×

அமுல், நெஸ்லே நிறுவனங்களைப்போல் ஆவின் பாலை கண்ணாடி பாட்டில், டெட்ரா பேக்கில் விற்பனை செய்ய முடியுமா?; தமிழக அரசு விளக்கம் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஆவின் பாலை கண்ணாடி பாட்டில் அல்லது டெட்ரா பேக்கில் விற்பனை செய்ய முடியுமா என்று தமிழக அரசு விளக்கம் அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்துமாறு பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நெகிழி உற்பத்தியாளர்கள் தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு, நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், பெரும்பாலான உணவுப் பொருட்கள் பிளாஸ்டிக் உறைகளில் தான் அடைக்கப்பட்டு விற்கப்படுகின்றன. உடலுக்கு தீங்கு என்று தெரிந்தும் அதில் வரும் உணவுப்பொருட்களை உண்கிறோம். பிளாஸ்டிக் கவர்களில் பால் விற்கப்படுவதை ஏன் தடை செய்யக்கூடாது? அமுல், நெஸ்லே ஆகியவை நிறுவனங்கள் டெட்ரா பேக்குகளில் பொருட்களை வழங்குவது போல் ஆவின் நிறுவனமும் கண்ணாடி பாட்டில் அல்லது டெட்ரா பேக்கில் ஏன் விற்பனை செய்யக்கூடாது என்று கேள்வி எழுப்பினார். அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உடலுக்கு தீங்கு என்றால் தடை செய்ய தயாராக உள்ளோம். அதுகுறித்து அரசின் விளக்கத்தை பெற்று தெரிவிக்க அவகாசம் வேண்டும். தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை அவ்வப்போது ஆய்வு செய்து தடுக்கப்படுகிறது. கடந்த 20 நாட்களில் சென்னை மாநகராட்சியில் மட்டும் 514 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 28.83 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் கண்காட்சியை அடுத்த மாதம் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதால் அதில் நீதிபதிகளும் கலந்துகொள்ள வேண்டும் என்றார். இதைகேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணைக்கு வரும்போதுதான் அதிரடி சோதனைகள் நடத்தப்படுகிறது. சட்டத்தை  முழுமையாக அமல்படுத்த வேண்டிய பொறுப்பு சமூகத்திற்கு உள்ளது என்று தெரிவித்தனர். இதை தொடர்ந்து, ஆவின் பாலை பாட்டில் அல்லது டெட்ரா பேக்கில் விற்பனை செய்ய முடியுமா என்று அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டும். தண்ணீர் விநியோகிக்கும் வாட்டர் கேன்களின் சுகாதாரம் எவ்வாறு கண்காணிக்கப்படுகிறது என்று உணவு பாதுகாப்பு துறை ஆணையர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 29க்கு தள்ளிவைத்தனர்….

The post அமுல், நெஸ்லே நிறுவனங்களைப்போல் ஆவின் பாலை கண்ணாடி பாட்டில், டெட்ரா பேக்கில் விற்பனை செய்ய முடியுமா?; தமிழக அரசு விளக்கம் தர உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Ave ,Amul ,Nestle ,Tamil Nadu Government ,Chennai ,Ain ,Milk ,Court ,Dinakaran ,
× RELATED காங். சாதனையை பாஜ சாதனையாக்குவதா?