
பான் இந்தியா ஸ்டார் பிரபாஸ் எப்போது திருமணம் செய்துகொள்வார்? யாரை அவர் திருமணம் செய்வார் என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். தன்னுடன் நடித்த அனுஷ்காவை அவர் தீவிரமாக காதலிப்பதாகவும், விரைவில் அவரையே திருமணம் செய்துகொள்வார் என்றும் சொல்லப்பட்டு வந்த நிலையில், ஒரே நேரத்தில் இருவரும் அத்தகவலை மறுத்துவிட்டனர். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு பிரபாஸின் சித்தி பேசும்போது, ‘வெகுவிரைவில் பிரபாஸ் திருமணம் நடக்கும்’ என்றார்.
ஆனால், மணப்பெண் யார் என்று அவர் சொல்லாமல் மறைத்துவிட்டார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ‘கேம் சேஞ்சர்’ ஹீரோ ராம் சரண், நிகழ்ச்சியை நடத்தி வரும் தெலுங்கு முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா கேட்ட கேள்விக்கு அளித்துள்ள பதில் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, ‘பிரபாஸின் திருமணம் குறித்து உங்களுக்கு தெரிந்த உண்மையை சொல்லுங்கள்’ என்று அவர் கேட்க, அதற்கு பதிலளித்த ராம் சரண், ‘பிரபாஸ் திருமணம் விரைவில் நடக்கும்.
அவரது மனைவி ஆந்திராவில் மேற்கு கோதாவரி நகருக்கு அருகிலுள்ள கானபவரம் என்ற ஊரை சேர்ந்தவராக இருப்பார்’ என்றார். பிரபாஸின் சித்தி சொன்னதை வைத்தும், ராம் சரண் சொல்லியிருப்பதை வைத்தும் பார்க்கும்போது, வெகுவிரைவில் பிரபாஸ் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. ராம் சரண் அளித்த தகவலால் பிரபாஸின் ரசிகர்கள் அதிக உற்சாகம் அடைந்துள்ளனர். இதையடுத்து, பல வருடங்களாக திரையுலகினரால் பேசப்பட்டு வந்த பிரபாஸ், அனுஷ்கா திருமண தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
