×

முத்தான வாழ்வருளும் முன்னுதித்த மங்கை

தமிழக சக்தி பீடங்கள்

பல்லோராலும் வியந்து பாராட்டும் சுசீந்தை மாநகரம் ஒரு காலத்தில் பெரும் காடாகவே இருந்தது. துஷ்ட மிருகங்களின் ஆரவாரமும், வண்டுகளின் ரீங்கார ஒலியும் ஓங்கி வளர்ந்த வன மரங்களாலும், காண்போரை அச்சமுறச் செய்யும் வனப்புடையது. ஆனால், ஒரே சமயத்தில் மலரும் பலவகை பூக்களின் அழகால் இந்த வனம் அழகுடன் காட்சியளிக்கும்.

பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் ஒருங்கே காட்சி கொடுக்கும் தாணுமாலையன் ஆலயம் மிகவும் பிரசித்தமானது. இவர்கள் மூவரையும் இன்றும்  மக்கள் தரிசித்து பெரும் பேறு பெறுகின்றனர். மார்கழி மாத அசுபதி நட்சத்திரத்தன்று கருடரூபமாய் வந்து அருட் பாலிப்பதை ஐந்தாம் திருவிழாவாகக் கொண்டாடி இவ்வூர் மக்கள் மகிழ்கின்றனர்.

நம் அன்னையின் சிறப்பைக் காணும் போது சுசீந்திரத்தில் அழகுடன் அமர்ந்தவள் நாராயணி! சுசீ பீடமென சிறப்புற்று விளங்கும் அத்தலத்தை ஸம்ஹரர் காத்து வருகிறார். ஒழுக்க சீலர்களுக்கு அரும் பெரும் பொருளாக விளங்கி சீரான வாழ்வும், இகபர சுகமும் அளிப்பவள். சீலம் நிறைந்த ராமபிரான் போற்றும் வண்ணம், அரக்கனால் கவர்ந்து செல்லப்பட்ட சீதாதேவியை மீட்டவன் அனுமன். அவன் உயர்ந்த திருவடிவுடன், குளிர்ந்த சந்திர வதனம் மேலும் அழகு பெற சிறு புன்னகை ஒளிவீச புகழ் பெற்ற  இத்தலத்தில் பக்தர்களுக்கு அருள் செய்கிறான்.

அரை நொடியேனும் உன் திருவடியில் மனதை  நிலைப்படுத்தி தியானம் செய்வோர்க்கு இரங்கி திருநீலகண்டருடன் இணைந்திருக்கும் காட்சி அளிப்பவள். பக்தர்களின் துயரைத் தீர்க்கும் கற்பகத் தருவே! திருவருள் பெருக்கும் ஒளி வெள்ளமே! உன்னை வணங்குகின்றேன்! அருள் தருவாயாக.’ இத்துணை மேன்மை பொருந்திய சிவனையும், அன்னையையும் பணிவோர் இகத்தில் இன்பமடைந்து முக்தியடைவரென்பது திண்ணம்!தமிழகத்தின் தென் கோடியில் உள்ளது நாகர் கோவில். இங்கிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது சுசீந்திரம்.

சதி தேவியின் பற்கள் விழுந்த பீடம் ப்ருகுபீடம் எனும் சுசிபீடம் சுசீந்திரம் முன்னுதித்தமங்கை பீடம். இங்கு விதிப்படி பாராயணம் செய்யப்படும் மந்திரஜபங்கள் ஆராதனைகள் சித்தியளிக்கும் என மேருதந்திரம் எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுசீந்திரம் தாணுமாலயன் தெப்பக்
குளத்திற்கு அருகே இந்த மகத்தான சக்திபீடம் அமைந்துள்ளது. இப்பகுதியை பிரக்ஞா தீர்த்தபூமி என்று கந்தபுராணம் புகழ்கிறது. கற்புக்கரசியான அனுசுயா தேவியும் அத்ரிமுனிவரும் வாழ்ந்த அரும்பெரும் புண்ணியபூமி இது.

முன்னுதித்த நங்கையின் திருக்கோயில் சுமார் கால் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கொடிமரம், ராஜகோபுரம், பலிபீடம் இல்லாத தலம் இது. சுமுகி, சுந்தரி எனும் இரு துவாரசக்தியர் கருவறையைக் காக்கின்றனர். தேவியின் எதிரில் வேதாளம் அம்பிகையை நோக்கிய வண்ணம் உள்ளது. கருவறையில் அருளும் அம்பிகை மும்மூர்த்திகளுக்கும் மூத்தவள் என்பது ஐதீகம்.

எட்டுத்திருக்கரங்களுடன் திரிசூலத்தை தாங்கிப்பிடித்து தீயவற்றை அழித்து, காலத்தையே வெல்லும் கால சூலியாக காட்சி அளிக்கிறாள். சாதாரணமாக கருவறை தெய்வங்களை கருங்கல்லிலோ அல்லது பஞ்சலோகத்திலே செய்வது வழக்கம். ஆனால் முன்னுதித்த நங்கையின் திருவுருவமோ கடுசர்க்கரை எனும் தெய்வீக மூலிகைகளால் ஆக்கப்பட்டது. காவிமண், குந்தரிக்கம், குலுகுலுசர்க்கரை, கொம்பரக்கு, செஞ்சயம், பசுநெய், நல்லெண்ணெய், பலவித மூலிகைகளின் சாறு போன்ற எட்டு பொருட்களால் செய்யப்படுவதே கடுசர்க்கரையாகும். இதை சிற்ப சாத்திரம் கடுசர்க்கரையோக மருந்து எனக்கூறுகிறது. எனவே இந்த அம்பிகைக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. தேவியின் முன் உள்ள மாமேரு வடிவில் அருளும் சக்ரத்தில் பத்ரகாளியை ஆவாஹனம் செய்து அபிஷேக தீபாராதனைகள் காட்டப்படுகின்றன.

இத்தேவி மிகவும் சக்தி வாய்ந்தவள். இவளிடம் வேண்டிக்கொண்டால் தீராத பிரச்னையே இல்லைஎன்பது பக்தர்களின் அனுபவநம்பிக்கை. மூக்கில்லாமல் மூளியாக பிறந்த ஒரு பெண் இந்த முன்னுதித்த நங்கையிடம் வேண்டிக்கொண்டு படிப்படியாய் மூக்குவரப்பெற்றாள். அதன் சாட்சியாக ஆலய  மண்டபத்தில் முதல் சிற்பம் மூக்கு இல்லாமலும் படிப்படியாக வளர்ந்த மூக்குடன் அழகான பெண்ணாக நிற்கும் சிற்பங்கள் உள்ளது. அதேபோன்று மழலை வரம் தருவதிலும் மகத்தானவள் இந்த தேவி.  ஆலயத்திற்கு வெளியே ஒரு கல்லை மஞ்சள் குங்குமம் பூசி அம்பிகையாகவே வழிபடுகின்றனர் பக்தர்கள்.

தாணுமாலயர் ஆலயத்தில் சித்திரை, மார்கழி மாதங்களில் நடைபெறும் திருவிழாக்களிலும் முன்னுதித்த மங்கையே முதன்மைப்படுத்தப்படுகிறாள்.  விழா தொடங்கும் போது செய்யப்படும் வழிபாடுகள் ஓம் பலி என்றும் முடியும் போது தொடங்கும் வழிபாடுகள் மெளனபலி என்றும் அழைக்கப்படுகிறது. முதலும் முடிவும் அவளே என்பதை இது உணர்த்துவதாக அமைந்துள்ளது.  ஆடி மாத ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் விதவிதமான அலங்காரங்களில் தேவி ஒளிர்கிறாள். ஆடிப்பூரம் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

தேவிக்கு முன்னுதித்தமங்கை என பெயர் வர பல்வேறு புராணநிகழ்வுகள் கூறப்படுகிறது. மகிஷாசுரனை அழித்த பின் தேவி தேவர்கள் முன் கோடி சூர்யபிரகாசத்தோடு உதித்து காட்சியருளியது ஒரு காரணம். தேவேந்திரன் தன் சாபம் நீங்க முன்னூறு தேவகன்னியரை தெய்வமாக போற்றி வணங்கி வேள்வி செய்த போது வேள்வித்தீயில் முன் உதித்து கிருபை செய்ததால் முன்னூற்று நங்கை என பெயர்பெற்று பின் மறுவி முன்னுதித்த நங்கை என்றானாள் என்கிறது மற்றொரு புராணம்.

அனுசுயா தேவியால் குழந்தைகளாக்கப்பட்ட தம் கணவரை மீட்க முப்பெருந்தேவியரும் அன்னை முன் வேண்டி நிற்க அவர்கள் முன் உதித்து அவர்கள் குறை தீர்த்ததால் இப்பெயர் பெற்றாள் என்கிறது மற்றொருபுராணம்.  நவராத்ரி சமயத்தில் இந்த அம்மனின் விக்ரகம் பத்மநாபபுரம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டு பூஜிக்கப்படுவது விசேஷம்.

ஒவ்வொரு ஆண்டும் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அரண்மனையில் நடக்கும் நவராத்திரி விழாவுக்கு,  முன்னுதித்த நங்கை அம்மன் மற்றும் குமாரகோயில் வேளிமலை குமாரசுவாமி, பத்மநாபபுரம் அரண்மனை வளாகத்தில் உள்ள தேவாரக்கெட்டு சரஸ்வதி அம்மன் ஆகியோர் ஊர்வலமாக திருவனந்தபுரம் கொண்டுசெல்லப்படும். அங்கு 10 நாட்கள் தங்கி இருந்து விஜயதசமி விழா முடிந்த பின்னர் கோயில்களுக்கு திரும்புவது வழக்கம். பல ஆண்டுகளாக இந்த நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

-சுசீந்திரம்

Tags :
× RELATED ராஜயோகம் தரும் ராகு – கேது