×

அம்பத்தூர்-புழல் நெடுஞ்சாலையில் திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்து: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

புழல்: அம்பத்தூர்- புழல் மாநில நெடுஞ்சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் மற்றும் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வடமாநில லாரிகளால் அடிக்கடி விபத்து ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அம்பத்தூரில் இருந்து புழல் செல்லும் மாநில நெடுஞ்சாலை, புழல் மத்திய சிறைச்சாலை பெண்கள் பணியாற்றும் பெட்ரோல் பங்க் அருகே சாலையோரங்களில் வடமாநில லாரிகள் நிறுத்தி வைப்பதினாலும், சாலையின் மைய பகுதிகளிலும், பெட்ரோல் பங்க் உள்ளேயும் மாடுகள் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகளும், குறிப்பாக பெட்ரோல் போட வரும் பொதுமக்களும் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே, சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் மற்றும் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வடமாநில லாரிகளை நிறுத்தாமல் இருப்பதற்கு, போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை சிறைபிடித்து மாட்டு உரிமையாளரின் மீது அபராதம் விதிக்க வேண்டும் என மாதவரம் மண்டல மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறுகையில், அம்பத்தூர் – புழல் மாநில நெடுஞ்சாலையில் அம்பத்தூர், கள்ளிகுப்பம், சண்முகபுரம், பாரதிதாசன் நகர், சூரப்பட்டு, செந்தில் நகர், சிதம்பரம் நகர், மத்திய சிறைச்சாலை, பெட்ரோல் பங்க், புழல் கேம்ப் பகுதி வரை சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவதால், வாகன ஓட்டிகள் மாடுகள் மீது மோதி அடிக்கடி விபத்துக்களில் சிக்குகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.

மேலும், சிறைச்சாலை சுற்றுசுவர் அருகே வடமாநில லாரிகள் கட்டணமில்லாத பார்க்கிங் ஆக பயன்படுத்தி வருவதனால், சாலையை கடந்து செல்ல சிரமப்பட்டு வருகிறோம். எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாதவரம் போக்குவரத்து போலீசார் மற்றும் மாதவரம் மண்டல மாநகராட்சி அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுத்து சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வடமாநில லாரிகளை அப்புறப்படுத்தியும், சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்தும் விபத்தில்லா பகுதியாக மாற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post அம்பத்தூர்-புழல் நெடுஞ்சாலையில் திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்து: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Ambatur-Bughal highway ,Ambattoor-Pulhal highway ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…