நரசிம்ம ஜெயந்தி அன்று பிரம்ம முகூர்த்த வேளையிலேயே கண்விழித்து, சுத்தமாக குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றி நரசிம்மரை மனதார நினைத்து, வழிபட்டால் தீர்க்கமுடியாத கஷ்டங்களும் தீரும் என்று சொல்கிறது சாஸ்திரம். குறிப்பாக இந்த தினத்தில் நரசிம்மரை வழிபடும்போது, மன தைரியம் அதிகரிக்கும். உடலில் இருக்கும் நோய் நொடிகள் நீங்கும். எதிரிகள் தொல்லை முற்றிலுமாக நீங்கும். கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம். இப்படி மனிதர்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களை உடனடியாக போக்கும் சக்தி இந்த நரசிம்ம அவதாரத்தில் உண்டு என்று சொன்னால் அது நிச்சயம் பொய்யாகாது.
நரசிம்ம ஜெயந்தி அன்று நரசிம்மரின் மகா மந்திரத்தை பிரம்ம முகூர்த்த வேளையில் 108முறை உச்சரிக்கும் பட்சத்தில் வாழ்க்கையில் நீங்கா துன்பங்களும் நீங்கும் என்பது தான் நம்பிக்கை. ஆனால் உண்மையான நம்பிக்கையோடு நரசிம்மரை வழிபடுவது மிகவும் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்காக நரசிம்மரின் மகாமந்திரம் இதோ..
உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் தம் பத்ரம்
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்
கோபம், வீரம், தேஜஸ், (பிரகாசம்) கொண்ட மகாவிஷ்ணுவின் அவதாரமான நரசிம்மரே! எல்லா திசைகளையும் பார்த்து கொண்டிருக்கும் உன்னிடமிருந்து தவறு செய்பவர்கள் யாராலும் தப்பிக்க முடியாது.
எதிரிகளுக்கு பயத்தையும், மரணத்திற்கே மரணத்தையும் காட்டி எல்லாமும் நீயாக இருக்கின்றாய். உன்னை மனமார வணங்குகின்றேன். என்றவாறு சொல்லி காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் நரசிம்மரை மனதார நினைத்து வழிபடுங்கள். அதன் பின்பு உங்களால் உணவு உண்ணாமல் நோன்பு இருக்க முடிந்தால் விரதம் இருக்கலாம்.
விரதம் இருப்பது என்பது அவரவர் உடல்நிலையை பொறுத்தது. விரதம் இருந்தாலும், விரதம் இல்லாமல் வழிபாடு செய்தாலும், அன்றைய நாள் முழுவதும் சுத்தமாக இருந்து, நரசிம்ம ஜெயந்தி அன்று மாலை 6.30 மணியிலிருந்து 7.20 மணிக்குள் உங்களால் முடிந்த நைவேத்தியத்தை நரசிம்மருக்கு படைத்து உங்களது அன்றைய தின பூஜையை நிறைவு செய்து கொள்வதே சரியான முறை. இவ்வாறாக நாளை இந்த மந்திரத்தை உச்சரித்து நரசிம்மரின் முழுமையான ஆசீர்வாதத்தை அனைவரும் பெற வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.
