×

இந்த வார விசேஷங்கள்

10.1.2026 சனிக்கிழமை தேவதாஷ்டமி

பைரவரை தினசரி வணங்கினாலும், அஷ்டமி திதிகளில் வணங்குவது சிறப்பாகும். அதனால் தான் ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு சிறப்பு அடைமொழி கொடுத்தனர்.

சித்திரை – ஸ்நாதனாஷ்டமி
வைகாசி – சதாசிவாஷ்டமி
ஆனி – பகவதாஷ்டமி
ஆடி – நீலகண்டாஷ்டமி
ஆவணி – ஸ்தாணு அஷ்டமி
புரட்டாசி – சம்புகாஅஷ்டமி
ஐப்பசி – ஈசான சிவாஷ்டமி
கார்த்திகை – கால பைரவாஷ்டமி
மார்கழி – சங்கராஷ்டமி
தை – தேவதாஷ்டமி
மாசி – மகேஸ்வராஷ்டமி
பங்குனி – திரியம்பகாஷ்டமி

இப்படி ஒவ்வொரு அஷ்டமி வழிபாடு களுக்கும் தனிச் சிறப்புக்கள் உள்ளன. இன்று தேவதாஷ்டமி. ஒரு முழு தேங்காயை உடைத்து அதில் குடுமி இருக்கும் பக்கம் பிய்த்தால் அதில் மூன்று கண் போன்ற அமைப்பு இருக்கும். அந்த கண் பக்கம் இருக்கும் மூடியில் ஐந்துவிதமான எண்ணெய். அதாவது, இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் சேர்த்து திரி போட்டு விளக்கேற்ற சனி தோஷங்கள், ஏழரைச்சனி, அஷ்டம சனி தாக்கங்கள் நீங்கும். போட்டி, பொறாமை, வயிற்றெரிச்சல் மூலம் வரக்கூடிய தோஷம் கழியும். காத்து, கருப்பு, கெட்ட சேஷ்டைகள், துர் ஆவிகள் அண்டாது என்பது ஐதீகம். நாளை வெள்ளிக்கிழமை தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு மிகவும் உகந்த நாள். அன்றைய தினம் பைரவரை வணங்குவதால் லட்சுமி கடாட்சம் பெருகும்.

10.1.2026 சனிக்கிழமை வரதராஜப் பெருமாள் அனுஷ்டான குள உற்சவம்

காலை 10 மணியளவில் வரதராஜ பெருமாள் (உற்சவர்) ஸ்ரீராமானுஜருடன் செவிலிமேட்டுக்கு அருகிலுள்ள சாலைக் கிணற்றிற்கு (அனுஷ்டான குளத்திற்கு) எழுந்தருளுகிறார். எதிரிகளின் சூழ்ச்சியில் அகப்பட்டிருந்த ஸ்ரீ ராமானுஜரை ஸ்ரீவரதராஜபெருமாள் பெருந்தேவித்தாயார் இருவரும் வேடுவன் வேடுவப் பெண்மணி திருவுருவங்களில் காப்பாற்றிய சம்பவத்தை இந்த உற்சவம் நினைவுபடுத்தும். 1000 வருடங்கள் கடந்தும் இக்கிணறு இருக்கிறது. இக்கிணற்றருகில் எழுந்தருளியவுடன் ஸ்ரீ பெருமாளுக்கு தளிகை ஸமர்ப்பிக்கப்படுகிறது. ஸ்ரீராமானுஜர் சாலைக்கிணற்றருகில் எழுந்தருள, தாததேசிக திருவம்சத்தினர் ஒருவர் ஸ்ரீராமானுஜரின் பிரதிநிதியாக, அவர் செய்த கைங்கர்யமாகிய திருமஞ்சன திருவாராதன தீர்த்தம் எழுந்தருளப் பண்ணுதலைச் செய்வார். சாலைக் கிணற்றிலிருந்து தீர்த்தத்துடன் கூடிய திருமஞ்ஜன குடத்தை வாத்யங்களுடன், வேத கோஷத்துடன் எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வர, ஸ்ரீ வரதனுக்கு விசேஷ திருமஞ்ஜனம், திருவாராதனம், நடைபெறும். சார்ங்கம், தலைப்பாகை ஆகிய வேடன் அலங்காரத்தோடு ஸ்ரீ வரதன் காட்சி தருவார்.

11.1.2026 ஞாயிற்றுக்கிழமை கூடாரவல்லி

மார்கழி மாதத்தில் கூடாரவல்லி என்பது மிக அற்புதமான நாள். திருப்பாவையின் 27 வது பாசுரம், ‘‘கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா” என்ற பாசுரம். திருப்பாவை நோன்பு கிட்டத்தட்ட நிறைவேறும் நாள் என்று இதைச் சொல்லுவார்கள். இந்தப் பாசுரத்தில், ‘‘மூடநெய் பெய்து முழங்கை வழி வாரக் கூடியிருந்து குளிர்வோம்’’ என்று எல்லோரையும் வைத்துக்கொண்டு, இன்று நாங்கள் சர்க்கரைப் பொங்கல் செய்து சாப்பிடுவோம் என்று சொல்வதிலிருந்து. இது நோன்பு நிறைவேறிய நாளாகக் கருதி கொண்டாடுவார்கள். குறை யொன்றுமில்லாத கோவிந்தனை வழிபடுகின்ற பொழுது ஒவ்வொருவர் மனக்குறையும் தீர்ந்துவிடும் என்பதால், அன்று புத்தாடை அணிந்து, ஆண்டாள் புடவை எடுத்து வைத்து, ஆண்டாள் படத்துக்கு பூமாலை சூட்டி, வாழ்த்தி வணங்குவார்கள்.

13.1.2026 செவ்வாய்க்கிழமை திரைலோக்கிய கௌரி விரதம்

வீட்டில் ஒரு கலசத்தை (செம்பு அல்லது வெள்ளி) அமைத்து, அதில் அம்பிகையை ஆவாகனம் செய்வார்கள். அம்பிகையை கௌரி ரூபத்தில் வணங்கி, மஞ்சள் சரடு, மலர்கள், பழங்கள், நைவேத்தியங்கள் சமர்ப்பித்து பூஜை செய்வார்கள். ‘‘ஓம் கௌர்யை நம:’’ போன்ற மந்திரங்களை உச்சரித்து வழிபடலாம். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல துணை அமையவும், திருமணமானவர்களுக்கு கணவன்-மனைவி இடையே அன்பும், ஒற்றுமையும் பெருகவும் சிறந்த புத்திரப் பேறு கிடைக்கவும் இந்த விரதம் உதவுகிறது. செல்வவளம்: வறுமை நீங்கி, சகல செல்வங்களையும் பெறலாம்.

14.1.2026 புதன்கிழமை போகி பண்டிகை

போகி பண்டிகை என்பதே போகிப்பண்டிகை ஆகியது. போகி என்பது இந்திரன் பெயர். அவருக்கான பண்டிகை என்றும் சொல்லலாம். இது போகி என்பதால் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது போல வீடுகளை தூய்மையாக்கும் பணி நடைபெறும். தேவையற்ற பொருளை நெருப்பில் எரித்து விடுவர். கடந்த கால துன்பகரமான எண்ணங்களை எல்லாம் நெருப்பிலிட்டு பொசுக்கி புத்துணர்ச்சியுடன் தை மாதத்தை ஆரம் பிக்கும் மார்கழியின் கடைசி நாள் போகி.

போகிப்பண்டிகை அன்று அதிகாலை நீராடி பல்வேறு காய்கறிகள் சமைக்கப்பட்ட உணவை பகவானுக்கு நிவேதனம் செய்ய வேண்டும். போகி அன்று, வைகறையில் ‘நிலைப்பொங்கல்’ வைக்கப்படும். வீட்டின் முன் வாயில் நிலைக்குப் மஞ்சள் பூசி, திலக மிட்டு, தோகை விரிந்த கரும் பொன்றைச் சாத்தி நிற்கச் செய்து வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, குங்குமம் வைத்து, தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி வணங்குவர். அன்று போளி, வடை, பாயசம், மொச்சை, சிறுதானியங்கள், பருப்பு வகைகள் போன்றவை இறைவனுக்கு படைக்கப்படும். பிறகு அனைவரும் உண்டுகளிக்க வேண்டும்.

14.1.2026 புதன்கிழமை ஆண்டாள் திருக்கல்யாணம்

ஆண்டாள், ஸ்ரீரங்கநாதப் பெருமாளை மணக்க வேண்டும் என விரும்பி, மார்கழி மாதம் முழுவதும் பாவை நோன்பு நோற்று, இறுதியில் பெருமாளுடன் கலந்தார். மார்கழி மாதத்தின் கடைசி நாள் (போகிப் பண்டிகை) அன்று, ஆண்டாள் மற்றும் பெருமாளுக்குத் திருமணம் நடத்தப்படுகிறது. இதுவே போகி ஆண்டாள் திருக்கல்யாணம் எனப்படுகிறது. ஸ்ரீ ரங்கம் மட்டுமின்றி, ஆண்டாள் வீற்றிருக்கும் அனைத்து பெருமாள் கோயில்களிலும் இந்த விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது திருமணத்திற்காகப் பல ஆண்டுகளாகக் காத்திருப்பவர்கள், மார்கழி மாதத்தில் திருப்பாவை சேவித்து, போகி அன்று நடைபெறும் இந்த திருமணத்தில் கலந்துகொண்டால், திருமணத் தடைகள் நீங்கும். திருக்கல்யாணத்தின் போது வழங்கப்படும் முகூர்த்த தேங்காய் பிரசாதம், வீட்டில் வைத்து பூஜை செய்து வழிபட, விரைவில் திருமணம் நடக்கும் என நம்பப்படுகிறது. திருமணத்தோடு மட்டுமல்லாமல், தொழில் வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற் றத்திற்கும் இந்த விழா உதவிகரமாக இருக்கும்.

15.1.2026 வியாழக்கிழமை மகர சங்கராந்தி பொங்கல் பண்டிகை

உத்தராயண புண்ணிய காலம். தை மாதப்பிறப்பு. பொங்கல் பண்டிகை. சூரிய நாராயணனுக்கு பொங்கலிட்டு வணங்க வேண்டும். பொங்கல் வைக்க உகந்த நேரம் காலை 9 மணியிலிருந்து 10 மணிவரை. உத்தராயண புண்ணிய காலமான தைப் பொங்கல் அன்று பாலில் புத்தரிசி பொங்கல் போட்டு சூரிய பகவானுக்குரிய ஸ்லோகங்களை சொல்லி தூப தீபம் காட்டி வழிபட வேண்டும். இதன் மூலமாக நல்ல உடல் வலிமையும் நீண்ட ஆயுளும் மனஅமைதி கிடைக்கும். பொங்கலன்று அதிகாலை எழுந்து, வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். அறுவடை முடிந்து பெற்ற புத்தரிசி, கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, நம்முடைய கொடிவழிக் காய்கறிகள் (குறிப்பாக அவரை, புடலை, கத்திரி, வாழை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு போன்றவையே படையலாக வைக்கப்படும். செந்நெற் பச்சரிசியைப் பெரும்பாலும் தவிடு போக்காமல் நீர் சேர்த்துச் சமைத்து பருப்புக் குழம்புடன் உண்பதும் மரபு.

மண் பாண்டத்தின் பெருமையைச் சொல்வதற்காகவே அறுவடைத் திருநாளில், புது மண் பானை சுத்தம் செய்து, சந்தனம் குங்குமமிட்டு, பாத்திரத்தின் கழுத்துப் பகுதியில், மஞ்சள் கிழங்கு, இஞ்சி உள்ளிட்டவற்றைக் கொண்டு அலங்கரித்து, பூஜையறையில் வைத்து, விளக்கேற்றி வேண்டிக் கொள்ள வேண்டும். முற்றத்திற் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். பால் பொங்கும் போது மணியோசை எழுப்பி பொங்கலோ பொங்கல் என்று உரக்க எல்லோரும் சேர்ந்து உற்சாகத்தோடு சொல்ல வேண்டும். பெண்கள் குலவை இடு வதும் உண்டு.

16.1.2026 வெள்ளிக்கிழமை மாட்டுப் பொங்கல்

இன்று அவசியம் கோ பூஜை செய்யவும். உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே மாட்டுப் பொங்கல்நாளாகும். மாட்டுப் பொங்கல் அன்று கோ பூஜை செய்ய வேண்டும். மதுரை மாவட்டத்தில் பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு உண்டு. மாட்டுப் பொங்கல் பட்டிப் பொங்கல் அல்லது கன்று பொங்கல் என்றும் சொல்வது உண்டு. மாடுகள் மற்றும் கன்றுகளின் தொழுவம் சுத்தம் செய்ய வேண்டும். குரு ஓரையில் (காலை 8-9) அல்லது மாலை (3-4) மாடுகளுக்கு ஜலத்தில் வில்வ இலை, வெட்டிவேர், சிவப்பு பூசணி பூ, புஷ்பம், சங்கராந்தி பொங்கல் பூஜை செய்த புஷ்பம், இவைகளை தண்ணீரில் போட்டு, அதனுடன் பன்னீர் கலந்து குளிப்பாட்டி விட வேண்டும். மாடுகளை குளிப்பாட்டி அவற்றின் கொம்புகளில் வண்ணம் பூசி அலங்கரித்து, சலங்கை கட்டி விடுவார்கள். மேலும் அவற்றுக்கு புதிய மூக்கணாங் கயிறு, தாம்பு கயிறு உள்ளிட்டவற்றையும் அணிவித்து மாடுகளையும், கருவிகளையும் வழிபடுவார்கள். ‘‘பட்டி பெருக! பால் பானை பொங்க! நோவும் பிணியும் தெருவோடு போக!’’ என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர். மாடுகளை மட்டுமின்றி உழவுக்கு உதவும் கருவிகளையும் சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைத்து மாடுகளோடு சேர்த்து அவற்றையும் வழிபடுவார்கள். மாடுகள் இல்லாதவர்கள் காமதேனு பூஜை செய்யலாம்.

16.1.2026 வெள்ளிக்கிழமை வரதராஜப்பெருமாள் பாரி வேட்டை

சங்கராந்தி அன்று இரவு சுமார் 10 மணிக்கு ஸ்ரீபெருமாள் மாத்திரம் (உபய நாச்சிமார் இன்றி) மேனாவில் சீவரத்துக்கு அத்யா பாக கோஷ்டியும் வேத பாராயண கோஷ்டியும், பழைய சீவரத் துக்கு (செங்கல்பட்டு அருகே) செல்கிறது. தை மாதம் 2ந் தேதி காலை – சீவரம் எல்லையிலுள்ள மண்டபத்தில் ஸ்தோத்ரபாட கோஷ்டி தொடங்க, கிராம வீதிகளில் ஸ்தோத்ர பாட கோஷ்டி பாராயணத்துடன் புறப்பாடாய் அங்குள்ள மலைக்கு பகல் சுமார் 11 மணிக்கு எழுந்தருள்வார். மாலை 5 மணிக்கு மங்களகிரியில் ஸ்ரீ பெருமாள் மலையிலிருந்து இறங்கி கீழே அழகியசிங்கரும் ஸ்ரீபெருமாளுடன் புறப்பாடாய்-ஆற்றுக்கு அக்கரையிலுள்ள திருமுக்கூடல் எழுந்தருளி அவ்வூர் பெருமாளும் கூட சேர்ந்து மீண்டும் இக்கரைக்கே ஸ்ரீநரசிம்மர் சந்நதிக்கு எழுந்தருள்வார்.

16.1.2026 வெள்ளிக்கிழமை மகா பிரதோஷம்

சூரியன் மறையும் நேரத்திற்கு முன்னும் பின்னும் உள்ள ஒன்றரை மணி நேரம் (மாலை 4:30 – 6:00) பிரதோஷ காலம் எனப்படும்; இது சிவவழிபாட்டிற்கு உகந்த நேரம். இதில் பால், தயிர், நெய், தேன், சந்தனம் போன்ற பொருட்களைக் கொண்டு சிவலிங்கத்திற்கும், நந்திக்கும் அபிஷேகம் செய்து வழிபடுவதன் மூலம் பாவங்கள் நீங்கி, ஆரோக்கியம், செல்வம், மன அமைதி போன்ற நற்பலன்கள் கிடைக்கும்.

Tags : Devadashtami ,Ashtami Dithi ,Theipirai Ashtami ,Chitra ,Sanathanashtami ,Vaikasi ,Sadashivashtami ,Ani ,
× RELATED பாதுகையின் பெருமை