×

பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் கடும் பனிமூட்டம்-பாதுகாப்பாக பயணிக்க கலெக்டர் அறிவுறுத்தல்

ஏற்காடு : பருவநிலை மாற்றம் காரணமாக, ஏற்காட்டில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால், மலைப்பாதையில் சுற்றுலா பயணிகள், மிகுந்த கவனத்துடன் பயணம் செய்ய வேண்டும் என சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் கேட்டுக் கொண்டுள்ளார்.சேலம் மாவட்டத்தில், ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான ஏற்காடு அமைந்துள்ளது. இங்குள்ள அண்ணா பூங்கா, மான் பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ட்ஸ் சீட், பக்கோடா பாயிண்ட், பழமை வாய்ந்த சேர்வராயன் மலைக்கோயில், தலைச்சோலை அண்ணாமலையார் கோயில் உள்ளிட்டவற்றை கண்டு களிக்க, தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், கோடை சீசனின் போது, வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும், ஏற்காட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஏரியில், குடும்பத்தினருடன் படகு சவாரி செய்து மகிழ்கின்றனர். இதுதவிர, ஏற்காட்டில் அமைந்துள்ள கிள்ளியூர் நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. கொரோனா ஊரடங்கின் காரணமாக, ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அடியோடு சரிந்தது. தமிழக அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகளின் விளைவாக கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, 2 ஆண்டுகளுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் வருகை வழக்கம் போல் அதிகரித்தது.கடந்த மே மாத இறுதியில், கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டது. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிட்டுச் சென்றனர். பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதையடுத்து, வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. இதனிடையே, ஆகஸ்ட் மாதத்தில் விடுமுறை தினங்கள் அதிகளவில் வருவதால், ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. ஆனால், தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருவதன் காரணமாக, சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்த வண்ணம் உள்ளது. கடந்த 4ம் தேதி பெய்த தொடர் மழையால், நாகலூர், மரப்பாலம் ஆகிய பகுதிகளில், குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. மேலும், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால், போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது.இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஏற்காட்டில் இரவு நேரங்களில் கடும்குளிர் வீசுகிறது. பகல் நேரங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடும் பனிமூட்டம் நிலவுகிறது. பிற்பகல் 2 மணிக்கே, 10 அடி தொலைவில் எதிரே வரும் வாகனம் கூட தெரியாத அளவுக்கு சாலையில் பனிமூட்டம் சூழ்ந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். பனிமுட்டம் காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாலை 4 மணிக்கே மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை உள்ளது. இதனிடையே, வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், ஏற்காடு மலைப்பாதையில் ஏறும் போதும், மீண்டும் கீழே இறங்கும் போதும், மிகுந்த கவனத்துடன் பயணிக்க வேண்டும் என சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஏற்காட்டில் பருவநிலை மாற்றம் காரணமாக, அவ்வப்போது மழை பெய்வதோடு, கடும் பனிமூட்டமும் நிலவுகிறது. சாலையை மறைக்கும் அளவுக்கு பனிமூட்டம் காணப்படுவதால், ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் பயணிக்க வேண்டும். விடுமுறை நாளான நேற்று(ஞாயிற்றுக்கிழமை) பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் மலைப்பாதை வழியாக கீழே இறங்குவதை தவிர்த்து, நாளை(இன்று) காலையில் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் தடுக்கலாம். இவ்வாறு கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார். …

The post பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் கடும் பனிமூட்டம்-பாதுகாப்பாக பயணிக்க கலெக்டர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Accept Mountain ,
× RELATED திருவாரூர் அருகே பண்ணை வயலில்...