×
Saravana Stores

ஆடிப் பூரத்தில் அவதரித்த ஆண்டாள்!

ஆடிப்பூரம் 24-7-2020

“இன்றோ திரு ஆடிப் பூரம் எமக்காக அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் - குன்றாத வாழ்வான வைகுந்த வான்போகம் தன்னை இகழ்ந்துஆழ்வார் திருமகளாராய்.”ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தன்று, பெரியாழ்வார் தாம் அமைத்திருந்த நந்தவனத்திலுள்ள ஒரு துளசிச் செடியின் அடிவாரத்தில், பூமிதேவியின் அம்சமாகத் தோன்றிய ஒரு பெண் குழந்தையைக் கண்டெடுத்தார். அக்குழந்தைக்குக் கோதை என்று பெயரிட்டார். அதையே கோதா என்று வடமொழியில் சொல்கிறோம்.

கோதை என்றால் என்ன பொருள்?

கோதை என்றால் தமிழில் பூ மாலை என்று பொருள். இறைவனுக்குப் பூமாலைகளைச் சுமந்து சுமந்து பழகிய பெரியாழ்வாரின் திருக்கரங்களிலே, அவர் கண்டெடுத்த பெண் குழந்தையும் ஒரு பூமாலை போலவே தோன்றினாளாம். அதனால் கோதை என்று பெயர் சூட்டியதாகச் சொல்வார்கள்.கோதா என்ற வடமொழிப் பெயருக்குப் பலவிதமான விளக்கங்கள் உள்ளன. தா என்றால் தருபவள். கோ என்றால் நல்வார்த்தை என்று பொருள். நல்வார்த்தைகளை உடைய பாசுரங்களை வழங்கியபடியால் கோதா. கோ என்ற சொல்லுக்கு ஞானம் என்ற பொருளும் இருப்பதால், தனது பாசுரங்களாலே உயர்ந்த ஞானத்தை நமக்கு அருள்வதால் கோதா என்றும் சொல்லலாம்.
கோ என்றால் மங்களம் என்றும் பொருளுண்டு.

எனவே மங்களங்களை அருள்பவள் கோதா. அவள் யார் யாருக்கெல்லாம் மங்களங்களை அருளினாள் என்று பார்ப்போம். அமங்களமாய்க் கருதப்பட்ட ஆடி மாதத்தில் அவதரித்து, திருவாடி என்று அதற்குப் பெயருமளித்து, ஆடி மாதத்துக்கு மங்களத்தைத் தந்தாள். முப்பூரம் எனப்படும் பூரம், பூராடம், பூரட்டாதி ஆகிய மூன்று நட்சத்திரங்கள் அமங்களமாகக் கருதப்பட்டு வந்த நிலையில், அவற்றுள் முதன்மையானதான பூர நட்சத்திரத்தில் அவதரித்து பூரம், பூராடம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களுக்கு மங்களத்தைத் தந்தாள். மங்களவாரம் என்று பெயர் பெற்றிருந்தாலும் செவ்வாய்க் கிழமை அமங்களமாகவே கருதப்பட்டது. அந்தச் செவ்வாய்க் கிழமையில் அவதரித்து அதற்கும் மங்களம் தந்தாள். தென்திசை என்பது அமங்களமாகக் கருதப்படும் நிலையில், தென்திசையிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்து அதற்கும் மங்களம் தந்தாள். இதை வேதாந்த தேசிகன் கோதா ஸ்துதியில் மிக அழகாகத் தெரிவிக்கிறார்:

“திக் தக்ஷிணாபி பரிபக்த்ரிம புண்யலப்யாத்
ஸர்வோத்தரா பவதி தேவி தவ அவதாராத் |
யத்ரைவ ரங்கபதினா பஹுமான பூர்வம்
நித்ராளுணாபி நியதம் நிஹிதா: கடாக்ஷா: ||”

அரங்கன் தென்திசை நோக்கிப் பள்ளி கொள்வது இலங்கையிலுள்ள விபீஷணனுக்கு அருள்புரிவதற்காக மட்டுமில்லை, ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரும் அதே தென்திசையில் இருப்பதால், அந்தத் தென்திசைக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஸ்ரீவில்லிபுத்தூரை நோக்கி அரங்கன் சயனித்திருப்பதாக இந்த ஸ்லோகத்தில் தேசிகன் தெரிவிக்கிறார். இவ்வாறு தென்திசை, செவ்வாய்க்கிழமை, பூர நட்சத்திரம், ஆடி மாதம் என அனைத்துக்கும் மங்களத்தை அருளியபடியால் அவள் கோதா.கோ என்றால் பூமி. தா என்று பிளந்தவள். பூமியைப் பிளந்து கொண்டு தோன்றியபடியால் கோதா என்றும் சொல்வதுண்டு.பெரியாழ்வாரின் பெருமையை உலகுக்கு உணர்த்துதல் பன்னிரு ஆழ்வார்களுள் மற்ற பதினொரு ஆழ்வார்களுக்கு இல்லாத சிறப்பு பெரியாழ்வாருக்கு உண்டு. அதுதான் பெரியாழ்வாருடைய பொங்கும் பரிவு. எல்லா ஆழ்வார்களுக்கும் பெருமாளிடத்தில் பரிவு இருந்தாலும், அது பொங்கும் பரிவாக விளங்கியது
பெரியாழ்வாரிடத்தில் தான்.

“மங்களாசாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்கள்
தங்கள் ஆர்வத்தளவு தான் அன்றி - பொங்கும்
பரிவாலே வில்லிபுத்தூர் பட்டர்பிரான் பெற்றான்
பெரியாழ்வார் என்னும் பெயர்.”

என்றார் மணவாள மாமுனிகள். மதுரையில் திருமாலே வந்து பெரியாழ்வாருக்குத் தரிசனம் தந்த போது, பெரியாழ்வார் தனக்கென்று ஒரு பிரார்த்தனையை இறைவனிடம் முன்வைக்காமல், இப்படி வெளியே வந்த இறைவன்மீது யாருடைய கண் எச்சிலாவது பட்டுவிடுமோ என்று அஞ்சி,

“பல்லாண்டு! பல்லாண்டு! பல்லாயிரத்தாண்டு!
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! - உன்
சேவடி செவ்வி திருக்காப்பு!”

என்று இறைவனுக்குப் பல்லாண்டு பாடினார். திருமால்மேல் இத்தகைய பரிவு உடையவராக அவர் திகழ்ந்தமையால் தான், விஷ்ணுசித்தர் என்ற அவருடைய பெயர் மறைந்து, ‘பெரிய ஆழ்வார்’ (பெரியாழ்வார்) என்றே அனைவராலும் அழைக்கப்பட்டார்.இத்தகைய பக்தரான பெரியாழ்வாரின் பெருமையை உலகுக்கு உணர்த்தி, திருமாலை விட உயர்ந்த ஒரு ஸ்தானத்தை அவருக்கு அளிக்க விழைந்த பூமிதேவி, பெரியாழ்வாரைத் தன் தந்தையாகத் தேர்ந்தெடுத்து
அவருக்கு மகளாக வந்து தோன்றினாள்.

“வேயர்புகழ் வில்லிபுத்தூர் ஆடிப் பூரம்
மேன்மேலும் மிக விளங்க விட்டுசித்தன்
தூய திருமகளாய் வந்து அரங்கனாற்குத்
துழாய்மாலை முடிசூடிக் கொடுத்த மாதே!
நேயமுடன் திருப்பாவை பாட்டு ஆறைந்தும்
நீயுரைத்த தையொரு திங்கள் பாமாலை
ஆயபுகழ் நூறுடன் நாற்பத்து மூன்றும்
அன்புடனே அடியேனுக்கு அருள்செய் நீயே!”

வராகப் பெருமாள் கூறிய ரகசியத்தை உலகுக்கு உரைத்தல்பிரளயக் காலம் முடிந்து மீண்டும் உலகைப் படைப்பதற்குரிய சிருஷ்டி காலம் வந்தது. அப்போது பிரம்மா உலகைப் படைக்க முற்பட்ட போது, எங்கும் கடல் மட்டுமே இருந்தது, நிலப்பரப்பைக் காணவில்லை. ஹிரண்யாக்ஷன் என்னும் அசுரன் பூமியைக் கடலுக்கு அடியில் ஒளித்து வைத்திருப்பதை உணர்ந்தார் பிரம்மா. பூமியை மீட்டுத் தரும்படித் திருமாலிடம் வேண்டினார்.அப்போது பன்றி வடிவமேந்தி வராகனாக அவதரித்து வந்த திருமால், ஹிரண்யாக்ஷனை வதம் செய்து, பூமிதேவியை மீட்டெடுத்தார். அப்போது வராகனிடம் பூமிதேவி, “சுவாமி! இந்தப் பிரளயக் கடலிலிருந்து என்னை மீட்டெடுத்து விட்டீர்கள். ஆனால் நம் குழந்தைகளான ஜீவாத்மாக்கள் பிறவிப் பெருங்கடலில் தத்தளிக்கிறார்களே! அவர்களை மீட்க வழி சொல்லுங்கள்!” என்று
பிரார்த்தித்தாள்.

அதற்கு வராகப் பெருமாள், “யார் ஒருவன் தன் இளமைக் காலத்தில், மனம் மொழி மெய் ஆகிய முக்கரணங்களும் நல்ல நிலையில் ஆரோக்கியத்துடன் இருக்கும் வேளையில், எனக்குப் பூமாலையும் பாமாலையும் சமர்ப்பித்து என்னைத் தொழுது என்னைச் சரணடைகிறானோ, அவன் முதுமைக்காலத்தில் என்னை மறந்து விட்டாலும், நான் அவனை நினைவில் கொண்டு அவனைப் பிறவிப் பெருங்கடலிலிருந்து காத்து முக்தியளிப்பேன்!” என்று கூறினார்.இந்த ரகசியத்தை நமக்கு உரைக்கவே, ஆண்டாளாக அவதரித்தாள் பூமிதேவி. பூமாலையும் பாமாலையும் இறைவனை மகிழ்விக்கும் என்பதைத் தானே தன்செய்கையால் நிரூபித்துக் காட்டினாள்.
 
பூமாலை இறைவனை மகிழ்விப்பதை உணர்த்தவே, தன் கூந்தலில் சூடிக் களைந்த மாலையை அவனுக்கு அர்ப்பணித்து, அவனை மகிழ்வித்துச் சூடிக் கொடுத்த சுடர்கொடி என்று பெயர் பெற்றாள்.அவ்வாறே பாமாலையும் இறைவனை மகிழ்விக்கும் என்பதை உணர்த்தவே, திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி ஆகிய பிரபந்தங்களைப் பாமாலையாகப் பாடி இறைவனுக்குச் சமர்ப்பித்துப் பாடவல்ல நாச்சியார் என்று பெயர்பெற்றாள்.முப்பது பாசுரங்கள் கொண்ட திருப்பாவையில், கண்ணனை மணக்க விரும்பி கோபிகைகள் மார்கழி நோன்பு நோற்றதைப் போல், ஸ்ரீவில்லிபுத்தூரையே ஆயர்பாடியாகக் கருதி, தன்னையே ஒரு கோபிகையாகக் கருதி, தன் தோழிகளை எல்லாம் ஆய்ச்சிகளாகக் கருதி, ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயீயையே கண்ணனாகக் கருதி, அவன் கோவிலையே நந்தகோபனின் இல்லமாகக் கருதி, திருமுக்குளத்தையே யமுனையாகக் கருதி மார்கழி நோன்பு நோற்றாள் ஆண்டாள். கண்ணனிடத்தில் தான் கொண்ட காதலை அவனிடம் தெரிவிக்கும் பொருட்டு 143 பாசுரங்கள் அடங்கிய நாச்சியார் திருமொழியைப் பாடினாள். “மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்” என்று சொன்ன ஆண்டாள், இறுதியில் தன் விருப்பப்படி கண்ணனுக்கே மாலையிட்டாள்.

திருப்பாவை ஐந்தாம் பாசுரத்தில்,
“தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்”

என்று வராகப் பெருமாள் கூறிய ரகசியத்தைத் தெள்ளத் தெளிவாக, எளிய இனிய தமிழில் நமக்குத் தெரிவித்தருளினாள். இதுவே ஆண்டாளின் அவதாரத்துக்கு நான்காவது நோக்கமாகும்.
இவ்வாறு ஆண்டாள் அவதரித்த திருவாடிப் பூர நன்னாளிலே
, ஆண்டாளையும் அவளது கேள்வனான ரங்கமன்னாரையும் வணங்கி, எங்கும் திருவருள் பெற்று இன்புறுவோமாக!
திருவாடிப் பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே!
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே!
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!
ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே!
உயர் அரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே!
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே!
வண் புதுவைநகர்க் கோதை மலர்ப்பதங்கள்
வாழியே!
கமலமுடன் வில்லிபுத்தூர் விளங்கவந்தாள் வாழியே!
காரார் நற்றுழாய் கானத்து அவதரித்தாள் வாழியே!
விமலமாம் திருவாடிப் பூரத்தாள் வாழியே!
விட்டுசித்தன் வளர்த்தெடுத்த விளங்களையாள்
வாழியே!
அமலத் திருப்பாவை ஐயாறு அளித்தருள்வாள்
வாழியே!
ஆக நூற்றெண்ணைந்து மூன்றுரைத்தாள் வாழியே!
அமுதனாம் அரங்கனுக்கே மாலையிட்டாள் வாழியே!
ஆண்டாள் தம் அடியிணைகள் அனவரதம் வாழியே!

Tags : Lord ,Adipuram ,
× RELATED முருகப் பெருமான் செவ்வாய் வழிபாடு..!!