×

கோயில் காணிக்கை நகைகள் தங்கக் கட்டிகளாக மாற்றி முதலீடு: பத்திரத்தை கோயில் நிர்வாகியிடம் ஒப்படைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (11.8.2022) தலைமைச் செயலகத்தில், திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம், அருள்மிகு  பவானியம்மன் திருக்கோயிலுக்கு பக்தர்களால் உண்டியல் மற்றும் காணிக்கையாக செலுத்தப்பட்ட திருக்கோயிலுக்குத் தேவைப்படும் இனங்கள் நீங்கலாக, பலமாற்றுப் பொன் இனங்களை மும்பை ஒன்றிய அரசின் உருக்காலையில் உருக்கி தூய தங்கக்கட்டிகளாக முதலீடு செய்யப்பட்டதற்கான தங்க முதலீட்டு பத்திரத்தினை, அத்திருக்கோயில் நிர்வாகிகளிடம் வழங்கினார். 2021-2022ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பில், “கடந்த 10 ஆண்டுகளாக திருக்கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்று பொன் இனங்களில், திருக்கோயிலுக்குத் தேவைப்படும் இனங்கள் நீங்கலாக, ஏனைய இனங்களை மும்பையிலுள்ள ஒன்றிய அரசுக்குச் சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி, சொக்கத்தங்கமாக மாற்றி திருக்கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கிகளில் முதலீடு செய்து, அதிலிருந்து பெறப்படும் வட்டி மூலமாக திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். இப்பணிகளை கண்காணிப்பதற்கு 3 மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு, ஓய்வுபெற்ற மாண்பமை நீதியரசர்கள் தலைமையிலான குழுக்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும்“ என அறிவிக்கப்பட்டது. இவ்வறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் சென்னை மண்டலத்திற்கு ஓய்வுபெற்ற மாண்பமை உச்சநீதிமன்ற நீதியரசர் திரு.துரைசாமிராஜூ அவர்கள் தலைமையில் குழு அரசால் அமைக்கப்பட்டது. இக்குழுவின் முன்னிலையில், பெரியபாளையம், அருள்மிகு  பவானியம்மன் திருக்கோயிலுக்கு பக்தர்களால் உண்டியல் மற்றும் காணிக்கையாக செலுத்தப்பட்ட பலமாற்று பொன் இனங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, அரக்கு, அழுக்கு, போலிக்கற்கள் மற்றும் இதர உலோகங்கள் நீக்கப்பட்டு 130 கிலோ 512 கிராம் எடையுள்ள பலமாற்றுப் பொன் இனங்கள் பிரித்தெடுக்கப்பட்டன. இப்பொன் இனங்களை இத்திருக்கோயில் பரம்பரை அறங்காவலர் தீர்மானத்தின் அடிப்படையில் மும்பையிலுள்ள ஒன்றிய அரசுக்கு சொந்தமான உருக்காலையில் உருக்கி தூய தங்கக் கட்டிகளாக மாற்றி பாரத ஸ்டேட் வங்கியின் Revamped Gold Deposit Scheme, 2015 திட்டத்தின் கீழ் தங்கப் பத்திரமாக முதலீடு செய்திடும் பொருட்டு, 91 கிலோ 61 கிராம் எடையுள்ள தூய தங்கக்கட்டிகள் திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் பெரியபாளையம் அருள்மிகு  பவானியம்மன் திருக்கோயில் பெயரில் பாரத ஸ்டேட் வங்கி, மும்பை கிளையில் முதலீடு செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.46 கோடியே 31 இலட்சம் ஆகும். மேற்படி தங்க மதிப்பீட்டிற்கு வழங்கப்படுகின்ற வட்டி வீதம் 2.25% ஆகும். இதன்மூலம் ஆண்டொன்றுக்கு கிடைக்கப்பெறும் வட்டித்தொகையான ரூ.1.04 கோடி இத்திருக்கோயில் சார்ந்த திருப்பணிகளுக்கு பயன்படுத்தப்படும். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு.பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., ஓய்வுபெற்ற மாண்பமை உச்சநீதிமன்ற நீதியரசர் திரு.துரைசாமிராஜூ, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு. ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர் (நிர்வாகம்) திரு. ஆர்.கண்ணன், இ.ஆ.ப., வேலூர் மண்டல இணை ஆணையர் திரு.சி.லட்சுமணன், திருக்கோயில் பரம்பரை அறங்காவலர் திரு. அஞ்சன் லோகமித்ரா மற்றும் பாரத ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளர் திருமதி ராஜலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்….

The post கோயில் காணிக்கை நகைகள் தங்கக் கட்டிகளாக மாற்றி முதலீடு: பத்திரத்தை கோயில் நிர்வாகியிடம் ஒப்படைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Chennai ,M.K.Stalin ,Secretariat ,Arulmiku Bhavaniyamman ,Periyapalayam, Tiruvallur district ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்து...