×

கடன் பிரச்னை தீர்க்கும் லட்சுமி நரசிம்ம பெருமாள்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில்.

தல வரலாறு:

பண்டைய காலத்தில் திண்டிவனம் புளிய மரங்கள் நிறைந்த காட்டுப்பகுதியாக இருந்தது. இந்த வனப்பகுதி வடமொழியில் திந்திரிவனம் என அழைக்கப்பட்டது. பின்னர் திந்திரி வனம் என்பது மருவி திண்டிவனம் ஆனது. இத்தலம் காஞ்சி சேஷத்திரத்தை சேர்ந்தது. பிரம்மா காஞ்சிபுரத்தில் யாகம் செய்த போது யாக சாலையின் நான்கு திசைகளுக்கும் நான்கு வாயில்களை நியமித்தார். வடக்கே நாராயணவனம் வடக்கு வாயிலாகவும் தெற்கே திந்திரிவனம் (திண்டிவனம்) தெற்கு எல்லையாகவும், மாகாலிபுரம் கிழக்கு எல்லையாகவும் விரிஞ்சிபுரம் மேற்கு எல்லையாகவும் இருந்தது. நரசிம்மபெருமாள் உக்கிரத்தை குறைக்க தாயார் மூலமாக மார்க்கண்டேய மகரிஷி வேண்டிக்கொள்ள தாயார் பெருமாளை கைகூப்பி பக்தனுக்கு சாந்த மூர்த்தியாக சேவை சாதிக்கும்படி வேண்டி கொண்டார். அதன்படி பெருமாள் சாந்த மூர்த்தியாக பிரகலாதவரதனாக காட்சி தந்தார். எனவே இத்திருத்தலத்தில் பக்தனுக்கு தாயார் கைகூப்பியவாறு ஸ்ரீநரசிங்கபெருமாளோடு சேவை சாதிக்கிறார்.

மேலும் திந்திரிவனத்தில் திண்டி, முண்டி, கிங்கிலி, கிலாலி ஆகிய அரக்கர்கள் கொடுஞ் செயல்புரிந்து வனத்தில் தவம் செய்யும் முனிவர்களுக்கு பெரும் துன்பத்தை தந்து வந்தனர். அதனால் முனிவர்கள் தங்களை காப்பாற்றுமாறு நாராயணனை வேண்டினார்கள். நாராயணனும் அரக்கர்களை சம்ஹரிக்க ( வதம் செய்ய) அனுமாருக்கு தன் சங்கு சக்கரத்தை தந்து போருக்கு அனுப்பி வைத்தார். அனுமார் சங்கு சக்கரத்தோடு சென்று  போரிட்டு அரக்கர்களைஅழித்து முனிவர்களின் தவ வேள்வி நிறைவுபெற பாதுகாப்பு அளித்தார். அதன் காரணமாகவே அனுமார் இந்த கோயிலில் சங்கு சக்கரத்தோடும் நான்கு திருக்கரங்களோடும் அருள் பாலிக்கிறார். இதன் காரணமாக இங்கு உள்ள உற்சவ மூர்த்தி அனுமார் சங்கு சக்கரதாரியாக சேவை சாதிக்கிறார். இத்தலத்தில் மூலவராக ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் அருள்பாலிக்கிறார். தாயார் பெயர் கனகவல்லிதாயார். நட்சத்திரம் சுவாதி. மேலும் தலவிருட்சமாக மருதமரம் உள்ளது. ஆகமவிதிப்படி இது வைகானச ஆலயம் ஆகும்.

பல்லவர் கால கோயில்

இந்தக்கோயில் பல்லவர் காலத்தை சேர்ந்ததாகும். ஐந்துநிலை ராஜகோபுரம் இங்கு அமைந்துள்ளது. கோயிலின் தென் பாகத்தில் தாயார் சன்னதியும், நடுவில் மூலவர் சன்னதியும், வடபாகத்தில் ஆண்டாள் சன்னதியும் அமைந்துள்ளது. கொடிமரத்தை அடுத்து கருடாழ்வார் மண்டபம் உள்ளது. அதை அடுத்து மகாமண்டபமும், அதன் இடதுபுறம் உடையவர் சன்னதியும், சக்கரத்தாழ்வார் சன்னதியும், வலதுபுறத்தில் யாகசாலையும் ஆஞ்சநேயர், கோதண்டராமர், வேணுகோபாலர் சன்னதிகளும் உள்ளது. திருகோவிலின் பின்புறம் புண்ணிய தீர்த்தமாக பெரிய ராஜான்குளம் உள்ளது. மூலவர் நரசி ம்மபெருமாள் இடது தொடைமேல் லட்சுமிதேவி அமர்ந்த கோலத்தில் அருள் பாலிக்கிறார்.

கடன் பிரச்னை தீரும்

லட்சுமி நரசிம்ம பெருமாளை வழிபட்டால் தீராத வினைகளும் தீர்ந்து சகல செல்வங்களும் நம்மைச் சேரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. மேலும் கடன் பிரச்னை தீர்க்கும் ஆலயமாகவும் இத்தலம் திகழ்கிறது. வழக்குகளில் வெற்றி கிடைக்கும். செவ்வாய்தோஷம் நீங்கி திருமண வாழ்வு சிறப்புற அமையும். திருவாதிரை, சுவாதி, சதயம் , ஆகிய நட்சத்திரதாரர்களுக்கும் ராகுதிசை நடப்பவர்களுக்கும் ஏழரை சனி நடப்பவர்களுக்கும் இது பரிகார தலமாகும்.

செல்வது எப்படி?

சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திண்டிவனம் நகரில் நேருவீதியில் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் அமைந்துள்ளது. பேருந்து, ஆட்டோ வசதி உள்ளது.

Tags : Lakshmi Narasimha Perumal ,
× RELATED தீராத கடன் தொல்லை கழுத்தை நெறிக்கிறதா?...