×

விடுமுறை நாளில் தோழியுடன் விளையாட சென்றபோது பிரபல அடுக்குமாடி குடியிருப்பின் நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுமி பலி

அம்பத்தூர்: அம்பத்தூரில் உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பின் நீச்சல் குளத்தில் தோழியுடன் குளித்த 8 வயது சிறுமி, நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. அம்பத்தூர் பானு நகரை சேர்ந்தவர் பாலாஜி (34). பட்டரைவாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கண்மணி (32). தம்பதியின் மகள் தனன்யா (8), அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தாள். கண்மணி தினசரி காலை தனது மகள் தனன்யாவை பள்ளிக்கு அழைத்து செல்வதும், மாலையில் வீட்டிற்கு அழைத்து வருவதும் வழக்கம். அப்போது, தனன்யாவுடன் படிக்கும் சக மாணவி கனுஷ்யாவின் தாய் சிந்துஜாவுடன் (31) கண்மணிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். இந்நிலையில், விடுமுறை நாளான நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு கண்மணியை செல்போனில் தொடர்பு கொண்ட சிந்துஜா, ‘‘உங்களது மகளுடன் இன்று எங்களது வீட்டிற்கு வாருங்கள். இங்கு நீச்சல் குளம், விளையாட்டு பூங்கா உள்ளட்டவை உள்ளதால், குழந்தைகள் ஜாலியாக விளையாடுவார்கள்,’’ என அழைத்துள்ளார். அதன்படி, கண்மணி தனது மகள் தனன்யாவை அழைத்துக்கொண்டு அம்பத்தூர் கருக்கு மெயின் ரோட்டில் உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சிந்துஜா வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் அங்குள்ள நீச்சல் குளத்தில் சிந்துஜா, அவரது மகள் கனுஷ்யா, தனன்யா மற்றொரு சிறுவன் ஆகியோர் குளித்துக் கொண்டிருந்தனர். கண்மணி அருகில் உள்ள பூங்காவில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாதவிதமாக தனன்யா நீரில் மூழ்கினாள். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கண்மணி மற்றும் சிந்துஜா, உடனடியாக அவளை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்த டாக்டர்கள், மேல் சிசிச்சைக்காக வானகரத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார், சிறுமியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது….

The post விடுமுறை நாளில் தோழியுடன் விளையாட சென்றபோது பிரபல அடுக்குமாடி குடியிருப்பின் நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுமி பலி appeared first on Dinakaran.

Tags : Ambatur ,
× RELATED அம்பத்தூர்-புழல் நெடுஞ்சாலையில்...