பச்சை வயல்களின் நடுவே அருள் பூக்கும் திருமுகத்தோடு சந்தன மாரியம்மன் வீற்றிருக்கிறாள். காவல் தெய்வமான இவள் நிகழ்த்தும் லீலைகள் அனேகம். பாவாடை என்பவன் ஏழை விவசாயி. செல்வந்தர் ஒருவரிடம் கடன் பெற்றான்.
கடனை மீண்டும் செலுத்தியும் பத்திரத்தை கொடுக்க மறுத்தார், செல்வந்தர். ஆங்கிலேயே நீதிபதி முன்பு வழக்கு வந்தது. பாவாடையோ ‘‘ஐயா... எங்க ஊரு சந்தன மாரியம்மனே சாட்சி’’ என்றான். அன்றிரவே ஆச்சரியமாக நீதிபதியின் கனவில் மாரியம்மன் சிறுமியின் வடிவில் தோன்றினாள்.
சிலரின் பெயர்களை குறிப்பிட்டு இவர்களை அழைத்து விசாரித்து நீதி வழங்கு என்று சொல்லி மறைந்தாள். கனவு கலைந்தது. காலையில் அவள் சொன்ன பெயர்களை வைத்து விசாரிக்க உண்மை வெளிப்பட்டது. பாவாடை நிரபராதி என்று தீர்ப்பு சொன்னார். செல்வந்தருக்கு சம்மன் அனுப்பினார்.
இன்றுவரை இதுபோன்ற விஷயங்கள் நிறைய நடக்கின்றன. சந்தனமாரி தவறு செய்தவர்களை தண்டிக்கிறாள். மக்களை நல்வழியில் நடக்க வைக்கிறாள். திருவாரூர் மாவட்டத்தில் குடவாசலுக்குக் கிழக்கே 5 கி.மீ. தொலைவில் குடமுருட்டி ஆற்றின் வடகரையில் இக்கோயில் அமைந்துள்ளது.
தொட்டியம் மதுரைகாளியம்மன்
சின்னான் என்பான் மதுரை காளிதேவியின் வாசலில் வைக்கப்பட்டிருந்த பறையினை அடிக்கத் தொடங்கினான். காளியின் நினைவில் உருகினான். பறையடியின் வேகம் கூடியது. பறை இசையில் மயங்கிய மதுரை காளி, அவனுடன் தொட்டியத்திற்கு வர சித்தம் கொண்டாள். உடனே ஈ வடிவெடுத்து சின்னானுடன் தொட்டியத்தை வந்தடைந்தாள். சின்னான் மாடுகள் மேய்க்கும் பொழுது அடிக்கும் பறை இசையை தினமும் ஆனந்தித்துக் கேட்டாள்.
ஒருநாள் அப்பகுதியை ஆண்ட குறுநில மன்னரின் சகோதரன் குதிரையில் வேகமாக வந்தபோது குதிரையின் குளம்படி பட்டு புதரிலிருந்த புற்று சிதைந்தது. கோபமுற்ற அன்னை காளி உற்று நோக்கினாள். மன்னனின் சகோதரன் அந்த கணமே மதி இழந்தான். செய்வதறியாது திகைத்த மன்னரின் கனவில் தோன்றிய மதுரை காளி மதுரையில் இருந்து இசைக்கு மயங்கி வந்து தொட்டியத்தில் தான் சங்கமித்துள்ளதை சொன்னாள். அதிர்ந்துபோன அரசன் காளிக்கு திருக்கோயில் எழுப்பி உற்சவம் நடத்தினான்.
சகோதரனின் சித்தமும் தெளிந்தது. பறையடிக்கும் தொழிலை மேற்கொண்டு வந்த சின்னானுக்கும், செல்லானுக்கும் கோயிலினுள் சிலை அமைத்தான். எதிரிகளால் ஏற்படும் துயரம் நீங்க தொட்டியம் மதுரை காளியம்மனை வடைமாலை சாதத்ி வழிபடலாம். திருச்சியிலிருந்து முசிறி வழியாக நாமக்கல் செல்லும் சாலையில் தொட்டியம் அமைந்துள்ளது.
திருநல்லூர் அஷ்டபுஜகாளி
திருநல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் ஆலயத்திலுள்ள பிராகாரத்தில்தான் இந்த காளி வீற்றிருக்கிறாள். இவளை நல்லூர் அஷ்டபுஜமாகாளி என்பார்கள். இக்கோயில் பிரளயத்தில் கூட அழியாது என்று தலபுராணம் சொல்கிறது. எப்போதுமே பிரளயத்தோடு காளிக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அதுபோல இத்தலத்திலும் காளி பேரழகாக வீற்றிருக்கிறாள். காளி என்றாலே கோரமுகமும், ஆவேசமும்தான் நினைவுக்கு வரும்.
ஆனால், இம்மாகாளி புன்னகை பூக்கும் இனிய நாயகி. மூத்த சுமங்கலி போன்ற மஞ்சள் பூசிய சாந்த முகம் கொண்டவள். ஆக்ரோஷமே இல்லாது அமைதியாக அமர்ந்திருக்கிறாள். ஆகவே, மழலைச் செல்வம் இல்லாதவர்கள் காளியை வேண்டிக் கொண்டு, அவளருளால் நிறைசூல் கர்ப்பிணியாக மாகாளி எதிரே அமர்ந்து வளைகாப்பு விழா செய்து கொள்கிறார்கள். அவளின் இருகைகளிலும் வளையல்களைப் பூட்டி அழகுபார்க்கிறார்கள். கும்பகோணம்-தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் சுந்தரபெருமாள்கோயில் எனும் ஊருக்கு அருகே உள்ளது.