைய, நாகரத்தினம் கொண்ட பாம்பைக் கை வளையாக அணிந்தவள்; மேரு மலையை வளைத்து திரிபுரத்தை எரித்தவள் [“கருதலர் திரிபுரம் மாண்டு நீறெழ மலைசிலை ஒரு கையில் வாங்கு நாரணி” என்பார் ஆனைக்காப் பாடலில்] எதிரிகளிடம் கடும் கோபம் காட்டும் வஞ்சிக்கொடி போன்றவள்; நீல நிறத்தி.
“கலப விசித்ர சிகண்டி சுந்தரி
கடிய விடத்தைப் பொதிந்த கந்தரி
கருணை விழி கற்பகம் திகம்பரி எங்கள் ஆயி
கருதிய பக்தர்க்கு இரங்கும் அம்பிகை
சுருதி துதிக்கப்படும் த்ரியம்பகிகவுரி”
அழகிய தோகை உடைய மயில் போல் மயிலையிலும் மயிலாடுதுறையிலும் வடிவம் கொண்டவள்; அழகி; கொடிய விஷத்தை அடக்கி வைத்திருக்கும் கழுத்தை உடையவள்; கருணை பொங்கும் கண்கள் உடைய கற்பகவல்லி; திக்குகளை ஆடையாகக் கொண்டவள்; எங்கள் அன்னை; தன்னைத் தியானிக்கும் அடியார்களிடத்தில் இரக்கம் காட்டுபவள்; வேதங்கள் போற்றும் முக்கண்ணி; பொன்னிறமுடையவள்.
காயத்ரி மண்டபத்தின் வெளிச்சுற்றில் வந்து வலப்புறம் திரும்பினால் கருவறைக்கு நேரே வந்து நிற்கலாம். ஆனால் அப்படிப் போகாமல், நேர் எதிரே உள்ள ஒன்பது படிகள் ஏறி உற்சவ மண்டபத்திற்குச் செல்லலாம். துர்வாசர் திருவுருவத்தைக் காணலாம். அத்ரி முனிவர் – அனசூயைக்கு ருத்ராம்சமாகப் பிறந்தவர். ஆத்மார்த்தமாகவும் பகிரங்கமாகவும் தேவியை உபாசிக்கும் மார்க்கங்களை முறைப்படுத்தி, “ஸௌபாக்ய சிந்தாமணி” எனும் ஆகம ரீதியில் அன்னை காமாட்சியை உபாசிக்கும் விதத்தினை வகுத்தளித்தவர் துர்வாசர்.துர்வாசரை வணங்கி பிரதட்சிணமாக வரும் பொழுது, பள்ளியறையைத் தரிசிக்கிறோம். இஷ்ட சித்தி விநாயகரை வணங்கி உற்சவ காமாட்சியைக் கண்டு காஞ்சித் திருப்புகழின் ஒரு பகுதியைச் சமர்ப்பிக்கிறோம்.
“அனனியம் பெற்று அற்றற்றொரு பற்றும்
தெளிதரும் சித்தர்க்குத் தெளிசில் கொந்(து)
அமலை தென் கச்சிப் பிச்சிமலர்க் கொந்தள பாரை
அறவி நுண் பச்சைப் பொற்கொடி கற்கண்டு
அமுதினும் தித்திக்கப்படு சொற்கொம்பு
அகில அண்டத்து உற்பத்தி செய் முத்தின்பொல மேரு”
ஜீவாத்மா – பரமாத்மா என்ற வேறுபாடுகளைக் களைந்து, பசு-பாச பந்தம் நீங்கி, தெளிந்த உள்ளம் பெற்று விளங்கும் ஞானிகளுக்கு நிர்மல அறிவு உருவாகக் காட்சி கொடுப்பவள். அழகிய காஞ்சி நகரில் பிச்சிமலர் மாலை அணிந்துள்ள கூந்தல் பாரம் உடையவள்; தர்மமே வடிவானவள்; நுட்பமான பச்சை நிறம் வாய்ந்த அழகிய கொடிபோன்றவள்; கற்கண்டு, அமுது இவற்றையும்விடத் தித்திக்கும் மொழி பேசும் கொம்பு போன்ற பெண் (“தேனென்று பாகென்று உவமிக்க ஒணா மொழி தெய்வ வள்ளி” – கந்தர் அலங்காரம்); எல்லா புவனங்களையும் படைக்கும் முத்து மலை போன்றவள்.
“தனி வடம் பொற்புப் பெற்ற முலைக்குன்று
இணை சுமந்து எய்க்கப்பட்ட நுசுப்பின்
தருணி சங்குற்றுத் தத்து திரைக் கம்பையினூடே
தவமுயன்று அப் பொற்றப்படி கைக்கொண்டு
அறம் இரண்டு எட்டு எட்டெட்டும்
வளர்க்கும் தலைவி”
ஒப்பற்ற ரத்னமாலை அணிந்த அழகிய கொங்கை மலையைத் தாங்குவதால், இளைத்துப் போன இடையை உடைய இளம் பெண்; சங்குகள் நிரம்பி, மோதுகின்ற அலைகளை உடைய கம்பா நதிக்கரையில் சிவனாரைக் குறித்து தவம் செய்துகொண்டு, அவர் அளித்த அழகிய படியைக் கையில் ஏந்தி, முப்பத்திரண்டு அறங்களையும் செய்கின்ற தேவி.
லட்சுமி – சரஸ்வதி சூழக் காட்சி அளிக்கும் உற்சவ காமாட்சியைத் தரிசித்த பின் அந்த உயரமான மண்டபத்திலிருந்தே கருவறையிலுள்ள அன்னையையும் வணங்க முடிகிறது. முகப்பில் உள்ள விநாயகரையும் பாலசுப்பிரமணியரையும் உடன் வணங்குகிறோம்.உற்சவ காமாட்சிக்கு நேர் எதிரே மண்டபத்தின் மற்றொரு பக்கத்தில் இரு கரங்களையும் கூப்பிய வண்ணம் நிற்கும் துண்டீர மஹாராஜாவைக் காண்கிறோம். இவர் பற்றிய புராணத்தையும் நாம் அறிந்திருக்க வேண்டும்.
ஆகாயபூபதி எனும் இந்துமத அரசன், தர்மத்திற்காக வைத்திருந்த பொருட்களையெல்லாம் அபகரித்துக் கொண்டு, புத்தமதத்தைத் தழுவிவிட்டான். ஆனால் முன் செய்த தவத்தால், மனம் திருந்தி, அம் மதத்தை விட்டு நீங்கி, அம்பிகையின் பெரும் பக்தனானான். புத்திரப் பேறின்றி வருந்தித் தவம் செய்த அவனுக்கு, அன்னை கணேசனையே புத்திரனாகும்படி அனுப்பி வைத்தாள். அவனுக்குத் துண்டீரப் பிரபு (துண்டிரம் – தொண்டை மண்டலம்) என்று பெயர் சூட்டி, ராஜ்ய பட்டாபிஷேகம் செய்து, காஞ்சி மண்டலத்தை அவர் வசமாக்கினான் அரசன். நீண்ட நாட்கள் அரசாட்சி செய்த துண்டீரர், ஒரு காலகட்டத்தில் அதைத் துறந்துவிட்டு, தாயார் இருக்குமிடம் வந்து எந்நேரமும் அவளைத் தியானித்திருக்கும் உறுதி பூண்டார்.
துண்டீர அரசராக இருந்த விநாயகர், கலியுகத்தில் விக்ரஹ ரூபமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டு இவ்வாலயத்தில் தேவியைத் தியானித்துக்கொண்டிருக்கிறார். அவர் எதிரில் கைகூப்பிய வண்ணம் பயபக்தியுடன் மௌனமாய்ச் செல்ல வேண்டும்.துண்டீரப் பிரபுவை வணங்கி சில படிகள் இறங்கி வருகிறோம்; சற்று நடந்ததும் இடப்புறம் மூன்று படிகள் இருப்பது கண்டு ஏறிச் செல்கிறோம். எட்டு புஜங்களுடன் ராஜ சியாமளா என்ற பெயருடன் வீணை ஏந்திக் காட்சி தருகிறாள் சரஸ்வதி. இச்சந்நதிக்கருகில் ஒருகாலத்தில் இங்கு வீற்றிருந்த ஸ்வர்ண காமாட்சியின் பாதுகைகளைக் காணலாம். இந்த அன்னையைப் பற்றிப் புராண வரலாற்றுக் குறிப்பையும் நாம் நிச்சயமாக அறிந்திருக்க வேண்டும்.
பிரம்மா ஒரு சமயம் அன்னையை வணங்கி, காஞ்சியில் ஏகாம்பரேஸ்வரருக்குத் திருக்கல்யாண வைபவத்தை நடத்திவைக்க வேண்டும் என்று தன் விருப்பத்தைத் தெரிவித்தார். அன்னையின் நெற்றிக்கண்ணிலிருந்து சித்ஜோதி ஸ்வரூபமாய் வெளிவந்த சக்தியை, அன்னை கூறியபடி ஸ்வர்ணத்தில் செய்து, ஏகாம்பரேஸ்வரருடன் கல்யாண உற்சவம் நடத்தி வைத்தார். மறுதினம் காமாட்சி ஆலயத்தை வலம் வந்து ஐயனை அவருடைய ஆலயத்திலேயே எழுந்தருளச் செய்துவிட்டு, ஸ்வர்ண காமாட்சியை காமாட்சி ஆலயத்திற்குள் எழுந்தருளச் செய்து சாந்தி அபிஷேகங்கள் செய்தார். ஆலயத்தில் அன்னை வழிபாட்டினைச் சரிவர நடத்திவரும்படி ஆகாயபூபதிக்குக் கட்டளையிட்டார் பிரம்மா.
மொகலாயர்கள் படையெடுப்பின்போது, ஸ்வர்ண காமாட்சியைப் பாதுகாக்க வேண்டி, 62 ஆவது காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் [1746-1783] அவர்கள், விக்ரஹத்தை எடுத்துக்கொண்டு, உடையார்பாளையம், செஞ்சி, திருவாரூர் ஆகிய இடங்களுக்குக் கொண்டு சென்று ஒளித்து வைத்துவிட்டு, இறுதியாக தஞ்சாவூர் வந்தடைந்தார்.
அப்போதிருந்த ப்ரதாப் சிங் மஹாராஜா, ஸ்வாமிகளும் மடமும் ராஜதானியான தஞ்சாவூரிலேயே இருந்துவிட்டால் நன்றாக இருக்கும் என்றெண்ணி, ஸ்வாமிகளிடம் விண்ணப்பித்தார். ஆனால் ஸ்வாமிகள் மடத்தைக் காவிரி தீரத்திலிருக்கும் கும்பகோணத்தில் அமைக்க விரும்பினார். அதன்படி, மஹாராஷ்டிர பிராம்மணரான டபீர் பந்தை அனுப்பி, மடம் அமைக்க வேண்டிய ஏற்பாடுகள் செய்துகொடுத்தார். இனி தொடர்ந்து வரும் வரலாற்றுக் குறிப்பை மஹாபெரியவாளின் திருவாக்காலேயே கேட்போம்.
[தெய்வத்தின் குரல் – பகுதி 5]
“ஆசை ஆசையாகக் கூப்பிட்டு வைத்து உபசாரம் பண்ணிய ராஜாவுக்கும், தஞ்சாவூர் ஜனங்களுக்கும் சந்தோஷமாக இருக்கட்டும் என்று சுவாமிகள் (62 ஆவது பீடாதிபதி) ஸ்வர்ண காமாட்சி தஞ்சாவூரிலேயே நித்ய பிரதிஷ்டையாக இருக்கட்டும் என்று ராஜாவிடம் சொன்னார். ஸ்ரீமடம் மட்டுமே கும்பகோணத்திற்கு இடம் மாறிற்று. ராஜா சந்தோஷமாக மேல வீதியில் கோயில் கட்டி அம்பாளுக்கு அதை நித்யவாஸமாக்கினார்.”
“பங்காரு காமாட்சி என்று இப்போது தஞ்சாவூரில் விளங்கி வருபவள் இப்படியாகக் காஞ்சிபுரத்திலிருந்து உடையார்பாளையம் வழியாக அங்கே வந்து சேர்ந்த ஸ்வர்ண காமாட்சிதான். ‘பங்காரு’ என்றால் தெலுங்கில் ஸ்வர்ணம் என்று அர்த்தம். சியாமா சாஸ்திரிகள் ஒரே தெலுங்குப் பாட்டுகளாகப் பாடியிருப்பது இவள் மேல் தான். காஞ்சி விஹாரிணி என்றும் ஏகாம்ரேஸ்வர பாலா என்றும் குறிப்பிட்டுள்ளார். அவள் பேரிலும் பங்காரு என்ற தெலுங்கு வார்த்தை சேர்ந்துவிட்டது” என்கிறார் பெரியவர். [சியாமா சாஸ்திரிகள் காமாட்சியின் அர்ச்சக குடும்பத்தைச் சேர்ந்தவரே].
வெளியில் கொடிமரத்தருகில் நிற்கும்போது நேரே ஒரு புறம் தேவியருடன் கூடிய முருகப்பெருமானையும், பாபநிவாரண கணபதியையும் (7) உள்ளே பங்காரு காமாட்சியையும் சேர்த்துப் பார்க்கும்படியாக அமைக்கப்பட்டிருந்த வாசல் இப்போது மூடப்பட்டு விளங்குகிறது.பாதுகைகளையும், சரஸ்வதியையும் வணங்கி, படி இறங்கிவந்து, இடப்புறம் திரும்பி நடக்கும்போது, காமகோட்டத்தின் காவல் தெய்வமான ஹரிஹர புத்திர – ஸ்ரீசாஸ்தா, பூர்ணா – புஷ்கலையுடன் காட்சி அளிப்பதைக் காணலாம். கரிகால் சோழன் இமயம் வரை சென்று புலிக்கொடி பொறித்தான் என்பதை நாம் அறிவோம்.
அவன் காமாட்சி அன்னையிடம் தனது திக்விஜயத்துக்கு அருள் கோரி வந்தான். “இவ்வாலயத்தில் சாஸ்தாவிடமிருந்து அவனது கைச்செண்டைப் பெற்றுச் செல்; நீ சென்ற இடமெல்லாம் வெற்றி கிட்டும்” என்றாள் தேவி. சாஸ்தாவின் முன் நின்று சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தான். சிலையின் கையிலிருந்து புஷ்பச் செண்டு விழுந்தது. கரிகாலன் பின் இமயம் வரை சென்று வெற்றிக்கொடி நாட்டி வந்தான். சிலப்பதிகாரத்தில் இது பற்றிய குறிப்பு உள்ளது.
“கச்சி வளைக் கைச்சி காமகோட்டம் காவல்
மெச்சி இனிதிருக்கும் மெய்ச்சாத்தன் கைச் செண்டு
கம்பன் களிற்றுக் கரிகாற் பெருவளத்தான்
செம்பொற் கிரி திரித்த செண்டு”
தங்க விமானத்தில் காணப்படும் தட்சிணாமூர்த்தி, வரிசையாகக் காட்சி அளிக்கும் நாராயணர், பிரம்மா, வசிஷ்டர், சக்தி, பராசரர், வியாசர், சுகர், கௌடபாதர் ஆகியோரை வணங்குகிறோம். தனிச் சந்நதியில் ஆதி சங்கரர் விளங்குகிறார்.
காமாட்சி கருவறையான காயத்ரி மண்டபத்தில் நுழையுமுன் அன்னபூரணியைத் தரிசிக்கிறோம். இடப்புறம் சிங்கார வேலரையும் வலப்புறம் சக்தி கணபதியையும் தரிசிக்கிறோம். மேலே கஜலட்சுமியின் புடைச்சிற்பத்தைக் காணலாம். அன்னை எழுந்தருளியிருக்கும் மண்டபம் காயத்ரி மந்திரத்தின் எழுத்துக்கள் இருபத்து நான்கினையும் இருபத்து நான்கு தூண்களாகப் பெற்று விளங்குகிறது. உள்ளே நுழைந்ததும் கள்வப் பெருமாள் என்ற பெயரில் விளங்கும் திருமாலைக் காண்கிறோம். இவர் இங்கு வந்தது பற்றியும் ஒரு சுவையான புராணக் குறிப்பு உள்ளது.
பாற்கடலைக் கடைந்தபோது, வாசுகி வாயிலிருந்து வந்த விஷ ஜ்வாலைகளில் கடலின் அடியில் கூர்ம அவதாரம் எடுத்து மந்தர மலையைத் தாங்கிக் கொண்டிருந்த திருமாலின் திருமேனி நீலநிறமுடையதாயிற்று.
பொன்னிறமாயிருந்த லட்சுமி தேவி, அவரது கரிய நிறத்தைக் கண்டு கேலி செய்தாள். தன் அழகினால் லட்சுமிக்கு ஆணவம் ஏற்பட்டுவிட்டது என்றெண்ணி லட்சுமியைக் குரூபியாகப் போகும்படி சபித்தார் திருமால். காஞ்சி வந்தடைந்த கரிய நிறம் கொண்ட லட்சுமியை, அன்னை தனது சந்நதிக்கு இடப்புறம் அமர்த்திக்கொண்டாள். தன்னை அர்ச்சித்த குங்குமத்தை பக்தர்கள் லட்சுமியின் திருவடிகளில் சமர்ப்பித்து விட்டுப் பின் எடுத்துக்கொள்ளும் போது, குங்குமத்தின் மகிமையினால் அவள் தன் நிஜ ரூபத்தைப் பெறுவதோடு, பக்தர்களுக்கு அஷ்ட ஐஸ்வர்யத்தையும் அளிக்கும் வரப்பிரசாதினியாய் விளங்குவாள் என்றும் கூறியருளினாள் அன்னை. குங்குமத்தின் மகிமையினால் லட்சுமி மீண்டும் சொரூப லட்சுமி ஆனாள்.
திருவைப் பிரிந்த தாபத்தில் தவித்த நாராயணர் தன் பத்தினியைத் தேடி காமகோட்டம் வந்து ஒளிந்திருந்து லட்சுமியைப் பார்த்தார். காமாட்சி அருகிலிருக்கும் தைரியத்தில் சௌந்தர்யலட்சுமியும் “கள்வா, வா” என்று அழைத்தாள். அன்று முதல் காயத்ரி மண்டபத்திலுள்ள பெருமாள், “கள்வர் பெருமாள்” என்று அழைக்கப்படுகிறார்.உடல் நிறம் என்பது வெளித்தோற்றம் தான்; உடலின் உள்ளே இருக்கும் உள்ளம் வண்ணமயமாக இருப்பதுதான் முக்கியம் என்பதை உணர்த்த விரும்பியதால் திருமால் இந்தத் திருவிளையாடலை நடத்தினார் என்றும் கூறுவர்.
சித்ரா மூர்த்தி
